நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் எவ்வளவு என்று தெரிந்துக் கொள்வதற்காக அன்றாடச் செய்திப் பார்ப்பது காவிரிப்படுகை உழவர்களின் வழக்கம். ஆனால் இன்று உழவர்களின் சாவு எண்ணிக்கையைத் தெரிந்துக்கொள்ளச் செய்தியை பார்க்கும் அவலநிலை. வயல்கள் நீரின்றிக் காய்ந்தாலும், உழுகுடிகளின் கண்கள் நீரால் நிரம்பி வழிகின்றன. ஒரு நெடிய உறக்கத்துக்குப் பிறகு மாநில அரசு விழித்துக்கொண்டு பாதிப்பு பற்றி ஆராய உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அதற்குள் இன்னும் எத்தனை பலி காத்திருக்கிறதோ!

குறுவை சாகுபடிக்கான நீரை ஆண்டுதோறும் ஜூன் 12ந்தேதி திறந்து விடுவது வழக்கம். ஒருவேளை இது தள்ளிப்போய் ஜூன் 20க்கு பிறகு திறக்கப்பட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் குறுவை அறுவடையில் ஒரு விழுக்காடு குறையும் என்பது உழவர்களின் பட்டறிவு. குறுவை ஏற்கனவே கனவாக மாறிய நிலையில் வடகிழக்கு பருவமழையை நம்பிய சம்பா சாகுபடியும் இந்தாண்டில் காலி. மேட்டூர் நீர் இல்லை, பருவமழை இல்லை, நிலத்தடி நீரும் இல்லை என்கிற நிலை. இனி உழவர்களின் எதிர்காலம் என்ன? இழப்பீட்டு தொகையும், காப்பீட்டு தொகையும் இந்தக் கார்ப்பரேட் ஆட்சி காலத்தில் இனி எத்தனை காலத்துக்குத் தொடரும்?

காவிரி நீர் கிடைக்காமல் போனதின் அரசியல் காரணங்கள் ஒருபுறமிருக்க, இந்நிலைமைக்கான சூழலியல் காரணங்களையும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்துக்கு நாம் வந்திருக்கிறோம். இவை நம் முன்னோர்கள் அறிந்த செய்திதான். ஆனால் நாம் அதைக் கைப்பற்றிக்கொள்ளத் தவறிவிட்டோம். காவிரிப்படுகை வேளாண்மை பொய்த்துப் போவதற்கு மொத்தம் மூன்று காரணிகள் உள்ளன. முதலாவது மேட்டூர் அணையில் நீர் இல்லாமை, இரண்டாவது பருவமழை பொய்த்தல், மூன்றாவது நிலத்தடி நீர் குறைதல் அல்லது உப்பாதல். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இம்மூன்றுமே சூழலோடு தொடர்புள்ளவை என்பதை அறியலாம்.

முதலில் காவிரிப்படுகை மண்ணின் தன்மையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும். குறுவைக்கு மேட்டூர் அணை திறந்த 15 நாளில் முன்பு இப்படுகையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துவிடும். வயலில் பாய்ச்சப்படும் நீர் வழியாக இது உயராது. மாறாக வாய்க்கால்கள் வழியாகத்தான் நீர் இறங்கி நிலத்தடி நீர் உயரும். வயலின் மேலேயுள்ள உழுத மண்ணுக்கும், அடியிலுள்ள ஊற்று மண்ணுக்கும் இடையே களிமண் ஒரு தகடு போல எங்கும் பரவியுள்ளது. இதை ஊடுருவி அவ்வளவு விரைவாக நீர் கீழே இறங்க முடியாது. ஆனால் படுகை மாவட்டங்களில் குருதி நாளங்களைப் போல எங்கும் நெருக்கமாகப் பின்னி பரவியுள்ள வாய்க்கால்களின் அடிப்பகுதி மணற்பாங்காக இருப்பதால் நீர் கீழே இறங்கும். இதற்கும் நிலத்தடியே உள்ள ஊற்றுமண் படுகைக்கும் தொடர்பு இருந்தது. எனவே நிலத்தடி நீர்மட்டம் 15 நாளில் உயர்ந்து இந்நிலமெங்கும் நிரம்பும்.

1970களின் தொடக்கத்தில் குறுவைக் காலத்தில் மேட்டூர் அணை திறந்தபின் நாலரை மாதங்கள் வரை கல்லணையிலிருந்து தஞ்சை காவிரிப்படுகைப் பகுதி பாசனத்துக்கு அனுப்பப்பட்ட நீரின் அளவு 20,000 கோடி கன அடியாகும். இதில் அய்.நா. வல்லுநர்களின் அறிவியல் ஆய்வின் அடிப்படையில் கணக்கிட்ட போது பயிர்களின் தேவைக்காக மட்டும் வயல்களில் கட்ட வேண்டிய இன்றியமையாத நீரின் அளவு 11,000 கோடி கன அடி. மீதி 9000 கோடி கன அடி நீர் வாய்க்கால் படுகைகளின் வழி ஊற்றுமண் பகுதிக்கு இறங்கி நிலத்தடி நீராக மாறிவிடும் என்று விவரித்துள்ளார் பொதுப்பணித்துறை மேனாள் தலைமைப் பொறியாளராக இருந்த பா. நமசிவாயம் அவர்கள்.

ஆனால் இன்று நீர்வரத்தும் இல்லை. வாய்க்கால்களில் மணலும் இல்லை. ஆயினும் நிலத்தடி நீர் ஊறுவதற்கு இயற்கை இன்னும் தம் பங்கை அளித்து வருகிறது. குறுவைக்கு மேட்டூர் நீர் கிடைக்காத நிலையில் வசதியுள்ள உழவர்கள் முழுக்க நிலத்தடி நீரை பயன்படுத்த, வடகிழக்கு பருவமழையும் பொய்த்த நிலையில் நிலத்தடி நீர் வெகு ஆழத்துக்குள் ஒளிந்துக்கொண்டுவிட்டது. வேளாண்மையும் பொய்த்துவிட்டது. வரும் கோடையில் வரலாற்றிலேயே முதன்முறையாகக் காவிரிப்படுகை மாவட்டம் பேரளவிலான நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

தமிழகத்துக்கு நான்கு மழைப் பருவங்கள் இருந்தன. தென்மேற்கு பருவமழை (32%), வடகிழக்கு பருவமழை (47%), குளிர்கால மழை (5%), கோடை மழை (15%). வடஇந்திய பகுதிகளில் ஏறக்குறைய கோடையிலேயே மழைக்கிடைக்கும். அதையொட்டியே குளிர்க்காலமும் வந்துவிடும். எனவே மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். ஆனால் தமிழகத்தில் மழைக்காலமும் குளிர்க்காலமும் ஒன்று சேர்ந்து முடிந்துவிடும். எனவே அதற்குப் பின்னால் மண்ணில் ஈரப்பதம் இருக்காது. இந்நிலையில் ஜனவரி, பிப்ரவரியில் கிடைத்துவந்த குளிர்கால மழை தாளடி சாகுபடிக்கு உதவியது. இன்று குளிர்காலமழை முற்றிலும் மறைந்துவிட, கோடை மழையும் குறைந்துவிட்டது. தென்மேற்கு பருவமழை குறைந்து போனதற்கு மேற்கு தொடர்ச்சிமலைக் காடுகளின் அழிவும் ஒரு காரணம் என்பதை மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். கர்நாடகத்துக் காப்பித் தோட்டங்களும், தமிழகத்து தேயிலைத் தோட்டங்களும் நம் நீரை திருடிவிட்டன. 60 நாட்கள் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழையும் கூட 15 நாட்களிலேயே அடித்துப் பெய்ந்துவிடுவதோடு அளவும் குறைந்துவிட்டது. இதற்கான காரணங்கள் என்ன?

இதில் மிக முதன்மையானது பருவநிலை மாற்றம் ஆகும். இதை ஏதோ நமக்குத் தொடர்பு இல்லாத செய்தி என்று இனி கடந்துவிட முடியாது. வரும் காலத்தில் வேளாண்மைக்கு அடிப்படையான பருவமழையைத் தீர்மானிக்கப் போவது இதுதான். அண்ணாமலை பல்கலைக்கழகப் பருவநிலை மாற்றம் மற்றும் தகவமைப்பு ஆய்வு நடுவத்தின் அறிக்கையின்படி 2010 – 2040 காலப்பகுதியில் காவிரிப்படுகை மாவட்டத்தில் மேலும் 6-7 விழுக்காடு மழைக் குறையும் எனத் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி வெப்பநிலையும் ஒரு பாகை செல்சியஸ் அளவு உயருமாம். இது சுருக்கமாகத் தெரிவிக்கும் செய்தி என்னவெனில் இப்பகுதி நீரின்றி அமையப் போகிறது என்பதைதான். இந்தச் செய்திகள் எல்லாம் அறியாதவர்களாகவே பெரும்பாலான நம் உழவர்கள் இருக்கிறார்கள். ஆற்றில் நீர் வரும் அல்லது மழை பெய்யும் அல்லது நிலத்தடி நீர் என்றும் இருக்கும் என்பதெல்லாம் இனி கற்பனைதான் என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். எனவே இனி உழவர்களைக் காக்கும் உரையாடல்களில் சூழலியல் சார்ந்த சிந்தனைகளும் இடம்பெற வேண்டியது அவசியமாகும்

கர்நாடகத்திலிருந்து வரவேண்டிய நீர் வராமல் போனதன் அரசியலில் தேசிய ஒற்றுமை என்பது கேவலப்பட்டுக் கிடக்கிறது. காவிரிப்படுகையை எரிப்பொருள் கிடங்காக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கமுக்கத் திட்ட அரசியலும் இதில் ஒளிந்திருப்பதை நாம் அறிவோம். நம் அரசியல் கட்சிகளுக்கோ கார்ப்பரேட் கழிவறைகளை யார் கழுவிக்கொடுப்பது என்பதில்தான் போட்டியே. இதில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த அரசுகளுக்கு அக்கழிவறைகளைப் பாதுகாப்பதுதான் முதன்மை பணி. இதில் இவர்கள் ஏன் உழவர்களைக் காக்க போகிறார்கள்?. வேளாண்மையை முற்றிலும் அழிக்கக் காத்திருக்கும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவான இந்த அமைப்பு முறையை (System), சூழலியல் அரசியல் பார்வையோடு மாற்றியமைப்பதே உழவினைத் தொழுதுண்டு பின் செல்லும் நம் அனைவரின் முதல் கடமை.

ஒளிப்படம்: சூ. சிவராமன்

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.