செய்திகள்

போலீஸ் வன்முறை: முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் விளக்கம்

ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின் முடிவில் வன்முறை நடந்ததாகக் கூறி போலீசார் சிலரே வன்முறையில் ஈடுபட்டது ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியானது. எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விளக்கம் தரவேண்டும் என்றும் கோரி இருந்தன. இந்நிலையில் சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

அதன் முழுவடிவம் இங்கே…

தமிழர்களின் பண்பாட்டு சின்னமாக விளங்கும் ஜல்லிக்கட்டு 2006-ம் ஆண்டு முதலே பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை அவ்வப்போது வழங்கிய பல்வேறு இடைக்கால உத்தரவுகளின்படியே ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தனது 11.7.2011 நாளிட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்த தடை செய்யப்படும் விலங்குகள் பட்டியலில் காளையையும் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.

உச்ச நீதிமன்றம், மத்திய அரசால் 11.7.2011 அன்று வெளியிடப்பட்ட அந்த அறிவிக்கை மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 7.5.2014 அன்று இறுதி உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மகாராஷ்டிராவில் காளைமாட்டுப் பந்தயத்தை நடத்தவும் முழுமையான தடை பிறப்பிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009, இந்திய விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதால், இது மத்திய சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த இயலாத சூழ்நிலையில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் சங்கம், மாடுபிடி வீரர்கள் சங்கம் போன்ற சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்களும், சில அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் 12.1.2017 முதல் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 16.1.2017 அன்று மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 700 பேர் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி வாடிவாசல் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் கேட்டுக் கொண்டும் அவர்கள் கலைந்து போகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 227 பேர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், காவல் துறையினர் அவர்களை 17.1.2017 அன்று கைது செய்தனர்.

இதனையடுத்து, பொதுமக்கள் சுமார் 3,500 பேர் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே கூடி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு கோரினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை, கோயம்புத்தூர், மதுரை மாநகர், திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூடினர்.

இதனையடுத்து, காவல் துறையினர் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்தனர். விடுவிக்கப்பட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து, காவல் துறையினர் தலையீட்டின் பேரில், பின்னர் அவர்கள் கலைந்து சென்று வாடிவாசல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொண்டனர்.

அன்று, சென்னை மெரினா கடற்கரை, சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி ஆங்காங்கு தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையில் காவல் துறை உயரதிகாரிகள் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களுடன் பேசி அவர்களின் பிரதிநிதிகள் சுமார் 15 பேரை இது குறித்து அரசுடன் பேச சம்மதிக்க வைத்தனர். எனது உத்தரவின் பேரில், மீன்வளத்துறை அமைச்சர் திரு. டி.ஜெயக்குமார், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு.கே.பாண்டியராஜன் ஆகியோர் 18.1.2017 அன்று அதிகாலை 2 மணிக்கு போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள், ஜல்லிக்கட்டு தடை நீக்குவதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். பிரதிநிதிகள், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், போராட்டக்காரர்கள் அனைவரும் அறியும்படி அரசு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டுமென்று கோரினர்.

18.1.2017 அன்று, நான் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் சட்டரீதியான தீர்வு காண அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கி, 19.1.2017 அன்று காலை புதுடில்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்த உள்ளேன் என்பதையும் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் போராட்டங்களை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும் அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். நான் புதுடில்லி செல்வதற்கு முன் எனது வீட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களின் பிரதிநிதிகளை சந்தித்து இது பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினேன்.

19.1.2017 அன்று மதுரை மாநகர், வைகையாற்று பாலத்தில் சுமார் 1,000 பேர் நாகர்கோயிலில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் வண்டியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று, காரைக்கால் – பெங்களூர் விரைவு ரயில் வண்டியை சேலம் நகரில் சுமார் 500 பேர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மதுரை ரயில்வே சந்திப்பில் பயணிகள் ரயில் ஒன்றையும், பின்னர் காரைக்குடி ரயில் நிலையத்தில் குருவாயூர் விரைவு ரயில் வண்டியையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறித்தனர். காவல் துறையினர் தலையிட்டும் அவர்கள் ரயில் வண்டிகளை செல்ல விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த மறியல் போராட்டங்களினால் சென்னைக்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாநிலத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், ரயில் மறியல், ஊர்வலம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டனர். இப்போராட்டங்களின் போது காவல் துறையினர் பொது அமைதிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். குறிப்பாக சென்னையில் ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற போதும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் பார்த்துக் கொண்டனர்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை 19.1.2017 அன்று புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட ஏதுவாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். எனது கருத்துகளை பரிவுடன் கேட்டுக் கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், இந்த பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படாததை சுட்டிக் காட்டிய மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தார். எனவே, நான் புதுடில்லியிலேயே தங்கியிருந்து மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொண்டு அதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்திட இயலுமா என்பது பற்றி சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு

உயரதிகாரிகளுடன் விவாதித்தேன். அதனடிப்படையில் மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் ஒன்றை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டு, வரைவு சட்ட திருத்தம் புதுடில்லியிலேயே தயார் செய்யப்பட்டது. இதை அவசர சட்டமாக பிறப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி, இந்த அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் பரிந்துரை பெறப்பட்டு, மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவேண்டும் என்பதால் அதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த அவசர சட்டத்தை அதிகாரிகள் மூலம் 20.1.2017 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து விட்டு நான் சென்னை திரும்பினேன். இந்த அவசர சட்டத்திற்கு மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அன்று இரவே பெறப்பட்டது.

20.1.2017 அன்று புதுடில்லியிலும், சென்னை விமான நிலையத்திலும், பத்திரிகையாளர்களை சந்தித்த போது, தமிழக அரசால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினேன்.

அன்று மாலை மதுரை மாநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் சுமார் 200 பேர் மதுரை விமான நிலையத்திற்குள் சென்று விமான போக்குவரத்தை தடை செய்யும் நோக்குடன் விமான நிலையத்திற்கு முன்பு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதியாக கலைந்து போக செய்து, விமான நிலையம் அருகில் தேவையான ஏற்பாடுகளை பலப்படுத்தினர்.

மேதகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களின் ஒப்புதல் பெற்று, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கான தமிழ்நாடு திருத்தச் சட்டம் 21.1.2017 அன்று சட்டமாக்கப்பட்டது. எனவே, அடுத்த நாளே, அதாவது, 22.1.2017 அன்றே ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் மற்றும் சில இடங்களில் நடைபெறும் என தெரிவித்து அறிக்கை ஒன்றை நான் வெளியிட்டேன்.

21-1-2017 அன்று, ஊடகங்களுக்கு நான் பேட்டி அளித்தபோது, 23-1-2017 அன்று துவங்க உள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரில், அவசரச் சட்டத்திற்கு மாற்றான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படும் என்பதை எடுத்துக் கூறினேன்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டுமெனவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டுமெனவும் அதுவரையில் தங்கள் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்து, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காத்திருப்பு போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

சென்னை மெரினா கடற்கரை மற்றும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களிடையே பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை தூண்டிவிட்டதோடு, அவ்வமைப்பினர் பொது இடங்களில் மிகவும் ஆட்சேபகரமாக பேசி வந்தனர். இப்போராட்டங்கள் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் அன்றாட அலுவலுக்கு இடையூறு ஏற்பட்டது. குறிப்பாக, சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சென்னை, மெரினா கடற்கரையில் 26.1.2017 வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, குடியரசு தினத்தன்று கறுப்புக்கொடி காட்டுதல், குடியரசு தின விழாவை சீர்குலைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டுமெனக் கோரி வந்தவர்கள், தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கிய பின்னரும், நிரந்தர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்றும், காவிரி நதி நீர் விவகாரம், முல்லை பெரியாறு பிரச்சினை, பன்னாட்டு வர்த்தகங்கள் மீதான தடை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதிலும் ஒரு பகுதியினர் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடாக அறிவிக்க வேண்டுமென்றும், இந்திய குடியரசு தினத்தை கறுப்பு தினமாக அறிவிக்க வேண்டுமென்றும் கோரினர். போராட்டத்தின் போது, ஓசாமா பின் லாடன் படம் வைத்திருந்தவர்கள், ‘இந்திய குடியரசு தினத்தை நிராகரிக்கிறோம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர் என்பதற்கான புகைப்பட ஆதாரத்தையும் இங்கே காண்பிக்க விழைகிறேன்.

22.1.2017 அன்று இப்போராட்டத்தை முன் நின்று நடத்தி வந்தவர்களுள் ஒருவரான ஹிப் ஹாப் தமிழா என்கிற ஆதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவில், இப்போராட்டத்தை தேச விரோதிகளும், விஷமிகளும், சமூக விரோதிகளும் கையிலெடுத்து கொண்டு விரும்பத்தகாத கோரிக்கைகளை முன் வைப்பதாகவும், தேசிய கொடியை எரிப்பதாகவும், போராட்டத்தை திசை திருப்புவதாகவும் தெரிவித்ததோடு, மாணவர்களும், இளைஞர்களும் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், எனவே போராட்டத்தை கைவிடுமாறும் கூறியிருந்தார். மேலும், அன்று மாலை ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன், ஜல்லிக்கட்டு ஆர்வலர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பெரியவர் அம்பலத்து அரசர், ராஜேஷ், ஹிப் ஹாப் தமிழா என்கிற ஆதி ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், இவர்கள் தான் இந்த போராட்டத்திற்கு பத்தாண்டுகளாக போராடி இந்த போராட்டம் முதன்முதலில் ஆரம்பித்தவர்கள், 2006லிருந்து இப்போது நடைபெறும் போராட்டத்திற்கும் இவர்கள் தான் அடிப்படை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து போராட்டம் வெற்றி பெற்றது என்றும், அனைவரும் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்ட பின்னரும் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.

போராட்டத்தில் பல்வேறு தேச விரோத அமைப்புகளைச் சார்ந்தவர்கள், விஷமிகள், சமூக விரோதிகள் ஊடுருவி, அமைதியாக நடைபெற்று வந்த பேராட்டத்தில் வன்முறையில் ஈடுபடவிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், 23.1.2017 அன்று காலை முதல் காவல் துறையினர், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் துறையினர் மெரினா கடற்கரை நோக்கி வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எவரும் மெரினா நோக்கி வராமல் தடுத்து, மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு நேரடியாகவும், ஊடகங்கள் மற்றும் ஒலி பெருக்கி மூலமாகவும் கேட்டுக் கொண்டதையடுத்து, சுமார் 10,000 பேர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்து அமைதியான முறையில் கலைந்து சென்றனர். எனினும், சுமார் 2,000 பேர் மட்டும் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சட்டவிரோத கும்பல் ஒன்று ஐஸ் அவுஸ், பெசன்ட் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலைகளில் காவல் துறையினர் வைத்திருந்த தடுப்புகளை மீறி, காவல் துறையினரை தள்ளிக் கொண்டு கடற்கரைக்குச் செல்ல முற்பட்ட போது, தடுத்தும் கேளாமல், காவல் துறையினர் மீது கற்களை வீசி தடுப்பை உடைத்துக் கொண்டு முன்னேறியதால், காவல் துறையினர் தகுந்த எச்சரிக்கைக்கு பின் குறைந்தபட்ச பலத்தை உபயோகித்தும், கண்ணீர் புகையை உபயோகித்தும் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

மேலும், மற்றொரு சட்டவிரோத கும்பல் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்குள் புகுந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியதில் தீ பிடித்து, காவல் நிலையத்திலுள்ள பொருட்கள் மற்றும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீயில் எரிந்து, சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் இரண்டு நான்கு சக்கர வாகனங்களும், 31 இரண்டு சக்கர வாகனங்களும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவும் எரிந்து சேதமடைந்தன.

சென்னை, நடுக்குப்பத்தில் சட்டவிரோத கும்பல் ஒன்று கூடி மெரினா நோக்கி செல்ல முற்பட்ட போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித்தும் அக்கும்பல் கலைந்து செல்லாமல் காவல் துறையினர் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது. இச்சம்பவத்தில், நடுக்குப்பம் மீன் மார்க்கெட் பகுதியில் இருந்த தற்காலிக பந்தல்கள் 20, ஒரு டெம்போ டிராவலர், நான்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்தன. காவல் துறையினர் அவர்களை கலைந்து போகச் சொல்லி எச்சரித்தும் கேட்காமல், அவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், காவல் துறையினர், தக்க எச்சரிக்கைக்குக் பின்பு, குறைந்தபட்ச பலத்தை உபயோகித்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

ஜாம்பஜார், பாரதி சாலையில் சட்டவிரோத கும்பல் ஒன்று, காவல் துறையினர் மீது கற்களை வீசித் தாக்கியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தது. காவல் துறையினர் உரிய எச்சரிக்கை விடுத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், தகுந்த எச்சரிக்கைக்கு பின் கண்ணீர் புகையை உபயோகித்து அவர்களை கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவத்தில் பொதுமக்களின் எட்டு வாகனங்கள் தீயில் கருகின. சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நாயர் பாலத்தில் சட்டவிரோத கும்பல் ஒன்று மறியலில் ஈடுபட்டு வந்தது குறித்து தகவலறிந்து சென்னை மேற்கு காவல் இணை ஆணையர் அவர்கள் அங்கு சென்ற போது, அவரது அரசு வாகன ஓட்டுநரைத் தாக்கி, அவ்வாகனத்திற்கு தீ வைத்தனர். இச்சம்பவத்தில் காவல் வாகனம் முற்றிலும் எரிந்து போனது.

சென்னை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்டு காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்களுக்கு தீ வைத்ததுடன், அப்பகுதியிலிருந்த மூன்று டாஸ்மாக் கடைகளை சூறையாடியது. இதே போன்று வடபழனி நூறடி சாலையில், சட்டவிரோத கும்பல் ஒன்று வடபழனி காவல் ஆய்வாளரின் வாகனத்திற்கு தீ வைத்தது.

சென்னை, அரும்பாக்கம் நூறடி சாலையில் சட்டவிரோத கும்பல் ஒன்று, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தையும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களையும் தாக்கி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த டெம்போ டிராவலர் காவல் வாகனம் மற்றும் தீயணைப்புத் துறை வாகனம் ஒன்றையும் தீ வைத்து சேதப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஒரு டாஸ்மாக் கடைக்கும் தீ வைத்தனர்.

மேலும், சென்னை, மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம் அருகேயுள்ள புறக்காவல் உதவி மையத்தினை சட்டவிரோத கும்பல் ஒன்று சேதப்படுத்திவிட்டு, அங்கு இருந்த இரண்டு காவல் வாகனங்களை தீ வைத்து எரித்தது.

சென்னையில் சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்ட போது காவல் துறையினர் அவர்களை கலைக்க மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வேளச்சேரி, துரைப்பாக்கம், தரமணி, அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, கொட்டிவாக்கம், கே.கே.நகர், கிண்டி, ஓட்டேரி, ஜாம்பஜார், விருகம்பாக்கம் உட்பட 76 இடங்களில் மொத்தம் 12,500 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கலைந்தனர்.

சென்னை மாநகரில் ஆங்காங்கு சட்டவிரோத கும்பல்கள் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும், காவல் ஆளிநர்களைத் தாக்கியும், காவல் வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்ட போது காவல் துறையினர் தலையிட்டு அவர்களை கலைந்து போக அறிவுறுத்தியும், கலைந்து செல்ல மறுத்து வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டவர்களை வேறு வழியின்றி தகுந்த எச்சரிக்கைக்கு பின் குறைந்த பட்ச பலத்தை உபயோகித்தும், கண்ணீர் புகையை பயன்படுத்தியும் கலைத்தனர். இதனால் பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பெரும் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது. இச்சம்பவங்களின் போது காவல் துறையினர் பெருமளவில் காயமடைந்தனர். மேலும் பல காவல் வாகனங்கள் மற்றும் அரசு வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டும், கல்வீசியும் சேதப்படுத்தப்பட்டன.

சென்னையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் காவல் துறையினர் 142 பேரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 138 பேரும் காயமடைந்தனர். அவர்களில் காவல் துறையினர் 68 பேரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 41 பேரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறையாளர்கள் தீ வைத்ததில் 19 காவல் வாகனங்கள், இரண்டு தீயணைப்புத் துறை வாகனங்கள் மற்றும் ஒரு சிறைத்துறை நான்கு சக்கர வாகனம், ஒரு மாநகர அரசுப் பேருந்து ஆகியவை எரிந்து சேதமாகின. இது மட்டுமல்லாமல், விஷமிகளால் பொதுமக்களின் 4 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 29 இரு சக்கர வாகனங்கள் தீ வைக்கப்பட்டு சேதமாகின. மேலும், 15 காவல் துறை வாகனங்கள், 41 பிற அரசு வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் 4 நான்கு சக்கர வாகனங்கள் வன்முறையில் சேதமடைந்தன. சென்னையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 66 வழக்குகள்

பதிவு செய்யப்பட்டு, 215 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், பொது இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போன்றவற்றில் ஈடுபட்டது தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மாநிலத்தில் மதுரை மாநகர், மதுரை மாவட்டம், கோவை மாநகர் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் காவல் துறையினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைதியாக கலைந்து சென்றனர். சேலம் மற்றும் மதுரை மாநகரில் ரயில் மறியலில் ஈடுபட்டு வந்தவர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், காவல் துறையினர் அவர்களைக் கலைந்து போக செய்து, ரயில் போக்குவரத்தை சரி செய்தனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த பிறகும், ஒரு கும்பல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதுமின்றி, காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை காவல் துறையினர் குறைந்தபட்ச பலத்தை உபயோகப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். கோயம்புத்தூர் மாநகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று, காந்திபுரம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட போது, காவல் துறையினர் அவர்களை கலைந்து போக செய்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டங்கள் காரணமாக சென்னைக்கும் தென்மாவட்டங்களுக்கும் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் வழக்கம் போல் இயங்க துவங்கின.

சென்னை நீங்கலாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களில் 27 காவல் ஆளிநர்களும், 4 அரசு பேருந்து பணியாளர்களும், 19 போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். மேலும், 7 காவல் வாகனங்கள், அரசு பேருந்துகள் உட்பட 50 அரசு வாகனங்கள், 2 தனியார் வாகனங்கள் ஆகியன சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் மெரினா கடற்கரையில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 250 நபர்களிடமும் 24.1.2017 அன்று காலை, காவல் துறையினர் அவர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கேட்டு கொண்டதன் பேரில், அவர்கள் சிறிது சிறிதாக கலைந்து அன்று மாலை அனைவரும் கலைந்து சென்றனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போன்றோரால் நடத்தப்பட்டு வந்த போராட்டத்தின் இடையே தேச விரோத, சமூக விரோத, தீவிரவாத சக்திகள் ஊடுருவினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல விடாமல் அமைதியான போராட்டத்தை திசை திருப்பி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராகவும், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் பல இடங்களில் அச்சக்திகள் வன்முறையில் ஈடுபட்டு காவல் துறையினரை தாக்கியும், காவல் நிலையங்கள், காவல் வாகனங்களுக்கு தீவைத்தும், சேதம் விளைவித்தும், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய போதும் காவல் துறையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் தூப்பாக்கிச்சூடு, தடியடி போன்ற பலப்பிரயோகம் போன்றவற்றில் ஈடுபடாமல் குறைந்தபட்ச பலத்தை மட்டுமே உபயோகித்து பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் சேதம் ஏற்படாமல் அச்சக்திகளைக் கலைத்து சட்டம் ஒழுங்கை பராமரித்தனர் என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

ஜல்லிக்கட்டு நடைபெற சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்ட மகிழ்ச்சியை, இதற்கு பங்களித்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் அனுபவிக்க முடியாதபடி சமூக விரோதிகள் செய்து விட்டனர்.

சென்னையில் நடந்த வன்முறை சம்பவங்களின் போது, சட்டவிரோதமாக செயல்பட்ட சமூகவிரோத கும்பல்களை கலைக்கும் போது காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இது தொடர்பாக சில காணொளி பதிவுகள் பல்வேறு ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. இது குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றசாட்டுகள் உண்மை எனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வழக்குகள் விசாரணையின் போது அமைதியான போராட்டத்தை திசை திருப்பி வன்முறையில் ஈடுபட்ட தீயசக்திகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.