நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன்

தொடர்ந்து ஈழப் படைப்பிலக்கியங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழப் போருக்கும் தமிழின அழித்தொழிப்புக்கும் பிந்திய அவலச் சுவை இலக்கியங்கள். எனினும் தமிழ்ப் படைப்பாக்கத்தின் புதிய எல்லைகளைத் தொட்டுப் பேசுபவை. மேச்சேரி, ‘களரி தொல் கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மன்றம்’ சேலத்தில் நடத்திய முழு நாள் கருத்தரங்கை முன்னோட்டு. இதுபோன்ற கருத்தரங்குகளில்தான் ஈழத் தமிழனுக்கு எதிரான முற்போக்குப் பகை முகங்களும் திரை கிழிபட்டுக் கோசம் காட்டுவதைக் காண முடிகிறது. கருத்தரங்குக்காக வாசித்ததைத் தொடர்ந்தும் சில புத்தகங்கள் வாசித்தேன்.

குணா கவியழகனின், ‘நஞ்சுண்ட காடு’, ‘விடமேறிய கனவு’, ஷோபா சக்தியின் ‘முப்பது நிறச் சொல்’, ‘box கதைப் புத்தகம்’, தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’, தமிழ்க் கவியின் ‘ஊழிக் காலம்’, சயந்தனின் ‘ஆறாவடு’, ‘ஆதிர’, தமிழ் நதியின் ‘பார்த்தீனியம்’ என்பவை. வாசித்து மிகுந்த மனச்சோர்வுடன் திரிந்து கொண்டிருந்தேன். அது 3000 பக்கங்க வாசித்த சோர்வல்ல. தமிழன் என்ற ஒற்றைக் காரணத்துக்காக திட்டமிட்டு, இந்தியத் துணைக் கண்டத்தின் மாயச் சதியுடன், சர்வதேசப் போர் அரங்குகளில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளாலும் (Cluster Bombs), இரசாயனக் குண்டுகளாலும் (Chemical Bombs) சிதைத்துக் கொல்லப்பட்ட கிழவன், கிழவியர், ஆடவர், பெண்டிர், சிறுவர், மழலையரின் வதை வரலாறு என்பதால்.

கையாலாகாத கண்ணி பாடுவதை விடுத்து இந்தியத் தமிழரால் எதுவும் செய்ய இயலவில்லை. தமிழினத் தலைவர்கள் என்று தமக்கு முடிசூட்டிக் கொண்டவர்களோ, வீட்டு மாச்சாரியன் பாணியில், ‘தீங்கு தடுக்கும் திறன் இலேன்’ என்று கை மலர்த்தி, Under dog போல மல்லாக்க விழுந்து தமிழ் வளர்க்கவும் தத்தம் குடும்பம் போற்றவும் முனைந்து நின்றனர்.

இந்தச் சூழலில், ‘வையாசி 19’ என்ற இன்பா சுப்ரமணியன் எழுதிய 632 பக்க நாவல் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. மனநிலையின் மாற்றத்துக்கு உதவும் என்று நினைத்தேன். ஆனால் இதுவும் மலேசியாவை வாழிடமாகக் கொண்ட தமிழர்கள் பற்றிய நாவல். வாழிடமாகக் கொண்டாலும் பூர்வ குடியாக இருந்தாலும் தமிழன் பாடு தனிப் பெரும்பாடுதான் போலும்!

வையாசி 19’ என்பது வைகாசி 19 என்பதன் நாட்டார் வழக்கு. நாவலின் முழு Narative Languageம் நாட்டு வழக்கில் அமைந்திருக்கிறது. அதனை முன்மொழிவதைப் போலிருக்கிறது. ‘வையாசி 19’ என்ற தலைப்பு. முழு நாவலுமே உரையாடல் மட்டுமன்றி, நாவலின் செப்பல் மொழியும் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் வட்டாரத் தமிழில் இயங்குகிறது. குறிப்பாகக் காரைக்குடி நகரத்தார் மொழி, அவருள்ளும் சில பிரிவுகள் உண்டடென்பதை நாமறிவோம். அது சார்ந்த மொழித் தடய வேறுபாடுகளை எம்மால் கண்டடைய இயலவில்லை.

நெடிய நாவலில் உரையாடலும் வட்டார மொழி, செப்பல் மொழியும். வட்டார மொழி என்னும் போது சற்று வாசிப்புச் சோர்வு தவிர்க்க இல்லாதது. சில சமயம் எத உரையாடல், எது செப்பல் மொழி என்ற மயக்கம் ஏற்படுத்துவது. செப்பல்மொழி எது என்பதும் உரையாடல் மொழி எது என்பதும் நாவலாசிரியரின் தேர்வு என்றாலும், வாசகனாகச் சொல்லிப் போவது நமது உரிமை.

கடல் கடந்து தன வாணிகம் செய்யட்ப போன நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வாழ்க்கைச் செழிப்பையும் இடர்ப்பாடுகளையும் விவரிக்கிறது இந்த நாவல். இதுவரைக்கும் இத்தனை விரிவாக அவர்களது வாழ்க்கை வேறு எவராலும் பேசப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. நாவலின் காலகட்டம் 1923 முதல் 1945 வரை. அந்தக் காலகட்டத்தின் மொழித் தொன்மை புலப்படுகிறது. படைப்புக்களம் இரண்டாம் உலகப் போரின் தாக்கம் கண்ட மலாயாவின் சமூக, வரலாற்றுப் பின்னணி. அதில் அல்லற்பட்டு அலைக்கழிக்கப்பட்ட மலாய், சீன, தமிழரின் வாழ்க்கை – சப்பானிய ஆக்கிரமிப்புக்கு அஞ்சி ஓடியழிந்த துயர்கள் – யுத்தத்துக்கும் கூலிப் பணிகளுக்கும் ஆள் சேர்க்க அலைந்த ஆங்கிலேயருக்கு அஞ்சி ஒளிகிறார்கள் தோட்டத் தொழிலாளர்கள். சாவு துரத்திய இலட்சக்கணக்கான ஈழத் தமிழனின் அவலத்துக்கு இஃதோர் கட்டியம் கூறல். ஆனால் மலாயாப் புலம் பெயர்வில் இனப் படுகொலைகளும் சித்திரவதைகளும் கற்பழிப்புகளும் இல்லை. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம், சப்பானிய ஆக்கிரமிப்பு எனப் பல தகவல்கள் கிடைக்கின்றன.

மேலும் நகரத்தார் செட்டியார்கள் செய்த தன வணிகம், கடற் பயணம், கிட்டங்கிகள், திரும்பு காலில் சேகரிக்கும் பொருள்கள், காசுப் பைகள், நவரத்தினக் கற்கள், உணவு என நமக்கு அறிமுகம் இல்லாத வாழ்க்கை நிலைகள். பிழைக்கவும் தொழில் பழகவும் போன செட்டிப் பிள்ளைகள், பிள்ளைமார், இசுலாமியரின் பெட்டியடி வாழ்க்கை… செட்டியார்கள் மலாய் தேசத்தில் வாங்கிய தோட்டங்கள், அங்கு கூலி வேலை செய்த மலாய், சீன, தமிழ் மக்கள். அவர்கள் வாழிடம், உணவு எனப் பற்பல செய்திகள் பேசப்படுகின்றன. இங்கே நம்மூரில் நகரத்தாரின் வீடுகளின் அமைப்பு, விருந்தோம்பல், உணவுகள், உறவு முறைகள், தெய்வங்கள், வழிபாடுகள், சடங்குகள், மணவினை என்பனவும் விரிவாகப் பேசப்படுகின்றன.

திரைக்கடல் ஓடித் திரவியம் தேடப் போனவரின் இளம் மனைவியர் நோன்பு காத்துக் கிடக்கின்றனர். கணவர்கள் திரும்பி வர இரண்டு வருடமோ, ஐந்து வருடமோ, ஏழு வருடமோ, ஏன் பதினைந்து ஆண்டுகளோ கூடக் கடந்து விடுகின்றன. தாம்பத்யம் துறந்து பிள்ளை வளர்ப்பதிலும் தோட்டம் துரவு மேற்பார்ப்பதிலும் கோயில் குளம் என்று விரதம் பேணுவதிலும் எதிர்பார்ப்புகளிலும் காலம் கொண்டு செல்லும் பெண்டிர். ஊர் திரும்புவோர் வசம் கொடுத்தனுப்பப்படும் காசு, கடிதம் எனக் காத்திருப்போம். தொலைபேசி அழைப்புக்காக அஞ்சல் அலுவலகங்களில் காத்துக் கிடப்போர்… அவர்கள் ஒழிய, மறுமணம் செய்ய வகையற்றுக் காலம்பூரா அடுக்களைப் பணி செய்து சொந்த அவலத்தைச் சுவடு இன்றிப் பேணும் இளம் விதவையர்… நூலாசிரியர் ஒரு பெண் என்பதால் உடல் ஏக்கம் சார்ந்தும் மன ஏட்ககம் சார்ந்தும் ஆன நுண்ணிய உணர்வுகளை வெளிப்படையாகப் பேசுகிறார்.

ஆனால் கடல் கடந்த பொருள் தேடப் போனவர் பலர், பெண் தேகச் சூடு இல்லாமல் அலைக் கழிந்து சீன, மலாய் பெண்களைச் சேர்ந்துக் கொண்டு அங்கேயும் குடும்பம் பேணுகிறார்கள். ஆதரித்துப் பராமரிக்கப்படும் மலாய், சீனப் பெண்களின் உண்மையான நேசமும் உரைக்கப்படுகிறது.

பல கோணங்கள் நாவலுக்கு என்றாலும் நாவலின் முற்பகுதி தீர்மானத்துடன் செப்பம் செய்திருக்கப்பட வேண்டும் என்று தோன்றிற்று எனக்கு.

மீனா எனும் காதல் மனைவியுடன் சில ஆண்டுகளாகப் புதுமண மதுவின் தேறல் ஏக்க உண்டு இருந்த காலை, அவளையும் அவள் குழந்தைகளையும் அந்தரத்தில் விட்டுவிட்டு, சர்ப்பம் தீண்டி, அண்ணாமலைச் செட்டியார் இறந்த பிறகு நாவலுக்கு புதுப்பொருள் சேர்கிறது.

செத்தப் பிணத்தை எரிக்க விடாமல் தடுத்து, சாவு வரி கேட்டு நான்கு நாட்களாக ஆங்கிலேய அதிகாரிகள் பேசும் நாகரிகமும் கண்ணியமும் கருணையும் அற்ற பேரம். மூத்த குடியாள் மகன், தனது பாகம் குறித்த உறுதி பெறாமல், பிணம் தூக்க விடாமல் மறியல் செய்யும் குரோதம். வயிற்றில் இரண்டு மாதம், மசக்கை ஒரு பக்கம், எட்டு மாதக் கைக் குழந்தைக்குப் பால் கொடுக்காமல் பால் நெறி கட்டிப் படும் உபாதை என நாவலின் கோரமான காட்சிகள் நடந்தேறுகின்றன. நாவலின் தீவிரமான சில பக்கங்கள் அவை.

முப்பத்திரண்டு வயதில் விதவையாகிப் போன மீனா ஆச்சி, குடும்பத்தையும் சின்னக் குழந்தைகளையும் கொள்ளை போகக் காத்திருக்கும் கணவன் சேர்த்திருந்த மலாய் நாட்டுச் சொத்துக்களையும் லேவாதேவிக் கணக்கு வழக்குகளையும் காபத்து பண்ணக் கப்பலேறிப் பயணம் போகும் தீரம் நாவலின் முக்கியமான இறுதிப் பகுதி. அங்கு சந்திக்கும் இடர்கள், பதினைந்து ஆண்டுகளாக ஊர்ப் பயணம் மேற்கொள்ளாத பெரியப்பா ராமய்யா செட்டியாரின் ஆறுதலும் அரவணைப்பும், ஆங்கிலேய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் நேர்மை என நாவல் உயிர் பெற்று ஓடுகிறது.

தனது மகனைக் காணாமற் போக்கி, நீண்ட ஆண்டுகளாகத் தேடி இறுதியில் கண்டடையும கிம் என்னும் சீனத்தாயின் துயரம் விவரிக்கப்படுகிறது. நாடு கடந்து தொழில் செய்யப் போன செட்டியார்களின பாலியல் வாழ்க்கை, ‘செட்டியார் கப்பலுக்குச் செந்தூரான் துணை’ என்று காத்திருக்கும் ஆச்சிகளுக்கு வாய்த்த மனத்திட்பம் பேசப்படுகிறது.

இராமைய்யா செட்டியார், கிம்மின் மகன் சீனச் சிறுவன் சூபி ஆகியோரின் நூதனமான பாசப் பிணைப்பு அற்புதமாக அமைந்துள்ளது. சின்னச் சின்ன, கணக்கற்ற கதாபாத்திரங்கள் நேர்த்தியுடன் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நாவல் மூலம் வாசகருக்குக் கிடைக்கும் புதிய செய்திகள் சில முப்பத்திரண்டு வயது பெண், நாட்டு வைத்தியத்தினால் தனது மாதச் சுழற்சியை நிறுத்த முடியும் என்பதொன்று. மூல நோய்ப்பட்ட பெண் ஒருத்தியின் அவஸ்தை எத்தனை கொடூரமானது என்பது மற்றொன்று. வேறெங்கும் நாவல் அல்லது சிறுகதை மூலம் இந்தப் பதிவுகள் உளவா என்று தெரியவில்லை. 1937ஆம் ஆண்டு, மாசி மாதம் 28ஆம் தேதி, மலாயா நாட்டில், பினாங்கில், காந்தாம்பட்டி மூனா சீனா தானா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திறந்தார். ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு என்பது பிறிதொன்று. அதன் மூலம் செட்டியார்கள் கப்பல் மூலம் காசுப் பை சுமக்கும் அபாயம் நீங்கியது என்பது வேறொன்று.

ஒரு கணித மாணவன் என்ற வகையில், தமிழன் அறிந்திருந்த பின்னங்கள் பதறிய நெடிய தகவல், எனக்கு பிரமிப்பூட்டியது. ஒன்றில் தொடங்கி, பாதாளம் வரை பாய்கிறது கணிதம். சில சுவாரசியமான பின்னங்கள் – காணி என்பது 1/80, முந்திரி என்பது 1/320, இம்மி என்பது 1/2150400, அணு என்பது 1/165580800, நாக விந்தம் என்பது 1/5320111104000, வெள்ளம் என்பது 1/57511466188000000, தேர்த்துகள் என்பது 1/2323824530227200000000. ஸ்பெக்டம் ஊழல் கோடிகளையே எண்ணால் எழுதத் தெரியதாவர் நாம்.

மற்றுமொரு சுவாரசியமான தகவல், கிருஷ்ண தேவராயரின் விஜய நகரப் பேரரசு தமிழ்நாட்டை வெற்றி கொண்ட பிறகு, திருமலை நாயக்கர் காலத்தில் (கி.பி. 1570-1572), வராக உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. வராகம் எனில் பன்றி. அதன் பிறகு நமது மொழிக்குள் வராகன் எனும் சொல் தங்கத்தின் எடையைக் குறித்தது. பிறகே பவுன், சவரன், குதிரைப் பொன், முத்திரைப் பவுன் எனும் சொற்கள் வந்தன.

இன்பா சுப்ரமணியன் அவர்களை சென்னையில் ஒன்றிரண்டு இலக்கியச் சந்திப்புகளில் கண்டிருக்கிறேன் உரையாடியதில்லை. அவருடைய கவிதைத் தொகுப்புகள் இரண்டு வாசித்திருக்கிறேன். இன்று அவை எம் கைவசம் இல்லை. இந்த நாவல் கையில் கிடைத்தபோது வியப்பும் மகிழ்ச்சியும் மீதுற்றது. கடந்த காலத்தின் கடல் கடந்த தமிழ் வாழ்வைச் சொல்ல, அவர் ஆறேழு ஆண்டுகள் உழைத்திருக்க வேண்டும். அந்த முயற்சிக்கு நமது பாராட்டுகள். ‘பெரிதினும் பெரிது கேள்’ என்பார்கள். பெரிதாகக் கனவு கண்டிருக்கிறார். தமிழ் நாவல் பரப்பில், ‘வையாசி 19’ நாவலின் இடத்தைக் காலம் தீர்மானிக்கும்.

வையாசி 19’ நாவலுக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய மதிப்புரை…

நூல்: ‘வையாசி 19

ஆசிரியர்: இன்பா சுப்ரமணியன் 

பதிப்பகம்: யாவரும்

ஆன்லைனில் வாங்க..