எம். புண்ணியமூர்த்தி

எம். புண்ணியமூர்த்தி
எம். புண்ணியமூர்த்தி

மிக சாவகசமாக ஆட்டோவுக்கு தீ வைக்கிறார் ஒரு காவலர், தன் அம்மா வயதொத்த ஒரு பெண்ணின் முதுகில் தன் முழுபலம் கொண்டு லத்தியை செலுத்துகிறார் இன்னொரு போலீஸ். கற்பிணி பெண் என்று தெரிந்தும் பூட்ஸ் காலால் அவரை எட்டி உதைக்கிறார் இன்னொரு காக்கி. போராட்டக்காரர்களை தாக்குவதற்காக போலீஸ் குவித்து வைத்திருந்த கற்களை படம் எடுத்ததற்காக ஊடகவியலாளர் ஒருவரை ஓடிவந்து அறைகிறார் இன்னொரு காவல் அதிகாரி. ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும் நெஞ்சு அதிர்கிறது; பயம் அதிகரிக்கிறது. உலகமே வியந்து பார்த்த ஒரு போராட்டத்தின் முடிவில் இன்று மீனவர்களின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

போராட்டக்களத்தில் மாணவர்களுக்கு உதவி செய்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மீனவர்களை போலீஸ் சித்ரவதை செய்கிறது. நடுக்குப்பம்,மாட்டாங்குப்பம், சிவராஜபுரம் ஆகிய மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் போலீஸ் படைகள் நுழைந்து இளைஞர்களை அடித்து இழுத்துச்செல்கிறது.. பதற்றம் அதிகரிக்கிறது. யாராவது காப்பாற்றுங்கள். என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தமிழக இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது. நமக்காக வந்தவர்கள் இப்படி உயிருக்கு போராடுகிறார்களே என்ற பரிதவிப்போடு தங்களுக்கு வந்த செய்தியை எல்லோருக்கும் ஃபார்வேர்டு செய்வதையும் தவிர அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை.

காலையில் ஒரு வீடியோ வருகிறது… அந்த வீடியோ காட்சியில் மீனவர்களின் குடிசைகளுக்கு ஒரு பெண் காவலர் எந்தவித தயக்கமும் இல்லாமல் தீ வைக்கிறார். ஃப்ளக்ஸ் பேனர்களால் மூடப்பட்டிருந்த அந்த குடிசை எரிந்த காட்சி இன்னமும் கண்ணில் இருந்து அகல மறுக்கிறது. தென்னங்கீற்று கூட வாங்க வழி இல்லாமல்தானே அந்த பாமரன் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் ப்ளக்ஸ் பேனரை கிழித்து வந்து தன் குடிசைக்கு போர்த்தியிருப்பான்.? அவன் குடிசையை கொஞ்சமும் கூச்சமில்லாமல் குற்ற உணர்வும் இல்லாமல் கொளுத்த அந்த காவல் துறை அதிகாரியால் எப்படி முடிந்தது.? குடிசைக்கு தீ வைத்த அந்த மகா பாவம் பதிந்த கைகளோடுதானே தன் வீட்டுக்கு திரும்புவார்.? அந்த கைகளால்தானே தன் குழந்தைகளை கொஞ்சுவார்.? எப்படி அந்த போலீஸுக்கு இது சாத்யமாகிறது.?

மீனவர்களின் வாழ்வாதரமான எண்ணற்ற மீன்கடைகளை காவல்துறையினர் எரித்து நாசம் செய்திருக்கிறார்கள். தினசரி அந்த கடைகளின் வாயிலாக கிடைக்கும் நூறு இருநூறில்தானே அந்த அப்பாவி மீனவர்கள் வாழ்க்கையை நகர்த்தியிருப்பார்கள்.? அந்த கடைகள் எரிந்த பிறகு அவர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள்.? அந்த கடையை மீண்டும் உருவாக்க எவ்வளவு வலிகளை கடக்க வேண்டியிருக்கும். எத்தனை துயரங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் சிந்தித்த பிறகுதான் கொளுத்தியிருப்பார்களா.? அவர்கள் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு போலீஸும் வரும் நாட்களில் மீன் சாப்பிடும் போது அதில் கருகிய குடிசையின் வாசமும், அப்பாவி மீனவர்களின் வடித்த கண்ணீரும் கலந்திருப்பதை உணர்வார்களா.?

ஏன் காவல்துறைக்கு இரக்கமே இருக்காதா.? என்று கேட்டால், இருக்கவே இருக்காது என்பதுதான் கசப்பான உண்மை. தனிப்பட்ட காவல்துறை அதிகாரியை குறித்துச் சொல்வதற்கில்லை. போலீஸ் சிஸ்டம் என்ற ஒட்டுமொத்த அமைப்புமே ஈவு இரக்கமற்றதுதான். இன்னொரு வீடியோ பதிவில் “ஒரு போலீஸ் இரத்தம் சொட்ட படுத்தபடி.. நாங்களும் தமிழனுங்கதானேடா.. உங்க கூட நாங்களும் போராடுனோமேடா.. நாங்க என்னடா பாவம் செஞ்சோம்.? என்று அப்பாவியாக பேசும் வீடியோவைப்பார்க்கும் போது, “விசாரணை படத்தில் க்ளைமாக்சில் ஒரு போலீஸ் அதிகாரியை போலீஸே சுட்டுக் கொன்றுவிட்டு , ’இந்தப் பக்கம் அவர் கல்யாண போட்டோவையும் அந்தப் பக்கம் அவர் மனைவி அழும் போட்டோவையும் போட்டுட்டா எல்லாத்தையும் மறந்துடுவாங்க. ’போலீஸுக்கு பாதுகாப்பு இல்லை’னு அதைத்தான் மீடியாவும் கவர் பண்ணுவாங்க’னு என ஒரு போலீஸ்காரர் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.

ஹெல்மெட் விஷியத்திலும், பேருந்து நிலைய ஒலிபெருக்கிகளிலும் மட்டும் நமக்கு நண்பனாக தோற்றமளிக்கும் காவல்துறை. அரசை காப்பாற்றுவதற்காகத்தான் நம்மோடு உறவாடிக்கொண்டிருக்கிறது. நண்பனாக நடிக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்.? சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள் வீழ்த்தவே முடியாத ஒரு ஹீரோவை வீழ்த்துவதற்காக வில்லனுடைய ஆள் ஒருவர் ஹீரோவோடு நெருக்கமாக பழகி நம்ப வைத்து கடைசியில் ஹீரோவை முதுகில் குத்தி வீழ்த்துவார்கள். போலீஸும் அப்படித்தான் அரசின் விசுவாசிகள் அரசை காப்பாற்றுவதற்காக நம் நண்பனாக நடிக்கிறார்கள். வீழ்த்தவே முடியாத பொதுஜனத்தை சமயம் பார்த்து முதுகில் குத்துவார்கள் இன்றைக்கு மீனவ குப்பங்களை சூரையாடுவதைப் போல.!

சொத்துக்காரன் ஆரம்பக்காலத்தில் உண்டாக்கி வைத்த அடியாள்தான் பிற்காலத்தில் ரத கஜ துரோக பதாதிகள் என்றானது. அதற்கும் பிற்காலத்தில் ராணுவம் போலீஸ் என்று சீருடை மாட்டி நின்றது. ஆம்! போலீஸ் என்பது அரசின் அடியாள் அவ்வளவே. அரசின் அதிகாரத்துக்கு எப்போதெல்லாம் பங்கம் வருகிறதோ அப்போதெல்லாம் தன் அடியாட்களை அரசு ஏவிவிடும். தனது எஜமானனான அரசை காப்பாற்ற அந்த அடியாள் அமைப்பு எந்த எல்லைக்கும் செல்லும் என்பதில் ஒரு துளியேனும் உண்மை இருக்கா இல்லையா.?

உங்களின் ஈரமில்லாத காக்கிச்சட்டையை கழற்றி வைத்துவிட்டு ஒரு குழந்தையின் தகப்பனாக, தாயாக பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

எம். புண்ணியமூர்த்தி, ஊடகவியலாளர்.