இனியன்

இனியன்
இனியன்

ஒரு தலைமுறை சமூக மாற்றம் அல்லது வளர்ச்சி நிகழுகிற பொழுது அதற்கு நேர் எதிரான முந்தைய தலைமுறையினரின் இழப்புகள் மற்றும் மனோநிலைப் போன்றவற்றை எப்படி அவதானித்திட இயலும். அதிலும் குறிப்பாகத் தொழில்நுட்ப வளர்ச்சி முதல் பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் வரை நிகழத் துவங்கிய 80களின் காலக்கட்டத்திலிருந்த முந்தைய தலைமுறையினரின் வாழ்வியல் முறைகள், அதன் அழகு, சிக்கல்கள், மனிதர்களின் பண்புகள், அப்போதிருந்த ஏற்றத்தாழ்வுகள், சாதிய நிலைகள், வன்மங்கள், பழிவாங்கல் என அனைத்தையும் பேசியிருக்கிற நாவல் புத்தகம்தான் அப்பணசாமியின் “கொடக்கோனார் கொலை வழக்கு”.

திண்ணைகளிலும், முச்சந்திகளிலும், குளக்கரைகளிலும் பேசப்பட்ட கதைகளின் சுவாரசியம் என்பது அதனை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர்ந்துக் கொள்ளக்கூடிய ஒன்று. அப்படிப்பட்ட கரிசக்காட்டுக் கடைவீதித் திண்ணையொன்றிலிருந்து ஆராம்பமாகி, கதைசொல்லிகள் சொல்கிற கதைகளுக்கு இணையாக அவர்களுக்குள்ளும் இருக்கிற கதைகளோடும் பயணமாகிறது கதைகளம். இதுபோன்ற கதையுரையாடலில் திண்ணைவாசிகள் அனைவருமே கதைசொல்லிகள்தாம். விதிவிலக்காகக் கதைகளைச் சுமப்பவர்களாகவும் சிலர் இருப்பர். அப்படிப்பட்ட கதை சொல்லிகளாக கொடக்கோனாரும், அருணாசல நாடாரும். கதைச் சுமப்பவராக ஏகாம்பர முதலியாரும் அறிமுகமாகின்றார். மேலும் அறிமுகமாகிற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கதைகளின் வாயிலாகவே அறிமுகப்படுத்த படுகிறார்கள்.

பொதுவாக நிலவமைப்புச் சார்ந்த கதைகளத்தில் அந்நிலைவமைப்பைச் சார்ந்த குறிப்பிட்ட இனம், சாதி மற்றும் சமயம் அல்லது வாழ்வீதிகளை மையமாக வைத்தே எழுதப்படும். அவற்றிக்கு மாற்றாக ஒரு நிலவமைப்பைப் புழங்குகின்ற அத்துணை இனமக்களையும், அவர்கள் அதில் நிலைபெற எம்மாதிரியான மாற்றங்களைத் தங்களுக்குள் அடைந்திருகிறார்கள் என்பதைத் தீவிர அவதானிப்புகளுக்குப் பிறகும், தன்னுடைய இளவயது திண்ணைக் கதைகள் மூலமாகவுமே எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

நாவலின் தலைப்பை வைத்து இதுவொரு கொலைவழக்கு மற்றும் அதனைச் சுற்றி நிகழக்கூடிய திகில் நிறைந்த வழக்காடுக் கதையாக இருக்குமோ என்கிற முன்முடிவில் படிக்கத் துவங்குபவர்களுக்கு நிச்சியம் ஏமாற்றமிருக்காது. ஆனால் கொலை எப்போது நிகழும் என்கிற எதிபார்ப்பு நிச்சயம் சுவாரசியத்தை ஏற்படுத்தும். ஆனால், கொலைக்கான காரணத்தை சற்று ஆராய்தலும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கவுரவக் கொலைகள் என இன்றளவும் பெருமையாக சொல்லப்பட்டுவருக்கிற ஆணவக் கொலைதான் கொடக்கோனாரின் கொலையும். அதிலும், கிட்டத்தட்ட 3௦ ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் பழிவாங்கக் கூடிய சாதிய ஆணவக் கொலை. கதையின் போக்கில் புலப்படாமால் போகக்கூடிய இப்புரிதல் மிகவும் கவனமாகக் கையாளக் கூடியதும் ஒன்று. கதையின் காலக்கட்டத்தையும் இன்றைக்கும் தொடர்ந்துக் கொண்டிருக்கூடிய ஆணவக் கொலைகளின் முன்னோடியாகத் தான் கருத்தில் கொள்ளவேண்டும். அதுசரி, இங்கு பெரும்பாலான சிறு தெய்வங்களும் ஆணவக் கொலைகளின் நீட்சிதானே.

மேலும் கொலை நிகழ்வதற்கு முன்பாகச் சொல்லப்படுகின்ற கிளைக் கதைகளும், வருகிற கதாபாத்திரங்களும், கரிசக்காட்டு நிலவமைப்பும் தான் நாவல் பேசுகிற மையக் கருவாகச் சுழண்டு கொண்டேயிருகிறது. சொல்லப்பட்டிருக்க ஒவ்வொரு கிளைக்கதைகளும் அடுத்தடுத்த படைப்புகளுக்கான கரு என்று சொன்னாலும் அது மிகையாகது. அவையனைத்தையும் முழுவதுமாக எழுதப்பட்டிருக்குமானால் மற்றுமொரு தலையணைப் புத்தகமொன்று நமது கையில் இருந்திருக்கும்.

அப்படியென்ன கிளைகதைகளின் தாக்கமென்று யோசித்துப் பார்த்தால் கடலங்குடி ஜமீன் பேரனான சாயுபு, கோவணாண்டி நாயக்கர், மாடக்கண்ணு ஆசாரி, நடுவன், சின்னவன் மற்றும் சக்கிலியப் பெண்மீது வைத்திருந்த அவனது காதல், ஏகாம்பர முதலியாரின் குடும்ப வாழ்க்கை என அனைத்துக் கிளைக் கதைகளுமே தனித்தனி நாவல்களாக வரவேண்டியவை. இவை அனைத்தையுமே மிக நேர்த்தியான தனது கதைசொல்லல் முறையால் சுருக்கமாகவும் அதேவேளையில் நடக்கவிருக்கின்ற கொலைக்கு எவ்விதத் தொடர்பில்லாமல் கதைமாந்தர்களின் தொடர்பை மட்டுமே சொல்லிச் சென்றிருப்பதும் கூட ஆழமான அழகியல்தான்.

அதேபோல் தலைமுறை மாற்றங்கள் நிகழுகின்ற போது பேசப்படுகிற சாமானியர்களின் திண்ணை அரசியல் பேச்சுகளும் தலைமுறை தாண்டிய ஆதங்கங்களைளும் எளிய மக்களின் வாயிலாகவேப் பேசிச் செல்வது நடப்பு அரசியலின் சூழிலில் மக்களின் மனதினைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. உதாரணமாக இந்தியாவில் பசுமைப் புரட்சியென்ற பெயரில் உள்நுழைக்கப்பட்ட வேதியல் உரங்களினால் ஏற்படக்கூடிய எதிர்கால விளைவுகளையும், கிராமங்களிலும் நுழைந்த பிளாஸ்டிக் பொருட்களின் விளைவுகளையும் குறித்து எழுகிற சாமானியனின் குரல்களால் பதிவு செய்திருப்பது அதன் எதார்த்த நிலையையே காட்டுகிறது. அந்த எதார்த்த நிலை தொடர்ந்திருக்குமானால் இன்றைய இயற்கை ஆர்வலர்களுக்கும், சூழலியலாளர்களுக்கும் இடமிருந்திருக்காது. இங்குதான் சாமானியர்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காது வல்லுனர்களின் குரல்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருகிறோம் என்பதையும் கதை சொல்லிகளின் கதைகளாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

நினைவுகள் அழிவதில்லை. நினைவுகள் வரலாற்றை எழுதுகின்றன. நினைவுகள் தலைமுறைக்குத் தலைமுறை கைமாறுவதன் மூலம் வரலாறு மறுபடியும் நினைக்கப்படுகிறது. நினைவுகளைத் தொலைத்து விட்டுப் பாதை தடுமாறும் உலகமிது என்கிற தன்னுடைய வரிகளைப் போலவே தான் பிறந்து வளர்ந்தக் கரிசக்காட்டு நிலத்தின் வரலாற்றையும், மனிதர்களையும் தனது நினைவுகளின் வழியாகவே படைத்திருக்கிறார் அப்பணசாமி.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற நினைவுகள் அழிவதில்லைதான். ஆனால் அவையனைத்தும் வடிவங்களாகவோ, படைப்புகளாகவோ வெளிவருவதில்லை. அப்படி வெளிவரும் படைப்புகளில் நினைவுகளைத் தூண்டும் பணியைச் செய்கிற படைப்புகளும் வெகுசிலவே. அந்த வரிசையில் வாசிப்பவர்களின் நினைவுகளைத் தூண்டுவதிலும், நம்முள் சூழ்ந்து இருக்க கூடிய கதைகளை மீளுருவாக்கம் செய்யத் தூண்டுவதிலும் கொடக்கோனார் கொலை வழக்கிற்கு தனியிடமுண்டு.

நூல்: கொடக்கோனார் கொலை வழக்கு (நாவல்)
ஆசிரியர்: அப்பணசாமி
பதிப்பகம்: எதிர் வெளியீடு
விலை : 200/-