மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழுவின் அதிகாரப்பூர்வ வார ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசி’யில், ‘THINKING TOGETHER’ என்ற தலைப்பில் கேள்வி - பதில் வெளியாகி வருகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும்,பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ ஏட்டின் ஆசிரியருமான பிரகாஷ் காரத் பதிலளிக்கிறார். சமீபத்தில் கேரளத்தில் மாவோயிஸ்டுகள் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த கேள்விக்கு பிரகாஷ் காரத் பதிலளித்துள்ளார்.

கேள்வி: இரண்டு மாவோயிஸ்டுகள் காவல்துறையின ரால் கேரளா வனப்பகுதியில் சமீபத்தில் கொல்லப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரும் வேறு சில குடியுரிமை குழுக்களும் இது போலி என்கவுண்ட்டர் என கண்டித்துள்ளனர். ஏனைய மாநிலங்களைப் போலவே இடது ஜனநாயக அரசாங்கத்தின் அணுகுமுறையும் உள்ளது என குற்றம்சாட்டப்படுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு என்ன என்பதை விளக்க முடியுமா?

-பி.கே. ராஜன்/கொச்சி

PRAKASH_KARAT

பதில்: கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் வனப்பகுதிகள் சந்திக்கும் பகுதியில் சில மாவோயிஸ்ட் குழுக்கள் பல நாட்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில வனத்துறை அலுவலகங்களை அவர்கள் தாக்கியுள்ளனர். ஒரு தனியார் தங்கும் விடுதியை சூறையடினர். மேலும் வயநாடு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் அரசாங்க அலுவலர்களை மிரட்டுவதும் தொடர்ந்துள்ளது. மாவோயிஸ்டுகளின் இந்த செயல்கள் காரணமாக காவல்துறையினர் அவர்களை தேடி வந்தனர். இப்பகுதியில் எந்த ஒரு மாவோயிஸ்டும் இதுவரை கொல்லப்பட்டது இல்லை.

மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குப்புராஜுவும் இன்னொரு ஊழியர் அஜிதாவும்தான் முதல் முறையாக தற்பொழுது சுடப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மேற்கு தொடர்ச்சி மலையில் நீலாம்பூர் எனும் இடத்தில் நிகழ்ந்துள்ளது.மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த இடத்தை காவல் துறையினர் கண்டுபிடித்த பிறகு நடந்த துப்பாக்கி சூட்டில் அவர்கள் இறந்ததாக காவல்துறை தரப்பு கூறுகிறது. மாவோயிஸ்டுகள் ஒரு அதிதீவிர இடது சீர்குலைவுவாதிகள் குழு. அவர்கள் தமது அரசியல் இலக்குகளை அடைய ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். வேறு சில நக்சலைட் குழுக்கள் போல அல்லாமல் மாவோயிஸ்டுகள் தமது எதிரிகள் என எவரை கருதுகின்றனரோ அவர்கள் மீது ஆயுத தாக்குதல்களை ஏவிவிடும் அணுகுமுறையை கொண்டுள்ளனர்.

காலப்போக்கில் மாவோயிஸ்டுகளின் தவறான அரசியல் கொள்கைகள் இடதுசாரி கட்சிகளின் ஊழியர்களை கொல்கின்ற அளவுக்கு தரம்தாழ்ந்துவிட்டன. மாவோயிஸ்டுகளின் ஆயுத கும்பல் தாக்குதலுக்கு ஒன்றுபட்ட ஆந்திரா, ஒடிசா, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பல ஊழியர்களை மார்க்சிஸ்ட் கட்சி இழந்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் ஆளும் வர்க்கங்களின் கொலையாட்களாக மாவோயிஸ்டுகள் செயல்பட்டதற்கு மோசமான உதாரணம் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை அவர்கள் படுகொலை செய்த சம்பவங்கள் 2009 முதல் 2011 வரை திரிணாமுல் காங்கிரசுடன் இணைந்து கொண்டு தொடர் கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

200க்கும் அதிகமான மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும் ஆதரவாளர்களும் மாவோயிஸ்ட் கும்பல்களால் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகள் மக்களுக்காக போராடுபவர்கள் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் கூறுகிறார். இதனை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. இந்த ஆயுதக் கும்பல் மக்களுக்காக போராடுபவர்கள் எனும் கருத்தை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசியல் களத்திலும் சித்தாந்த களத்திலும் உறுதியாக போராடுவது எனவும் அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது எனவும் மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.

ஒரு வலுவான மார்க்சிஸ்ட் கட்சி இருப்பதாலும் வலுவான இடதுசாரி சக்தி இருப்பதாலும் கேரளாவில் குறிப்பிடும்படியான எந்த முன்னேற்றத்தையும் மாவோயிஸ்டுகள் சாதிக்க இயலவில்லை.எனினும் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு இயந்திரம் போலி என்கவுண்ட்டர்களை நடத்தி அவர்களை கொல்வதை கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டங்கள் எனும் பெயரில் ஒரு ஆழமான வலுவான அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. உண்மையில் இந்த அடக்குமுறைகள் அப்பாவி பழங்குடி மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. இதனை கட்சி எதிர்க்கிறது.

நீலாம்பூரில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது தொடர்பாக இடது ஜனநாயக அரசாங்கம் நீதிவிசாரணைக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளது. என்கவுண்ட்டர் மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசேட காவல்துறை பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைகளின் அடிப்படையில் உண்மை என்ன என்பதை சரிபார்க்க முடியும். விசாரணை முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே இந்த நிகழ்வின் தன்மை குறித்து முன்கூட்டிய ஒரு முடிவுக்கு வருவதை மார்க்சிஸ்ட் கட்சி விரும்பவில்லை.

தீக்கதிர் செய்தி
கேள்வி/பதில் மொழியாக்கம் : அ.அன்வர் உசேன்