பிரதமர் மோடியின் பல்வேறு காலகட்ட நிலைப்பாடுகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கும் ’BLUFF – MASTER …NOW IN DELHI’ எனும் ஆங்கில புத்தகம் கடந்த வாரம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதே புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

எழும்பூர் இக்சா அரங்கில் கடந்த 4ஆம் தேதி நடந்த நிகழ்வில், ஆங்கிலப் புத்தகத்தை பேராசிரியர் அ.மார்க்ஸ் வெளியிட, சென்னை பல்கலைக்கழக அரசியலறிவியல் துறை பேராசிரியர் இராமு மணிவண்ணன் பெற்றுக்கொண்டார்.

தமிழாக்கமான ‘பொய் – வேடங்களில் மன்னன்…இப்பொழுது தலைநகர் டெல்லியில்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள புத்தகத்தை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் வெளியிட, கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொண்டார்.

குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோதும் பிரதமர் பதவிக்கு வந்த பின்னரும் மோடி எனும் அரசியல்வாதி, எப்படியெல்லாம் முன்னுக்குப்பின் முரணாகப் பேசிவருகிறார்; ஜனநாயகத்துக்கு எதிராக, ஜனநாயக அமைப்புகளை சேதப்படுத்தும்வகையில் நடந்துகொள்கிறார் என்பதைப் பற்றி எடுத்துவைத்தார், இராமு மணிவண்ணன்.

நிகழ்ச்சியில் பேசிய அ.மா.,” காங்கிரசின் நிலைப்பாடுகளோடு நமக்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன; இருந்தபோதும் மோடியின் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். அளவுக்கு காங்கிரஸ் இயக்கத்தில் இரட்டைநிலையை, முரண்பட்ட நிலையைப் பார்க்கமுடியாது. சுதந்திரப் போராட்டத்துக்கு முன்பிருந்தே அவர்கள் இப்படித்தான் இருந்துவந்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இந்துத்துவ அபாயத்தின் இன்னொரு ஆபத்தான அம்சம், வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். போன்ற நாடுகடந்த எச்.எஸ்.எஸ். சக்திகளின் வேலைகள். நாடு முழுவதும் நடுத்தட்டு மக்கள் மத்தியிலான இந்துத்துவ சக்திகளின் செயல்பாடும் கவனத்துக்கு உரியது” என்று குறிப்பிட்டார்.

அ.மார்க்சின் இக்கருத்தை வழிமொழிந்த ஆய்வாளர் கஜேந்திரன், “ இந்தியாவுக்கு வெளியில் குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்க அரசுகளில், அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய அளவுக்கு அங்குள்ள வலதுசாரிகளுடன், பாசிச சக்திகளுடன் இந்துத்துவ சக்திகளின் உறவுநிலை இருக்கிறது. அவர்களின் வளர்ச்சியைத் திடீரென உருவாகிவிட்டதாக கருதிவிடமுடியாது. இன்னொரு அம்சம், வலதுசாரி சக்திகளுக்கும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உள்ள நெருக்கம் மிகமுக்கியமானது. இந்த இரண்டு நோக்கிலும் இந்தப் புத்தகத்தின் உருவாக்கம், வரவேற்கத்தக்கது” என்றார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதில் வழக்கமாக நடக்கும் முறைமைக்கு மாறாக, புதிய முயற்சியைச் செய்திருந்தது, சிறப்பு. ஒவ்வொரு பேச்சாளரும் பேசும் முன்னர் அவரின் விமர்சனப் பார்வையையும் பேசிமுடித்த பின்னர் அவர் வைத்த கருத்துகளையும் பற்றி பிரதமர் மோடி எப்படி எதிர்கொள்வார் எனும் கற்பனையில், மோடியின் முகமூடியுடன் தொகுப்புரையாற்றினார், தமிழ்ப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளரும் சிலம்பு பதிப்பகத்தின் நிறுவனருமான ஆனந்தராஜ்.

  • ஆதி ஆதன்