மகாலிங்கம் பொன்னுசாமி

மகாலிங்கம் பொன்னுசாமி
மகாலிங்கம் பொன்னுசாமி

பொங்கல் திருநாள் கட்டாய விடுமுறை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பலர் பல்வேறு தகவல்களை தெரிவித்துவருகின்றனர். விளக்கமாக பார்ப்போம்..
தமிழகத்தில் பணியாற்றிவரும் மத்தியரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு கட்டாய விடுமுறை, இவ்வளவு வரையறுக்கப்பட்ட விடுமுறைதான் அறிவிக்க வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. (அதாவது 14 (மத்தியரசு) +3 (மாநிலக்குழு) =17 நாட்கள் கட்டாயவிடுமுறை, மீதமுள்ளவை வரையறுக்கப்பட்ட விடுமுறை).

ஒவ்வொரு மாநிலத்திலும் விடுமுறையை முடிவு செய்ய மத்திய அரசு ஊழியர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழு செயல்படுகிறது. தமிழகத்தின் குழுவிற்கு மத்திய கலால் வரித்துறையின் தலைமை ஆணையர் தலைவராக செயல்படுகிறார். இவரது தலைமையிலான சுமார் 50 பேர் கொண்ட குழு கடந்த 2016 ஜூன் மாதம் 24 ஆம் தேதி கூடி, தமிழகத்தில் உள்ள மத்திய பணியாளர்களுக்கான விடுமுறையை முடிவு செய்தது. அதன்படி, பொங்கல் விடுமுறை நாளான சனிக்கிழமை என்பதால் வரையறுக்கப்பட்ட பட்டியலில் சேர்த்துவிட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு நாளை கட்டாய விடுப்பில் சேர்த்து முடிவெடுக்கப்பட்டது. (மகாசிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தசரா – கட்டாய விடுப்பில் உள்ள தினங்கள்) இந்த கூட்டத்திற்கு அரசு பணியாளர்கள் சங்கத்தினர் அழைக்கப்பட்டதாக ஒரு தரப்பு தெரிவிக்கிறது. இதை ஊழியர் சங்கத்தினர் மறுக்கிறார்கள். இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு டிசம்பர் மாதம் (2 வாரங்களுக்கு முன்பு) ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

pongal

பொங்கல் திருநாளை வரையறுக்கப்பட்ட விடுமுறைப்பட்டியலில் சேர்க்கப்பட்டதால், ரயில்வே, சுகாதாரம், இந்திய அஞ்சல் துறையைச் சேர்ந்த 1 லட்சம் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் தொழிற்சங்கத்தினர். தற்போது பொங்கல் தினத்தை கட்டாய விடுப்பில் சேர்க்கவேண்டும் என மத்தியரசிடம் கோரிக்கை வைக்கின்றனர். ஊழியர்கள் எழுதிய கடிதத்திற்கு மத்தியரசு எந்த பதிலும் சொல்லாததால், தற்போது சிபிஎம் எம்பி டி.கே.ரங்கராஜன் மத்திய தொழிலாளர் நலத்துறைக்கு 9 ஆம் தேதி அன்று கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதமே ஊடகங்கள் செய்தி வெளியிட வாய்ப்பாக அமைந்தது.

கடந்தவருடம் பொங்கல் தினம், வாரநாட்களில் வந்ததால் கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு, வார இறுதிநாட்களில் வருவதால் வரையறுக்கப்பட்ட விடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதாக குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல் 2006 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு பிரச்னை எழுந்ததாகவும், தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக மீண்டும் பொங்கல் தினம் கட்டாய விடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

2014 ஆம் ஆண்டு பொங்கல் செவ்வாய்க்கிழமை வந்ததால், கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2015, 2016 ஆம் ஆண்டுகளிலும் வார நாட்களில் வந்ததால், கட்டாய விடுப்பில் சேர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மத்தியரசு பணியாளர்களுக்கு என்ன நடக்கும்? இந்தியாவைப் பொறுத்தவரையில் நிர்வாகம், செயலாக்கம் (அத்யாவசியத்துறை) என இரண்டு வகையாக துறைகள் வகைப்படுத்தப்படுகிறது. கட்டாய விடுப்பு பட்டியல் இடம்பெற்றுள்ள தினத்தன்று நிர்வாக பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அலுவலகத்தை அடைத்துவிட்டு விடுப்பெடுத்துக் கொள்கின்றனர். அதேபோல், அத்யாவசிய துறைகள் (ரயில்வே, அஞ்சல், சுகாதாரம்) ஆகிய பணியாளர்கள் அனைவரும் விடுப்பு எடுக்க வாய்ப்பில்லை, அன்று குறைந்தது 50 % பேர் பணியாற்றவேண்டியதுள்ளது. அப்படி பணியாற்றினால் கூடுதல் சம்பளம் பெற அவர்களுக்கு வாய்ப்பு உண்டு.

மத்திய தொழிலாளர் நலத்துறை எந்த நேரத்திலும், கட்டாய விடுமுறை பட்டியலை மாற்றும் அதிகாரம் கொண்டது. பலமுறை பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. எனவே தற்போது உடனடியாக பொங்கல் திருநாளை கட்டாய விடுப்பு பட்டியலில் சேர்க்கவேண்டும்.

இப்போது, ஒன்று தெளிவாகிறது. கட்டாய விடுப்பு பட்டியலில் எந்த தினத்தை சேர்க்கவேண்டும், நீக்கவேண்டும் என்பதை மத்திய அரசு ஊழியர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழுதான் முடிவு செய்கிறது. மத்தியரசு நேரடியாக முடிவெடுப்பதில்லை. இந்த புரிதலோடு, நாம் முன்வைக்க வேண்டிய அம்சங்கள் இவையாக இருக்கலாம்:

  1. மத்திய அரசு ஊழியர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமையில் இருப்பவர்கள் இங்கு தமிழர்களாக (பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக) இருக்கவேண்டும்.

  2. முதல் வகுப்பு அதிகாரிகள் மட்டுமின்றி, முடிவெடுக்கும் கூட்டத்தில் அனைத்து பிரிவு ஊழியர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

  3. பொங்கல் போன்ற மண்சார்ந்த, பாரம்பரிய திருவிழாக்கள் (எல்லா மாநிலங்களிலும்) எப்போதும் கட்டாய விடுப்பு பட்டியலேயே வைக்கப்பட வேண்டும்.

  4. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதாகச் சொல்லும் மத்திய அரசு, இனிமேல், விடுமுறை குறித்த கருத்துகேட்பை ஊழியர்கள் அனைவரும் பங்கேற்கும்படியாக வெளிப்படையாக இணையத்தில் நடத்தவேண்டும்.

குறிப்பு: சமூக வலைதளங்களில் பரவிவரும் சில கோப்புகளில் 2010 ஆம் ஆண்டிலிருந்து வெளியான பட்டியலில் பொங்கல் கட்டாய விடுப்பில் சேர்க்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதை கவனித்தால் மத்திய அரசின் கட்டாய விடுப்பு 14 நாட்கள் மட்டுமே என்பதை தெரிந்துகொள்ளமுடிகிறது.

மகாலிங்கம் பொன்னுசாமி, ஊடகவியலாளர்.