கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி
கிருபா முனுசாமி

“ஞானம் நுரைக்கும் போத்தல்” கவிதை தொகுப்பின் முதல் பதிப்பு 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. வெளிவந்த மூன்று மாதங்களிலேயே அத்தொகுப்பின் அனைத்து பிரதிகளும் தீர்ந்துவிட்டமையால் கவிஞர் மாமா குமரகுருபரன் அவர்கள் டிஸ்கவரி புக் பேலஸின் “படி வெளியீடு” வாயிலாக கொண்டுவர விரும்பி திரு.வேடியப்பன் அவர்களை அழைத்து இது தொடர்பாக பேசிவந்ததை அடுத்து “ஞானம் நுரைக்கும் போத்தல்” கவிதை தொகுப்பின் இரண்டாம் பதிப்பு 04.01.2017 அன்று வெளியிடப்பட்டது.

எங்கள் குடும்பத்தின் வழக்கமான எந்தவொரு நிகழ்வைப் போலவே, இந்நிகழ்வும் அழைக்கப்பட்டவர்களுக்கானதாகவே இருந்தது.

ஞானம் நுரைக்கும் போத்தல் கவிதை தொகுப்பு குறித்து ஏற்கனவே நிறைய பேசிவிட்டமையால் இந்நிகழ்வை ஒரு கவிதை வாசிப்பு நிகழ்ச்சியாகவே வடிவமைத்திருந்தோம். என்னதான் வரையறைகளை வகுத்தாலும் பங்கேற்றவர்களால், நான் உட்பட, எங்கள் கொண்டாட்ட நாயகனுடனான நினைவுகள் குறித்து பேசாமல் இருக்க முடியவில்லை.

கவிதை வாசிப்பு, நினைவுகள் பகிர்வு என்று இருந்த நிகழ்ச்சியில், பீத்தோவனின் இசையில், இருள் சூழ்ந்த அறையில் சாரு நிவேதிதா மீது மட்டும் நிலவொளியை ஒத்த வெளிச்சம் பாய, அவர் குமரகுருபரன் மாமாவின் கவிதைகளை வாசிக்க கேட்க நேர்வதென்பது ஒரு வரம். அத்தனை சிலாகிப்பான கவிதை கேட்பு அனுபவத்தை அனைவருக்கும் வழங்கிய சாருவுக்கு எண்ணிலடங்கா நன்றிகள்!

தமிழச்சி அக்காவின் உரை என்பது இயல்பாகவே கவிதைகளோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும். அதிலும், மனதிற்கு நெருக்கமானவரின் கவிதையை தமிழச்சி அக்கா வாசித்தால் கேட்கவா வேண்டும்! கம்யூனிஸ்ட் கவிதையால் காதல் பெருகுவது எங்கள் மாமாவின் தனித்துவம். அதை தமிழச்சி அக்கா வாசிக்க கேட்கப்பெற்றதோ இன்பங்களுள் பேரின்பம்.

பலரும் அவருடன் பழகியதை, அவர் கவிதையை பேச, திரு.ஆனந்த் அவர்களோ தமிழும், கவிதையும், காதலும், கொண்டாட்டமும் இருக்கும் இடங்களிலெல்லாம் குமரகுருபரன் மாமா நிறைந்திருக்கிறார் என்று இயல்பாக பேச அரங்கமே நெகிழ்ச்சியில் சிலிர்த்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் அவர்களுக்கு பிடித்த கவிதையை வாசிக்க, நானும் என் பங்கிற்கு எனக்கு பிடித்த வரிகளையும், கவிதைகளையும் இடையிடையே வாசித்து என் நீண்ட நாள் ஆசையை தீர்த்துக்கொண்டேன்.

எங்கள் மாமாவிற்காகவே நேரத்தை ஒதுக்கி, வேலைநாள் என்றும் பாராது, சிரமத்திற்கிடையேயும் கூட மிகுந்த அன்போடும், மகிழ்ச்சியோடும் இந்நிகழ்வோடு தங்களை ஒரு பகுதியாக்கிக்கொண்ட அனைவருக்கும் அனைவருக்கும் அன்பும், நன்றியும்!

நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து வெளியிட்ட ஸ்ருதி தொலைக்காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

இக்கவிதை தொகுப்பின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டு, நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த டிஸ்கவரி புக் பேலஸின் “படி வெளியீடு” பதிப்பாளர் திரு. வேடியப்பன் அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்!

இத்தனை சிறப்பானதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கவிதா அக்காவிற்கு அளவில்லா அன்பும், பாராட்டுக்களும்!

ஓம் பகார்டி!

கிருபா முனுசாமி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.