நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து வரும் 20 அன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க. சார்பில் தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்த அக்கட்சியின் இன்றைய அறிவிப்பில், “ மத்திய பா.ஜ.க. அரசின் “நீட்”  நுழைவுத் தேர்வு மற்றும் “புதிய கல்விக் கொள்கை”யை கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 20.1.2017 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் “ஜல்லிக்கட்டு” நடத்தக்கோரி மாணவர்கள் இளைஞர்கள் தமிழகம் முழுவதிலும் எழுச்சிமிகு, உணர்ச்சிமிகு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், போராடும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். ஆகவே, பீறிட்டு வெளிவரும் தமிழுணர்வை போற்றி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக ரீதியிலான வரலாறு காணாத போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில்  திமுக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்பாட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. போராட்டத்திற்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.