மைய அரசு புதிதாக நுழைத்துள்ள நீட் நுழைவுத்தேர்விலிருந்து சூப்பர் ஸ்பெசாலிட்டி எனப்படும் டிஎம்.,எம்.சி.எச். போன்ற படிப்புகளுக்கும் விலக்கு கேட்டு தமிழக அரசு புதிய சட்டத்திருத்தம் செய்யவேண்டும் என சிபிஎம் கட்சியின் தமிழகச் செயலர் ஜி.இராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அக்கட்சியின் மாநிலச் செயற்குழு இது பற்றிய முடிவு தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மருத்துவ மாணவர் சேர்க்கை அகில இந்திய அளவிலான நீட் தேர்வின் அடிப்படையில்தான் இனிமேல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியிலும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மத்தியிலும் கவலையும், அச்சமும் ஏற்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பல்வேறு அரசியல் கட்சிகளும் மருத்துவ மாணவர் சேர்க்கை மேல்நிலை இறுதித்தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழகத்தில் நடைபெறுவது தொடர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், தற்போதைய நிலை தொடரவும், 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையிலும் தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

மேலும், ஏற்கனவே பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத எம்.டி., எம்.எஸ்., இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அந்த எண்ணிக்கையை பாதுகாக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. மற்றும் எம்.எஸ் பிரிவுகளிலும் 85 சதவீத இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு பெறக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மசோதாவில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி பாடப்பிரிவு இடங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. சூப்பர் ஸ்பெஷாலிட்டி சேர்க்கைக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்களித்து சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்வதாக இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இராமகிருஷ்ணன் இதை வலியுறுத்தி கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.