தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்தக்கோரி நடைபெறும் போராட்டத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிடக் கோரி சிபிஐ-எம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான க.பீமாராவ் ஆகியோர் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை கோட்டையில் இன்று நேரில் வலியுறுத்தினர்.

சிபிஐ-எம் கட்சியின் மாநிலச்செயலர் ஜி.இராமகிருஷ்ணனின் கடிதத்தை முதலமைச்சரிடம் அவர்கள் வழங்கினர். அதைப் பெற்றுக்கொண்ட பன்னீர்செல்வம், போராட்டம் நடத்துபவர்களின் பிரதிநிதிகளோடு, தான் பேசத்தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இராமகிருஷ்ணனின் கடித விவரம்:

தமிழக மக்கள் அனைவரின் உணர்வாகவும், கலாச்சார பாரம்பரியமாகவும் விளங்குகின்ற ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவே அனைத்து தடைகளையும், வேறுபாடுகளையும் தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள். இந்த நிலையில் தாங்கள்
1.போராட்டம் நடத்துபவர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையளிக்கும் வகையில் சுமுக தீர்வு காண வேண்டுமெனவும்,

2.உடனடியாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவும், பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே சட்டத்திருத்தம் கொண்டு வரவும் பிரதமரை தாங்கள் நேரடியாக சந்தித்து வலியுறுத்த வேண்டுமெனவும்,

3.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இனி வரும் காலத்தில் தடையின்றி ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தவும், நிர்ப்பந்திக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென அக்கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.