எங்கள் எம்டி Ramesh Rmr இல்லையேல் இந்த நூல் சாத்தியமாகி இருக்காது. 2013ம் ஆண்டு கோடையில் ஒருநாள் கைபேசியில் அழைத்தார். அப்போது அவர் தெற்காசிய சுற்றுப் பயணத்தில் இருந்தார்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சயாம் – பர்மா இடையில் ரயில் பாதை அமைக்க ஜப்பான் முற்பட்டதும், அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ்த் தொழிலாளர்கள் மரணமடைந்ததையும் குறித்து ஒரு தொடரை எழுதும்படி சொன்னார்.

இதை ஏற்று அதற்கான ஆராய்ச்சியில் இறங்கியபோது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதில் முதன்மையானது தமிழர்கள் இறந்தது குறித்த பதிவுகள் ஏதும் இல்லாதது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அனைத்து நூல்களிலும் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த போர்க் கைதிகள் மட்டுமே இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன. இந்த நிகழ்வு குறித்து எடுக்கப்பட ஹாலிவுட் படத்திலும் இவர்களே பிரதானமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

யோசிக்கும் திறன் படைத்த அனைவருக்குமே இதில் இருக்கும் அபத்தம் புரியும். ஏனெனில் 1939ம் ஆண்டில் தொழில்நுட்பங்கள் பெரிதாக வளரவில்லை. பணிகளை சுலபமாக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது புழக்கத்துக்கு வரவில்லை. மனித உழைப்பை மட்டுமே பயன்படுத்தி சாலைகளும், ரயில் பாதைகளும் அந்தக் காலகட்டங்களில் எல்லா நாடுகளிலும் அமைக்கப்பட்டன.

உடல் உழைப்பு சார்ந்த இந்த வேலைகள் ஆங்கிலேயர்களுக்கு அந்நியமானது. பொருளாதார மட்டத்தில் கீழ் நிலையில் இருக்கும் ஆங்கிலேயர்கள் கூட இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாற்றில் எங்குமே பதிவாகவில்லை. தப்பித்தவறி இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட சதவிகித அளவில் குறைவானவர்களே. மற்றபடி காலணி நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களே / மக்களே இக்காலத்தில் உடல் உழைப்பில் ஈடுபட பணிக்கப்பட்டார்கள்.

இதற்கு வலு சேர்க்கும் வகையில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சயாம், பர்மா, மலாய் நாடுகளை ஜப்பான் ஆக்கிரமித்த மறுநிமிடமே அந்தந்த நாடுகளில் வசித்து வந்த ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்களை சிறைப்பிடித்தது. இப்படி கைதான அனைவருமே தொழில்நுட்ப வல்லுனர்கள் அல்லது அலுவலகங்களில் உயர் பொறுப்பில் இருந்தவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் நிச்சயம் சுத்தியலால் மலைக்குன்றுகளை உடைத்திருக்க மாட்டார்கள். கோடரியால் மரங்களை வெட்டி இருக்க மாட்டார்கள். ஆற்றில் இறங்கி மரப்பாலங்களை அமைத்திருக்க மாட்டார்கள்.

எனில், இந்தப் பணிகளை எல்லாம் யார் செய்தது?

இதற்கான பதில்தான் இந்த நூல்.

சர்வநிச்சயமாக இது கற்பனைப் புனைவு அல்ல. நடந்த கொடூரத்தின் ரத்த சாட்சியங்கள். எதுவும் மிகைப்படுத்தப்படவில்லை. வேண்டுமானால் சம்பவங்களின் வீரியம் குறைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இதற்கான காரணம் கூட இந்த நூலை எழுதியவனின் போதாமைதான். வருங்காலத்தில் வேறு எழுத்தாளர் இதைவிட ரத்தமும் சதையுமான உயிர்ப் படைப்பை படைக்கலாம். படைக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நம் மூதாதையர்கள் அனுபவித்த வேதனை, ரணம், புரியும்.

சயாம் – பர்மா இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணிக்காக கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு உயிர் பிழைத்து வந்தவர்களின் அனுபவங்கள் / நேர்காணல்கள் ஏற்கனவே நூல்களாக வந்திருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து மலேசிய எழுத்தாளர்களான அ.ரெங்கசாமி, சண்முகம் உள்ளிட்டவர்கள் நாவல் எழுதியிருக்கிறார்கள். பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின் உரிய தகவல்களை திரட்டி சீ.அருண், அற்புதமான நூல் ஒன்றை படைத்திருக்கிறார்.

கோவையை சேர்ந்த ‘தமிழோசை’ பதிப்பகம் மேலே குறிப்பிடப்பட்ட இந்த நூல்களை எல்லாம் வெளியிட்டிருக்கிறது.

இவை அனைத்தின் தொகுப்பாக இந்த நூலை சொல்லலாம்.

ஆரம்ப அத்தியாயங்களில் இடம்பெற்றிருக்கும் ‘தாய்’(லாந்து) மொழிக்கான தமிழ் அர்த்தங்களை சொல்லி என்னை வழிநடத்தியவர் நண்பர் ‘மாயவரத்தான்’ கி.ரமேஷ்குமார்.

போலவே ரத்தம் தோய்ந்த இந்த வரலாற்று தொடருக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது சட்டென்று ‘உயிர்ப் பாதை’யை தந்தவர் ‘வண்ணத்திரை’ சினிமா வார இதழின் ஆசிரியரான நண்பர் யுவகிருஷ்ணா.

என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து என்னை எழுத வைப்பவர் எங்கள் எம்டி, திரு. ஆர்.எம்.ஆர். அவர் இல்லையேல் நானும் இல்லை. என் எழுத்துக்களும் இல்லை.

தொடர்ந்து உற்சாகப்படுத்தி என் எழுத்துக்கு உறுதுணையாக இருப்பவர் ‘குங்குமம்’ வார இதழின் முதன்மை ஆசிரியரான தி.முருகன்.

இவர்கள் அனைவருக்கும் என் அன்பு.

‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் இது தொடராக வெளிவந்தபோது உடனுக்குடன் படித்துவிட்டு பாராட்டிய வாசகர்களையும், ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தன் ஓவியம் வழியே உயிர் கொடுத்த நண்பர் அரஸையும் நன்றியுடன் இந்த இடத்தில் நினைத்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்
கே.என்.சிவராமன்

சூரியன் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ‘உயிர் பாதை’ நூலின் முன்னுரை இது.  விலை: ரூ.200/-

கே. என். சிவராமன், எழுத்தாளர்; பத்திரிகையாளர்.