agaramudalvan
அகரமுதல்வன்

அகரமுதல்வன்

ஒரு மனிதனின் வாழ்க்கை கண்விழிக்கும் நேரத்தில் அவனோடு வேட்கை ஒட்டிவிடுகிறது. அவன் தன்னையல்லாத எல்லோரையும் நேசிக்கும் ஒரு மகத்துவத்தை அடைந்து விடுகிறான். அலைக்கழிப்பும் வறுமையும் கனவுகளும் கலக்கங்களும் செருப்பில்லாத அவனின் காலடித்தடங்களை சுவடு எடுத்தபடியே பின்தொடர்கிறது.

வாழ்வு ஒரு வேட்டை நாய். நம் வாழ்தல் அதற்கொரு இரை. அதிலிருந்து தப்பியவர் யாருமிலர். எக்கச்சக்கமான குருவிகள் வயலுக்குள் இருந்து ஒரேநேரத்தில் சிறகு விரித்து மேலெழும் காட்சியைப் போல கார்த்திக் புகழேந்தியின் ஊருக்கு செல்லும் வழியெங்கும் சம்பவங்களின் அனுபவங்கள் எழும்பிப்பறக்கின்றன. ஆனால் அவைகளுக்கு சிறகுகள் மட்டுமல்ல சிலுவைகளும் உண்டு.

கார்த்திக் புகழேந்தியை சமகால தமிழ்இலக்கியப்பரப்பில் அறியாதவர் இருக்கமாட்டார்கள். அவரின் சிறுகதைகள் தனது பிரதேசத்தன்மையை இழக்காத ஓர்மம் கொண்டவை. அந்தவகையில் நான் அவரைக் கொண்டாடுவேன். அவரைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்திருப்பேன்.

பேனாவும் காகிதமும் கிடைத்துவிட்டால் எழுத்தாளனாய் ஆகிவிடலாம் என நம்புவர்கள் அதிகரித்திருக்கும் சூழலில் சமூகத்தில் எழுத்தாளனாய் அறியப்பட்டவரின் கடந்தகாலமே “ஊருக்கு செல்லும் வழியில் உலவிக்கொண்டிருக்கிறது.

கவிஞர் யுகபாரதி அவர்களின் “நடைவண்டி நாட்கள்” புத்தகத்தின் பக்கங்களை புரட்டிமுடிக்கிற போது நகரத்தின் பட்டினி வதைக்கும் வயலுக்குச் சொந்தமானவராய் யுகபாரதி இருந்தார். அது நகரத்தில் யுகபாரதி இருந்த வனவாசம். ஆனால் கார்த்திக்புகழேந்தியின் இந்த தொகுப்பு சற்று வித்தியசமான பாணியாலானது. அவர் கடந்தகாலங்களை எழுதவில்லை. அதன் நினைவில் தோய்கிறார். சொந்த ஊர்ப்புழுதியில் இருந்தும், டீசல் புகை நகரத்திலிருந்தும் குபு குபுவென கொப்பளிக்கிறது கார்த்திக் புகழேந்தியின் நினைவிட தோயும் கட்டுரைகள்.

உலகமயமாதலின் இறுக்கமான பிடியில் தகர்ந்துபோய்விட்ட கிராமங்களின் தனித்துவங்களை, உணவுப் பழக்கவழக்கங்களை, உறவுகளை, ஒட்டு மொத்தமாக இழந்துபோய்விட்ட நம் பாரம்பரியங்களை இப்போது நினைவுகளாய் ஆக்கிவிட்ட துயரத்திற்கு புகழின் சில கட்டுரைகள் சாட்சி.

அந்த ஆட்டுரல் தாத்தாவுக்கு தாத்தா காலத்தையது என்பாள் ஆச்சி. எட்டாள் சேர்ந்து தூக்கினால்தான் உண்டு. ஆட்டுரல் மட்டுமல்ல, திருகை, அம்மி, குழவி,கல்தொட்டி என்று தொகுப்பே வைக்கலாம். “அத்தனையும் ஒரே கல்லு. அதான் வெஞ்சனத்துக்கு அந்த ருசி” என்பாள். கல்லில் செய்த பண்டபாத்திரங்களுக்கும் மனுஷ ஜென்மத்துக்கும் காலகாலமாக அப்படி ஒரு உறவு. ஆதி மனுஷன் உணவுத்தேவைக்குத் தேர்ந்தெடுத்த முதல் ஆயுதமே கல் தானே.

தொகுப்பின் முதல் கட்டுரையில் உள்ள பந்தியிது. இன்றைக்கு அவையாவும் காணாமல்போய்விட்டன. ஆச்சி சொல்லும் தாத்தாவுக்கு தாத்தா காலத்தின் எச்சமாக இன்று எம்மிடம் இருப்பது தான் என்ன? புகழிடம் இருக்கும் வேதனை என்பது அரசியல்பூர்வமானது. அவரின் எழுத்துக்களில் பனைமட்டையின் கருக்கைப் போல அரசியல் கரையிலிருந்தாலும் அதற்குமொரு வினோதமான கூர்மையுண்டு. மண் வாசத்தை தனது எழுத்துவெளியின் பலமாகவும் பெருமையாக எண்ணுகிற கார்த்திக் புகழேந்தி கரிசல் இலக்கியத்தின் இன்றைய தலைமுறைக்கு பெருத்த நம்பிக்கைக்கு உரியவர்.

இந்த தொகுப்பின் மூலம் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் இன்னொரு வாழ்வை அவரின் வாசகர்கள் அறிந்துகொள்ள முடியும். இரக்கமற்ற காலத்தின் சக்கரங்களுக்குள் மாட்டுப்பட்டு வழியற்று முழிக்கும் எத்தனையோ மாந்தர்களை அவர் தரிசித்திருக்கிறார். ஊரிலிருந்து வேலைக்காக நகரங்களுக்கு இடம்பெயரும் ஒவ்வொரு கிராமத்தானுக்கும் ஏற்படுகிற துயரங்களில் ஒன்றை கிழக்கு கடற்கரைச் சாலையில் புகழேந்தி பார்க்கிற பொழுது பணத்தை எடுத்து நீட்டும் மாந்தநேயம். அது கிராமத்து மண்ணின் பண்பு.

மண்ணுக்கும் மனிதர்களின் பண்புகளுக்கும் ஒரு தொடர்பிருக்கு என்பதை நம்புபவன் நான். புகழேந்தி கரிசல் கதைசொல்லி. அவரின் மொழியே வாசகனுக்கு மாட்டுவண்டிகட்டி கோவிலுக்கு பயணிப்பது போலிருக்கும். பனைகளின் மீது பரவி குளங்களில் மினுங்கும் வெயிலில் நீந்துகிற மீன்கள் போல அவரிடமிருக்கும் சொலவடைகள் அபாரமானது.

புகழேந்தியிடம் கதைத்துக் கொண்டிருந்தால் ஆச்சியோ அப்புவோ நினைவுக்கு வந்துவிடுவார்கள். அது அவருக்கு வாழ்வளித்த கொடை. அப்படிப்பட்ட ஒரு கரிசல் மொழிப்புலத்தைக் கொண்டு குட்டிவீடாக தன் வாழ்வின் துளியைச் சொட்டியிருக்கிறார். கார்த்திக் புகழேந்தியோடு ஊருக்கு செல்லும் வழியில் நான் இணைகிறேன்.

அகரமுதல்வன், எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல்கள் ‘நன்றேது ? தீதேது? – ஆளுமைகளுடான உரையாடல்’ (மோக்லி வெளியீடு), ‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு- சிறுகதைத் தொகுப்பு (டிஸ்கவரி புக் பேலஸ்).