தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் இருவரும் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகிய ஏறு தழுவுதல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் , மாணவர்கள் நடத்திவரும் அமைதி வழியிலான அறப்போருக்கு தமுஎகச தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களில் தமுஎகசவின் எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஏற்கெனவே தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இப்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலைக்கு மத்திய மோடி அரசே முழுப் பொறுப்பாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ஏறு தழுவுதல் நிகழ்வு நடைபெறவில்லை. காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளை மாட்டை நீக்கி மோடி அரசு சட்டம் கொண்டு வந்திருந்தால், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இருந்த தடை இயல்பாகவே நீக்கப்பட்டிருக்கும். ஆனால், அதற்கான முயற்சி எதையும் மோடி அரசு செய்யவில்லை. மாறாக, தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்தது. மாநில அரசும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை. மத்திய அரசை உரிய காலத்தில் நிர்ப்பந்திக்க வில்லை.

ஏறு தழுவுதல் என்பது 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மண்ணில் நடந்து வந்துள்ளது. வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களுக்கும், கால்நடைகளுக்கும்இருக்கும் தோழமையின் வெளிப்பாடாகவே ஏறுதழுவுதல் நடந்து வந்துள்ளது. இந்தியாவின் பன்முகப் பண்பாட்டை மறுத்து, வருணாசிரம அடிப்படையிலான ஒற்றைப் பண்பாட்டை திணிக்கும் பாஜக அரசு அத்தகைய குறுகிய அடிப்படையிலேயே ஏறு தழுவுதல் நிகழ்வை நடத்த விடாமல் செய்யும் அமைப்புகளுக்கு திட்டமிட்டு துணை நின்றுள்ளது என்று தமுஎகச குற்றம் சாட்டுகிறது.
தமிழகம் முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் லட்சக்கணக்கானோர் ஆவேசமாக போராடி வரும் நிலையிலும் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்று பிரதமர் மோடி கை விரித்திருப்பதை தமுஎகச வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக அரசு இந்த பிரச்சனையில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுப்பதோடு போராடும் இளைஞர்கள் மாணவர்கள் மீது, அடக்குமுறையை ஏவக்கூடாது என்று தமுஎகச கேட்டுக் கொள்கிறது.

ஏறு தழுவுதல் நிகழ்வை நடத்துவதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ள தமுஎகச இப்போது நடைபெறும் பன்முகப் பண்பாட்டு பாதுகாப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதோடு இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சி இந்துத்துவா அடிப்படையிலான ஒற்றை பண்பாட்டு திணிப்புக்கு எதிராகவும், உலகமயத்தின் சீரழிவு பண்பாட்டிற்கு எதிராகவும் விரிவடைய வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.