தமிழகத்தில் இயங்கும் 33 ஆயிரத்து  973 ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி,  குறைந்த விலையில் சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, டீ தூள், உப்பு, சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள கிராமப்புற குடும்பங்கள் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களையே நம்பியுள்ளன.

வெளிக்கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.ஆனால்,  வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மலிவு விலையில் சர்க்கரை கிடைக்கச் செய்வதற்காக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.

சர்க்கரை மானியத் திட்டத்தின்படி, பொதுச் சந்தையிலிருந்து சர்க்கரை கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலம் அதை கிலோ 13 ரூபாய் 50 பைசா என்ற மானிய விலையில் மாநில அரசுகள் விற்பனை செய்து வருகின்றன. அதற்காக, கிலோ ஒன்றுக்கு 18 ரூபாய் 50 பைசா வீதம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியத் தொகை வழங்கி வருகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 40 கோடி பேர் பலன் பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், சர்க்கரைக்கு வழங்கும் மானியத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் “உணவுப் பாதுகாப்புச் சட்டம்” பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின்படி, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் என்ற வேறுபாடு கிடையாது என்பதால் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்கான மானியத்தை இனி மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்காது.

சர்க்கரைக்கான மானியத்தை மத்திய அரசு வழங்காது போனால், வெளிக்கடைகளில் விற்பனை ஆகும் அதே நாற்பது ரூபாய், ஐம்பது ரூபாய்க்குத்தான் ரேஷன் கடைகளிலும் சர்க்கரை விற்பனை செய்யப்படும் சூழல் உருவாகும். அல்லது மாநில அரசுகளே தங்களுடைய நிதியில் இருந்து மானியத்தொகையை அளிக்க வேண்டிய சுமையும் ஏற்படலாம்.

இரண்டு வேலை டீ என்கிற ஒரு சிறிய தேவையை பூர்த்தி செய்யவே குறைந்தது மாதத்திற்கு இரண்டு கிலோ சர்க்கரை தேவை இருக்கையில், இது போன்ற விலை உயர்வை எப்படி ஏற்று கொள்ள முடியும் என்று மக்களிடையே அதிருப்தி ஏற்படத் தொடங்கி இருக்கிறது. பொது விநியோகத் திட்டம் என்பது, கிராமங்களின் உயிர்நாடியாக இருக்கின்ற வேளையில், மத்திய அரசின் இது போன்ற அறிவிப்பு, அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்துகிறது.

கடந்த வருடமே, “ரேஷன் கடைகளை மூட மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறதா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை டைம்ஸ் தமிழில் வெளியிட்டோம். அதனுடைய லிங்க்.

ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா? விவசாய மானியம் நிறுத்தப்படுகிறதா?: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு?

சமூக நீதிக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் உண்டு. அந்த திட்டங்களிலயே பொது விநியோகத் திட்டம் என்பது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் ஒரு வேளை பசியையாவது  இல்லாம செய்யும் ரேஷன் திட்டமாகும். இந்த திட்டத்தில் மத்திய அரசு கை வைத்திருப்பது என்பது, அரசாளும் கட்ச்சிக்கே கேடு காலமாக விளையும் என்று தோன்றுகிறது.