விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், பெரியபாபுசமுத்திரம் காலனியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் – லட்சுமி. இவர்களின் இளைய மகன் சதீஷ் (23). இவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த புதன்கிழமையன்று சதீசை இரவு 10 மணியளவில் ரசபுத்திரப்பாளையம் ஏரிப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அடையாளம் தெரியாத 3 பேர் அடித்து மின்கம்பத்தில் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரியூர் தனியார் மருத்துவமனையில் கிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து மேல்சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர் அங்கு புதுச்சேரி மாஜிஸ்ட் டிரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். வெள்ளியன்று இரவு சிகிச்சை பலனின்றி சதீஷ் இறந்துவிட்டார். டிசம்பர் 31 இரவு புத் தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் உண்டான முன்விரோதத்தின் காரணமாக இக்கொலைச் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கண்டமங்கலம் காவல்துறை குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலில் புகாரையே வாங்க மறுத்துள்ளனர். பின்னர் ஏராளமானோர் திரண்டு நிர்ப்பந்தித்த பிறகே சதீஷ் மின்கம்பத்தில் ஏறியதால் ஏற்பட்ட விபத்து என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள் மின்விபத்து நடைபெறவே இல்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

கண்டமங்கலம் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட காவலர்கள் சாதிய பாகுபாட்டுடன் நடப்பது நன்கு புலனாகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் (வடக்கு) மாவட்டக்குழு கூறியுள்ளது. சதீஷ் இறந்த பிறகு கொலை வழக்காக மாற்றாமல் இ.த.ச. பிரிவு 174ன் கீழ் சந்தேக மரணம் என மாற்றியுள்ளனர். இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் மாவட்டக்குழு கூறியுள்ளது. “விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், காவல் கண்காணிப்பாளரும் தலையிட்டு உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படும் கண்டமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சதீஷ் குடும்பத்தினருக்கும் குடியிருப்புப் பகுதிக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி தீண்டாமைக் கொடுமையால் கொல்லப்பட்ட சதீஷ் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. கலியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தீக்கதிர் செய்தி