பழனி ஷஹான்

பழனி ஷஹான்
பழனி ஷஹான்

‘அதிகாரியின் சாட்சியம்’ என்று புதிய தலைமுறை ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அது காவல்துறை அதிகாரி ஒருவர் மெரினா புரட்சியில் ஆற்றிய பணி பற்றியது.

உண்மையில் மெரினா புரட்சியின் ஆரம்ப நாட்கள்தொட்டு, ஊடகம் செயல்பட்டவிதத்தை நான் மனதார பாராட்டி கூட்டங்களில் பேசினேன். போராட்டாக் குழுவில் இருப்பதைவிட, நம் போராட்டத்தை விடிய விடிய வெளிஉலகிற்குக் காட்டிக்கொண்டிருக்கும் ஊடகவியல் நிருபராய் இருப்பதையே இப்போது நான் விரும்புகிறேன் என்றேன். அதனால்தான் மக்கள் திரளில் மூன்று தடவை பேசியதோடு நிறுத்திக்கொண்டு, போராட்ட நகர்வுகளை பதிவு செய்தும், அதைக்குறித்து எழுதுவதையும் முதன்மையாக்கிக் கொண்டேன்.

இறுதி நாட்களில் ஊடகங்கள் மெளனித்ததன் பின்னால் இருந்த அழுத்தங்களையும், மிரட்டல்களையும் அறிவேன். 23ஆம் தேதி அதிகாலையில் போலீஸ் படை குவிக்கப்படுவதை ஊடகத்தின் கேமராக்கள் காட்டாமலிருந்ததை, நேரடியாய் பார்த்து அவர்களுடன் சண்டையிட்டேன். அப்போதும் அவர்களுக்குள்ள மிரட்டலை அறிந்து போராட்டக்குழுவிலிருந்த நாங்கள் ஊடகங்களை குறைபட்டுக்கொள்ளாமல், நாங்களே ஊடகமாய் செயல்பட்டோம்.

ஊடகங்களின் நிலையறிந்து செயல்பட்ட எங்களின் உணர்வை ஊடகங்கள் இன்று அலட்சியப்படுத்தியிருக்கிறது. அரசு தரப்பில் உங்களுக்கு அன்று அழுத்தம் இருந்தது, இன்று என்ன வந்தது காவல்துறையை கதாநாயகர்களாகக் காட்ட?

பழனி ஷஹான், எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர். ‘கோவை கலவரத்தில் எனது சாட்சியம்’ நூலின் ஆசிரியர். மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு கோரும் போராட்டத்தில் பங்கேற்றவர்.