மாணவர்களை கட்டாயமாக வெளியேற்றி எதிர்விளைவுகளுக்கு ஆளாக வேண்டாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஜல்லிக்கட்டு நடத்திட சட்டபூர்வமான, நிரந்தர தீர்வுக் காணக்கோரி தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் – இளைஞர்கள் கடந்த 10 தினங்களாக தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ்நாடு அரசு, அவசர சட்டம் பிறப்பித்து இருந்தாலும் அதன் மீது நம்பிக்கை இழந்த நிலையில் நிரந்தர தீர்வுக்காக அமைதியாக ஜனநாயக முறையில் போராடிக் கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை முதல் மெரினா கடற்கரை உள்பட தமிழ்நாடு முழுவதும் போராடிக் கொண்டுள்ள மாணவர்களை, இளைஞர்களை காவல்துறையைக் கொண்டு வலுக்கட்டாயமாக வெளியேற்ற மேற்கொண்டுள்ள முயற்சியை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆயிரக் கணக்கான காவல்துறையினரை குவித்து ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை அரசு உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசின் வஞ்சகம் நிறைந்த சூழ்ச்சிக்கு பலியாகி செங்குளவிக் கூட்டில் கை வைத்து எதிர்விளைவுகளுக்கு ஆளாகி அவப் பெயருக்கு ஆளாக வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை எச்சரிக்கின்றோம். போராட்டக் குழுக் தோழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வுக் காண வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது”.