உச்சநீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது அறிவிக்கை வெளியிடலாம், ஆனால் அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது என்று கூறுவது அப்பட்டமான ஏமாற்று வேலையாகும் என தமிழக காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

அவசரச்சட்டம் மத்திய பா.ஜ.க. அரசு அமைந்து இதுவரை 22 அவசரச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடைசியாக உச்சநீதிமன்றம் தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் (நீட்) மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க வேண்டுமென ஆணை பிறப்பித்தது. இதை தமிழ்நாடு அரசு எதிர்த்த காரணத்தால் தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு வழங்க மத்திய பா.ஜ.க. அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதேபோல, விவசாய நில கையகப்படுத்துதல் சட்டம் 2013 இல் நிறைவேற்றப்பட்டப் பிறகு அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் போது இச்சட்டத்தில் திருத்தம் செய்து மூன்று முறை  அவசரச் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்ததை எவரும் மறுக்க முடியாது. எனவே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது என்று பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த மூன்றாண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத காரணத்தால் வெகுண்டெழுந்த மாணவர்கள் தமிழகம் முழுவதும் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றனர். ஜல்லிக்கட்டு நடக்கவேண்டிய அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் இரவு – பகல் பாராமல் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். அதேபோல, சென்னை கடற்கரை சாலையில் மாணவர்கள் தொடர்ந்து போர்க்கோலம் பூண்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் துணையின்றி, தலையீடின்றி மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக இத்தகைய போராட்டங்களை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மிகப்பெரிய அளவில் காந்திய வழியில் அமைதியாக நடத்திவருகின்றனர்.

அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ இதில் கலந்து, பங்கேற்று உரையாற்றுவதை போராட்டத்தில் ஈடுபடுவோர் விருப்பம் காட்டவில்லை. காங்கிரஸ் கட்சியின் சார்பாக உங்களோடு களத்தில் நின்று உரிமைக்காக போராட விருப்பம் இருந்தும் உங்களது எண்ண ஓட்டத்திற்கு மதிப்பளித்து உங்களோடு அமரவில்லை; என்றாலும் உங்கள் போராட்டம் வெல்லவேண்டும். உங்களது போராட்டம் மக்கள் போராட்டம், வெற்றிபெற்றே தீரும். இப்போராட்டத்தின் திசையைத் திருப்பி அரசியலாக்கிட எள் முனையளவும் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லை.

இத்தகைய போராட்டங்களை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் செய்யாமல் வேடிக்கைபார்ப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். போராடுகிற மாணவர்களைச் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டிய தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமது பொறுப்பைத் தட்டிக்கழிக்கிற வகையில் பாராமுகமாக இருப்பது ஏன் ? இப்போராட்டம் பெரிய அளவில் வெடித்து சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டால் அதற்கு மத்திய – மாநில அரசுகள்தான் பொறுப்பு. எனவே, அரசே ! விழி, எழு, விரைந்து செயல்படு என திருநாவுக்கரசரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.