செய்திகள்

அரசை விமர்சிப்பதை, கேள்வி கேட்பதை, காவல்துறையின் அத்துமீறலை – அராஜகத்தை தட்டிக்கேட்பதை ‘தேச விரோதம்’ என்பதா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் 2017 ஜனவரி 26,27 ஆகிய தேதிகளில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

ஜல்லிக்கட்டு உரிமைக்காக தமிழகம் முழுவதும் அமைதியாகப் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மீது காவல்துறையினர் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலையும் – பொதுச் சொத்துக்கள் மற்றும் பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தியதையும் – மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளுக்காக நாடு தழுவிய அளவிலும் – தமிழகத்திலும் போராடும் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளை சமூக விரோத சக்திகள், தேச விரோத சக்திகள் என்று முத்திரைக் குத்தி அவர்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தியதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சென்னையில் 23.1.2017 அன்று தொடங்கிய சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே – அன்றைய தினம் அதிகாலை தொடங்கி இரவு வரை காவல்துறையினர் போராடியவர்கள் மீது தொடுத்த மூர்க்கத்தனமான வன்முறைத் தாக்குதல்கள், கண்ணீர் புகை குண்டு வீச்சு, காவல்துறையினரே நடத்திய தீ வைப்பு சம்பவங்கள், இளம் பெண்கள் – கர்ப்பிணிப் பெண்கள் மீது நடத்திய வெறித்தனமான தடியடிகள், குடியிருப்பு பகுதிகளில் புகுந்து நடத்திய வன்முறைகள், சாலையோரம் நின்ற வாகனங்களை நொறுக்கியது, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டு காவல்துறையின் அராஜகம் குறித்த பல்வேறு விபரங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், வீடியோ பதிவுகளிலும் வெளிவந்துள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்கள் அனைத்திற்கும் சென்னை மாநகர காவல்துறையும், தமிழக அரசுமே பொறுப்பாகும்.

சென்னை மெரினா கடற்கரையொட்டிய மீனவ மக்களின் குடியிருப்பு பகுதிகளில் குறிப்பாக நடுக்குப்பத்துக்குள் நுழைந்து அப்பாவி மீனவ மக்கள் மீது வன்மத்துடன் கண்மூடித்தனமாக நடத்திய தடியடி, கல்லெறி, குடிசைகளுக்கு தீ வைப்பு, வாகனங்களை எரித்தது, அவர்கள் தொழில் செய்யும் மீன் மார்க்கெட்டை கொளுத்தியது, பெண்கள் – குழந்தைகள் என்று பாராமல் மிருகத்தனமாக தாக்கியது, பெண்களை பாலியல் ரீதியான ஆபாச வார்த்தைகளால் திட்டியது. வீடு புகுந்து பலரை கைது செய்தது உள்ளிட்டு வன்முறையின் உச்சத்திற்கே சென்று காவல்துறை மீனவ மக்களை வேட்டையாடியுள்ளது. இத்தகைய வெறித்தனமானத் தாக்குதல் நடுக்குப்பம் அருகில் தலித் மக்கள் வாழும் ரூதர் புரம் மற்றும் மீனாம்பாலபுரம், மாட்டாங்குப்பம், சிவராஜபுரம் இதையொட்டிய குடியிருப்பு பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளன. காவல்நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது கொடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்து போலீஸ் காவலில் இருந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது – நிர்ப்பந்தத்திற்கு பிறகே ஒரு சிலருக்கு சிகிச்சை கிடைத்துள்ளது. தேடுதல் எனும் பெயரால் வீடு புகுந்து அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இப்போதும் தொடர்கின்றன.

ஜல்லிக்கட்டு உரிமைக்காக ஒரு வார காலம் அமைதியாக, அறவழியில் போராடிய இளைஞர்கள், மாணவர்கள், பெண்களை ஜனவரி 23 அன்று காலை கடற்கரைப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் வகையில் காவல்துறையினர் நடத்திய அத்துமீறல்களும், தாக்குதல்களும் ஜனநாயக உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானதாகும். இந்த தாக்குதல்களை கண்டித்து சென்னை நகரெங்கும் நூற்றுக்கணக்கான மையங்களில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வீதியில் திரண்ட போது அவர்கள் மீதும் காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

கோவையில் மாணவர் – வாலிபர் இயக்கத் தலைவர்கள் மீது குறிவைத்து தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. மாதர் இயக்கத்தின் தலைவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்டு பலர் கடும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஜனநாயக அமைப்புகளான இந்திய மாணவர் சங்கத்தையும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தையும் – இவர்கள் சமூக விரோத சக்திகள், தேச விரோத சக்திகள் என்று முத்திரைக் குத்தி கோவை மாநகர கமிஷனர் இத்தகைய தாக்குதலை நடத்தியுள்ளார். இதுபோல் மதுரை புறநகர் அலங்காநல்லூர் பகுதியில் போராடிய மக்கள் மீதும் மிருகத்தனமான தாக்குதல்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் நடத்தப்பட்டுள்ளன.

அரசை விமர்சிப்பதும் – கேள்வி கேட்பதும், காவல்துறையின் அத்துமீறலை – அராஜகத்தை தட்டிக்கேட்பதும் ‘தேச விரோதம்’ என்று முத்திரைக் குத்தி, எதிர்ப்புக் குரல்களை அடக்கி ஒடுக்க நினைக்கிறது தமிழக அரசு. இந்த ஜனநாயக விரோத – சர்வாதிகார அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

நேற்று (26.01.2017) மதியம் காவல்துறையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம், ரூதர்புரம் பகுதி மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., மற்றும் மாநில, மாவட்டத் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து விபரம் அறிந்ததோடு அவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.

ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் துச்சமென மதித்து சட்டத்திற்கு புறம்பாக குற்றச் செயல்களை புரிந்துள்ள சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ், கோவை மாநகர கமிஷனர் அமல்ராஜ், மதுரை மாவட்ட எஸ்.பி., விஜேந்திர பிதரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமெனவும்; காவல்துறையினரின் வன்முறைகள் மற்றும் சேதாரங்கள் குறித்து பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உடனடியாக ஒரு நீதி விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இந்த வன்முறைச் சம்பவங்களுக்கும், பொதுச் சொத்து மற்றும் பொதுமக்கள் உடமைகளை சேதப்படுத்திய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

பொய் வழக்குகள் புனையப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளோர் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென்றும் – அவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டுமென்றும், ஜாமீனில் விடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ரூ. 10,000/- என பிணையத் தொகை செலுத்த வற்புறுத்தக் கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

உடமைகள் இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடும், தொழிலுக்கு செல்ல முடியாமல் பல்வேறு பாதிப்புகளுக்கும், மனஉளைச்சலுக்கும் ஆட்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கிடவும், சிறையில் உள்ளவர்களுக்கும் – குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கும் உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திட வேண்டுமெனவும், குடியிருப்பு பகுதிகளிலிருந்து காவல்துறையினர் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழகஅரசை வலியுறுத்துகிறது.

முகப்புப் படம்: சென்னையில் மீனவர்கள் தாக்கப்பட்ட நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்த்து ஆறுதல் கூறிய சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.