கே.ஏ.பத்மஜா

கே.ஏ.பத்மஜா
கே.ஏ.பத்மஜா

பெண்களை ‘ப்ரொட்டாகனிஸ்ட்’ ஆகவும், முக்கியக் கதாபாத்திரங்களாகவும் பதிவு செய்த நல்ல சினிமா படைப்புகள் குறித்த பார்வையே இந்தத் தொடர்.

Puthiya Niyamam | Malayalam | A. K. Sajan | 2016

வழக்கமான கதையாக இருந்தாலும் சரி, அசாதாரணமான கதையாக இருந்தாலும் சரி, என்னை மலையாள சினிமா ஈர்ப்பதற்கு முக்கியக் காரணம், திரைக்கதையில் நிறைந்துள்ள யதார்த்தமும், வாழ்வியலைத் தழுவிய பதிவுகளும்தான்.
காதலை வெளிப்படுத்தும் காதலனும் காதலியும் வெளிநாடுகளில் டூயட் பாடவேண்டிய கட்டாயம் எல்லாம் அங்கே பெரும்பாலும் இருக்காது.

இயல்பு வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருப்பதால்தான் என்னவோ, சில அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்கள் என் மனதிலும் அழுத்தமாக ஒட்டிக்கொள்வது உண்டு. அந்த வகையைச் சேர்ந்ததுதான் சில மாதங்களுக்கு முன்பு நான் பார்த்த மலையாள சோஷியல் த்ரில்லர் ‘புதிய நியமம்’. ஏ.கே சாஜன் இயக்கிய இந்தப் படத்தில் மம்முட்டி நாயகன் என்றாலும், மையக் கதாபாத்திரம் நயன்தராவே.

எல்.பி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் லூயிஸ் போத்தன் (மம்முட்டி) ஒரு வழக்கறிஞர். பெரும்பாலும் விவாகரத்து வழக்குகளை கையாளும் இவர், சமூக ஆர்வலர், திரைப்பட விமர்சகர என பன்முகத் தன்மை கொண்டவர். தனது யதார்த்த நடிப்பில் எங்கும் சறுக்காமல் கதையின் மையத்தில் இருந்து படத்தை நாயகனாய் தூக்கி நிறுத்துகிறார். வாசுகி (நயன்தாரா) குடும்ப நிர்வாகி. கதகளி நாட்டியத்தில் புகழ்பெற்றவர். குடும்பத்தை கவனிப்பதும் மேடை நிகழ்ச்சிகளும்தான் இவரது அடையாளம். ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இவர்களுக்கு பள்ளிப் பருவத்தில் ஒரு பெண் குழந்தை சிந்தா.

கதையின் தொடக்கம் முதலே சிடுசிடுப்பாய் ஏதோ ஒருவித பயமும் பதற்றமும் கலந்து காணப்படுகிறாள் வாசுகி. அவள் அன்றாட நடவடிக்கைகளின் திடீர் மாற்றங்களால் எரிச்சல் படுகிறாள் மகள். மனைவியின் மாற்றத்திற்கான காரணம் புரியாமல், அதைத் தேடுகிறார் லூயிஸ். பின்னர், வாசுகியின் திடீர் மாற்றத்துக்கான காரணம் பார்வையாளர்களுக்கு புரிபடுகிறது. தனக்கு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பயங்கரத்தை நிகழ்த்திக் காட்டியவர்களைப் பழிவாங்க முடிவு செய்யு வாசுகி, தன் கணவருக்கு தெரியாமல் ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் உதவியை நாடுகிறாள்.

வாசுகி சம்பந்தப்பட்ட கொடூரர்களை பழிவாங்கினாளா? தன் கணவருக்கு அந்த ரகசியம் தெரியாமல் பாதுகாத்தாளா? பழையபடி தனது கலகலப்பான வாழ்க்கையை மீண்டும் தொடங்கினாளா? – இந்தக் கேள்விகள் தோன்றுவதற்கான பின்னணியும், அவற்றுக்கான பதில்களுமே ‘புதிய நியமம்’.

மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஒரு ‘த்ரிஷ்யம்’ போல மம்முட்டிக்கு ஒரு ‘புதிய நியமம்’ என்றெல்லாம் பேசப்பட்டாலும், த்ரிஷ்யம் அளவுக்கு இணையாக இது வரவேற்பைப் பெறவில்லைதான். பொழுதுபோக்கு சினிமா ரசிகர்களின் மனதில் தோன்றக் கூடிய பல கேள்விகளுக்கு ‘புதிய நியமம்’ பதில் சொல்லவில்லை என்றாலும், இயக்குநர் தைரியமாக இந்தக் கதையைத் தேர்வு செய்ததும், அதைத் திரைக்கதையில் கையாண்ட விதமும் எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகவும் ஈர்த்தது. இப்படத்தை ஒவ்வொரு கணவனும் மனைவியும் பார்த்தாக வேண்டும் என்றே கூறுவேன்.

விவாகரத்து வழக்குகளை கையாளும்போது, தம்பதிகளுக்கு லூயிஸ் கொடுக்கும் ஒவ்வொரு ஆலோசனையும் இன்றைய நடைமுறைக்கு மிகவும் தேவையானவை. ஒவ்வொரு தடவையும் சர்க்காஸ்ட்டிக் முறையில் இன்றைய திருமணங்கள், தம்பதிகளிடம் இருக்கும் அபத்தங்களை வசனங்களில் சாடியிருப்பது அத்தனையும் நிஜம்.

அடுக்குமாடி குடியிருப்பில் காட்டப்படும் ஒவ்வோரு கதாபாத்திரமும் கதையின் ஓட்டதுக்கும், திருப்பத்துக்கும் தேவைப்படும்போது சரியான விகிதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில் என்னை அதிகம் கவர்ந்த ஒரு கதாபாத்திரம், எதிர் குடியிருப்பில் வசிக்கும் வயதான தாத்தா. அவர் பேசுவது போல் கட்சியே இல்லை. ஆனால், அவர் முகபாவனையில் வாசுகிக்கு நடந்த கொடூரத்தின் வெறுப்பு, மர்மம், பரிதாபம் என அத்தனையும் காட்டியிருப்பார். நம் சமூகத்தில் நிகழும் கொடுமைகளை கண்டு நெஞ்சு விம்மி, எதிர்வினையாற்றாமல் தன்னைத் தானே அடக்கிக் கொள்ளும் ஊமைகளாக நம் மக்கள் பலரும் இருக்கிறார்களே, அவர்களின் பிரதிநிதிதான் அந்தத் தாத்தாவோ?

ஒவ்வொரு காட்சியும் நிதானமாக நகர்ந்தாலும், பார்வையாளரின் கவனம் முழுதும் குவிந்திடச் செய்வதால், கதையின் முடிவு வரை காக்கப்பட்ட ரகசியத்தால் நிச்சயம் ஒரு த்ரில்லிங் அனுபவத்தை ‘புதிய நியமம்’ கொடுக்கும்.

லூயிஸ் தன் மனைவிக்கு வரும் பிரச்சினையில், அவளை குறைகூறாமல், அவளையே பலிகடா ஆக்காமல், அவளுக்கு உறுதுணையாய் இருப்பதும், அவள் திடீர் மாற்றத்தை பொறுத்துக்கொண்டு செயல்படுவதும் மனமுதிர்ச்சி மிக்க கணவனின் செயல் எது என்பதை நமக்குக் காட்டுகிறது. ஒரு நல்ல கணவனாய் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? ஒரு பெண்ணுக்குத் தன் கணவனின் தேவைகள் என்னென்ன? – இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் மிகச் சிறந்த முன்னுதாரண கணவனாய் செதுக்கப்பட்டிருக்கிறது லூயிஸ் கதாபாத்திரம்.

வாசுகி தனக்கு நேரும் எதிர்பாராத அநியாயக் கொடுமையால், ‘தனக்கு வாழத் தகுதி இல்லை’ என முடிவெடுக்கும்போது, நமக்குள் பதற்றத்தைத் திணிக்கிறாள். தன்னைப் போல் இனி ஒருவரும் இப்படி பாதிக்கப் படக்கூடாது என்று தன்னை சீரழித்தவர்களை பழிவாங்க கையாளும் உத்திகளால் ஓர் அழகு நாகமாய் தெரிகிறாள் வாசுகி. வாசுகி கதாபாத்திரத்தில் வரும் நயன்தாராவின் அழகும், தைரியமும், உடையும், நடிப்பும் பார்க்கும்போது அவரை இன்னும் காட்சிப்பொருளாய் உபயோகிக்கும் தமிழ் சினிமா மீது சற்று கோபம் வரத்தான் செய்கிறது. நயன்தாராவின் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டுவந்த முதல் பத்து படங்களில் நிச்சயம் ‘புதிய நியமம்’ இருக்கும்.

தனக்கு உரிய முறையில் உதவக் கூடியவர்கள் உடன் இருந்தாலும், தனக்கு நேர்ந்த பெரும் பிரச்சினையின் விளைவுகளையொட்டிய தீர்வுக்கு, தனி ஒருத்தியாகவே களத்தில் இறங்கி பெண் வலிமையை பறைசாற்றிய வாசுகியை முதல் நிழலழியாக இங்கே பதிவதில் பெருமிதம்.

அழகிகள் தரிசனம் தொடரும்…