சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க. கூட்டறிக்கை:

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் பிரதிபலிப்பான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்தி கடந்த சில தினங்களாக தமிழகமெங்கும் மாணவர்கள், இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள போராட்டச் சூழலுக்கு மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே காரணம் என்பதை மக்கள் நல கூட்டியக்கம் சுட்டிக்காட்டுகிறது. தமிழக மக்களின் உணர்வினை மதித்து ஜல்லிக்கட்டை அனுமதிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்ததன் காரணமாக உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்கவும், ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெறவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மறுத்து வருகிறது. பாஜக அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாகும். தமிழக மக்களின் கலாச்சாரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.
ஜல்லிக்கட்டு மீதான உச்சநீதிமன்ற தடையை நீக்க தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திய பின்னரும் பிரதமர் தனது பொறுப்பை தட்டிக்கழித்துள்ளார். பிரதமரின் இந்த நடவடிக்கை தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே, தமிழக மக்களின் உணர்வையும் – போராடும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளையும் புறந்தள்ளாமல் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிட கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

* மத்திய அரசு காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்கிட உடனடியாக அவசரச்சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். இதற்கான சட்ட திருத்தத்தை நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வேண்டும்.

* தமிழக அரசு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

* ஜல்லிக்கட்டுக்காக போராடுகிற மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கலைப்பது, கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

* தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசை நிர்ப்பந்திக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

* ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி இளைஞர்கள்/மாணவர்கள் நடத்தி வரும் எழுச்சிமிக்க போராட்டத்திற்கு ஆதரவாக நாளை (20-1-2017) நடைபெறவுள்ள கடையடைப்பு மற்றும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்கின்றன. இதனை வெற்றி பெறச் செய்திட அனைத்துப்பகுதி மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்-சிபிஐ (எம்)

இரா. முத்தரசன்
மாநிலச் செயலாளர்-சிபிஐ

தொல். திருமாவளவன்
தலைவர்-விசிக