அந்நிய செலாவணி மோசடி வழக்கில், அதிமுக-வின் முன்னாள் எம்.பி.யும், தற்போதைய அதிமுக பொதுச் செயலாளரான வி.கே.சசிகலாவின் அக்காள் மகனுமான டி.டி.வி. தினகரனுக்கு அமலாக்கத்துறை விதித்த ரூ. 28 கோடி அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 1995-96ஆம் ஆண்டுகளில், டிடிவி தினகரனின் வங்கிக் கணக்குகளில் வெளிநாடுகளில் இருந்து பெரும்தொகை டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அப்போது, தான் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுள்ள நிலையில், தனது கணக்குகளில் பெரும் தொகை டெபாசிட் ஆனது பற்றி கேள்வி எழுப்பவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்று தினகரன் வாதிட்டார். ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்ட அமலாக்கத்துறை, அவர் மீது1996-ஆம் ஆண்டு அந்நிய செலாவணிமோசடி (ஃபெரா) சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்தது. மேலும், இவ் வழக்குகளின் விசாரணை முடிவில், தினகரனுக்கு ரூ. 28 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறையிடம் தினகரன் மேல்முறையீடு செய்தார். ஆனால், தினகரனுக்குரூ.28 கோடி அபராதம் விதித்தது சரிதான்என்று மத்திய அமலாக்கத்துறையும் கூறிவிட்டது. இதையடுத்தே, சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் மேல் முறையீடு செய்தார்.

தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்து வந்தது. இந்நிலையில், வெள்ளியன்று பிற்பகல் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப் பட்டது. அப்போது, டி.டி.வி. தினகரனுக்கு அமலாக்கப்பிரிவு ரூ. 28 கோடிஅபராதம் விதித்தது செல்லும் என்று கூறி, தினகரனின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.வி.கே. சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன், குறிப்பிட்ட காலம் வரை அதிமுக-வின் அதிகாரமையங்களில் ஒருவராக விளங்கியவர். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

கடந்த 2011-ஆம் ஆண்டு, சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் தன்னிடமிருந்து விலக்கி விட்டதாக ஜெயலலிதா அறிவிக்கும் வரை, அவர் மிகுந்த செல்வாக்குடனேயே வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 28 கோடி அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.தினகரனை, திவாலானவராக அறிவிக்கக் கோரிய மற்றொரு வழக்கில் ஜனவரி 31-ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது.

தீக்கதிர் செய்தி