அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்
“நான் பேசிவிட்டேன் …என் ஆன்மாவை காப்பாற்றி விட்டேன் …”

கோத்தா செயல்திட்டம் மீதான விமர்சன நூலில், கார்ல் மார்க்சின் இறுதி வரிகள் இவை ..

கோத்தா செயல்திட்டம் என்றால் என்ன? இது குறித்து மார்க்ஸ் பேசாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும்?இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் 1875 ஆம் ஆண்டில் மார்க்ஸ் எழுதிய கோத்த செயல்திட்டம் மீதான விமர்சனம் எந்தளவு பொருத்தப்பாடு உள்ளது? சுருக்கமாக பார்ப்போம் ..

மார்க்சும் எங்கெல்சும் அக்காலகட்டத்தில் இருந்த ஏனையே தொழிலாளர்கள் இயக்கங்களைக் காட்டிலும்.ஜெர்மன் தொழிலாளர்கள் இயக்கத்துடன் நெருக்கமாக இருந்து வந்தனர். இதை எங்கெல்சே கூறியுள்ளார்.

ஜெர்மன் தொழிலாளர்கள் இயக்கத்தில் பெமல்,லீப்நெட் குழு ஒரு முகாமாகவும், லாசல் குழு ஒரு முகாமாகவும் இருந்துவந்தனர்.இவ்விரு குழுவும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து ஜெர்மன் தொழிலாளர்கள் சோசலிஸ்ட் கட்சி என்ற பெயரில் ஒன்றாக இணைந்து வேலை செய்ய முன்வந்தனர்.கோத்தா எனும் நகரில் இந்த ஒற்றுமை காங்கிரஸ் நடைபெறுவதாக முடிவுசெய்யப்பட்டது. இக்காங்கிரசின் செயல்திட்டமே கோத்தா செயல்திட்டம் எனப்பட்டது. இந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு முன்பாக, இக்கட்சியின் செயல்திட்டத்தை மார்க்சின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த செயல்திட்டத்தின் மீதான மார்க்சின் விமர்சனமே இந்நூல்.கட்சித் தலைவர்களிடம் விமர்சனத்தை காட்டும் படி, தனது நண்பர் பிராகேவிற்கு இந்த விமர்சனத்தை மார்க்ஸ் எழுதி அனுப்பினார்.

1875 இல் எழுதப்பட்ட இந்த விமர்சனத்தை 1891 இல் எங்கெல்ஸ் அவரது முன் உரையுடன் நூலாக வெளியிட்டார். கட்சியின் செயல்திட்டத்தின் மீது மார்க்சும் எங்கெல்சும் நம்பிக்கை கொள்ளவில்லை. அப்போது நிலவிய ஜெர்மன் முதலாளிய அரசுடன் சமரசவாதம் மேற்கொள்வதே செயல்திட்டத்தின் இறுதி அர்த்தமாக இருந்தததே அதற்கு காரணம். நிலை இவ்வாறு இருக்க,கட்சியின் போக்குகள் அனைத்திற்கும் மார்க்ஸ்,எங்கெல்சையும் பொறுப்பாக்குகிற(பக்கூனின்) அயோக்கியத்தன வேலைகளை சிலர் செய்யத் தொடங்கினர்.

இந்நிலையில்,இந்த செயல்திட்டம் எவ்வளவு பிற்போக்கானது என்ற மார்க்சின் விமர்சனத்தை வெளியிடுவதன் அவசியம் கருதி 1891 இல் எங்கெல்ஸ் இந்நூலை வெளியிட்டார்.

ஏனெனில் 1875 ஐக் காட்டிலும் 1891 களில் மேலதிக சந்தர்ப்பவாத தன்மையுடன் ஜெர்மன் தொழிலாளர்கள் கட்சி செயல்படத் தொடங்கியது.இச்சூழலில்தான் மார்க்கின் “இரக்கமற்ற” “கடுமையான”விமர்சனத்தை எங்கெல்ஸ் வெளியிட்டார்.ஒருவேளை இந்த விமர்சனம் வெளிவராமல் போயிருந்தால் மார்க்சே கூறிவிட்டார்,என நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதவி பெற்று
அமர்வதே புரட்சி என கூறி மார்க்சியத்தை திருத்தி முடித்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

ஆனாலும் ஜெர்மன் தொழிலாளர்களை பீடித்த சந்தர்ப்பவாத போக்கு, காலம் செல்ல செல்ல மென்மேலும்
சந்தர்ப்பவாத தன்மைகளின் உச்சத்தை நோக்கி பயணித்த கொடுமையும் நடந்தன. மார்க்சும் எங்கல்சும் பெபேல்,லசலை விமர்சித்ததைப் போல அடுத்த சுற்றில் ஜெர்மன் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் கார்ல் கவுட்சிக்கியின் சந்தர்ப்பவாத போக்கை லெனி னின் “இரக்கமற்ற” வகையில் மார்க்சை விட மேலதிகமாகவே விமர்சித்தார்.

சுமார் நூறாண்டுகள் சென்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான மார்க்ஸ்,எங்கெல்ஸ்,லெனினின் “இரக்கமற்ற” விமர்சனங்கள் இன்றும் அதே முக்கியத்துவம் குறையாமல் உள்ளது.

முன்பு ஜெர்மனியை பீடித்த இந்த சந்தர்ப்பவாதம்,சமரசவாதத்தை புரிந்துகொள்ள தற்போதைய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஐரோப்பிய நாடுகளில் உள்ள சமூக ஜனநாயக கட்சிகளின் நடவடிக்கைளை பார்த்தாலே விளங்கும்.

நாடளுமன்றங்களை அலங்கரிப்பது, சட்டவதாக முதலாளித்துவ ஜனநாயக சட்டகத்திற்குள் சுமூகமாக சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்வது, தொழில் சங்கங்களை பொருளாதார சலுகை வாதத்திற்குள் முடக்குவது இந்த சந்தர்ப்பவாத கட்சிகளின் குறிப்பான பண்புகளாக உள்ளன.

நிலவுகிற முதலாளித்துவ சுரண்டல்வாத அமைப்பை,புரட்சிகர நிகழ்வுப் போக்கால் மட்டுமே தகர்க்க முடியும்,அதை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான நேச அணியாலே நிகழ்த்தமுடியும், நிலவுகிற முதலாளித்துவ சுரண்டல்வாத அமைப்பை, புரட்சிகர நிகழ்வுப் போக்கால் மட்டுமே தகர்க்க முடியும்,அதை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான நேச அணியாலே நிகழ்த்தமுடியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தால் இந்த புரட்சி காப்பற்றப்படும்,பின்னர் கம்யூனிசத்தின் வளர்ச்சி அடைந்த கட்டத்தில் வர்க்க பேதங்கள் மறையும், அரசும் உதிர்ந்து உலரும். சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைக்கிற புரட்சிகர அரசியலில் சமரசமும், சந்தர்ப்பவாதமும் உச்சம் பெற்றிருக்கிற இந்த சூழலில், சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான மார்க்சின் இரக்கமற்ற விமர்சனத்தை, புரட்சிகர அரசியலில் உள்ள ஒவ்வொரு கம்யூனிஸ்டும் பொது விதியாக பயிலவேண்டும்..

புதிய தமிழ் மொழிபெயர்ப்பாக தோழர் மு.சிவலிங்கம் இந்நூலை சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.சமகாலத்தில் பெரிதும் மதிக்கிற, மார்க்சியத்தின் மீதும், புரட்சியின் மீதான நம்பிக்கைகளை அணு அளவிலும் நெகிழ்ந்து கொடுக்காத தோழர் சிவலிங்கத்தின் காலம் கருதிய இப்பணி காலத்தே அவசியமானதும் முக்கியமானதாகும்.

குறிப்பு: இப்புதிய மொழிபெயர்ப்பை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது..சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கும்

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. புத்தக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.