சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வானதால் சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது.

சசிகலா, தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளது குறித்து சமூக ஊடகங்களில் கருத்தாளர்கள் தெரிவித்த சில கருத்துகள்…

LR Jaggu: கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஜெயலலிதா தமிழக முதல்வரானபோது தமிழக அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டதாக திமுகவினரும் அவர்களின் ஆதரவாளர்களும் மட்டுமே விமர்சித்தனர். இன்று ஜெயலலிதாவின் கால்நூற்றாண்டுகால உடனுறை தோழியாக ஒரே வீட்டில் வாழ்ந்த, அதிமுக என்கிற கட்சியிலும் அதன் ஆட்சியிலும் இரண்டாம் இடத்தில் இருந்து 28 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய சசிகலா முதல்வராகும்போது கால்நூற்றாண்டுகாலம் அதிமுகவைத் தாங்கிப்பிடித்தவர்களும் அந்த கட்சியின் அதிதீவிர ஆதரவாளர்களுமே “தமிழக அரசியலின் தரம்” அதளபாதாளத்தில் விழுந்துவிட்டதாக ஒப்பாரி வைக்கிறார்கள். குமுறுகிறார்கள். நல்லது. ஒப்பாரி ஓய்ந்த பிறகாவது ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வந்தபோது அவருக்கிருந்த எந்த தகுதி, தராதரம் மற்றுமுள்ள வேறுபல “திறன்கள், தகைமைகள்” இன்று இவர்கள் சசிகலாவிடம் காணாமல் தவிக்கிறார்கள் என்று பட்டியலிட்டால் மற்றவர்கள் தெரிந்து தெளிவடைய உதவியாக இருக்கும். நடுநிலை நல்லவர்கள் அந்த திறனாய்வுப்பட்டியலை வெளியிட்டு தமிழர்களையும் அவர்களின் அரசியலையும் மேம்படுத்த உதவுவார்கள் என்று நம்புவோமாக. சந்தடி சாக்கில் ஓபிஎஸ் நல்லவர் வல்லவர் என்கிற குட்டிக்காமெடியன்கள் வேறு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். வடிவேலு படத்தின் ஓரமாக வரும் சந்தானத்தின் “சின்னப்புள்ளத்தனம்” மாதிரி. தம்பிகளா ஓரமா இருங்க. ஓடறது வைகைப்புயல் படம். உங்களுக்கு இதில் எந்த ரோலும் இல்லை.

மற்றவர்களின் “அதிர்ச்சி”யை கூட புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஊடகத்துறையினர் வெளிப்படுத்தும் “அதிர்ச்சி” தான் புரிந்துகொள்ளவே முடியாத ஒரு வஸ்துவாக படுகிறது. ஐயா ராசா, அம்மா ராசாத்தி அம்புட்டு வெள்ளந்திகளா நீங்க? உண்மையை சொல்லுங்க, இது நடக்கும்னு நீங்க எதிர்பார்க்கவே இல்லையா? ஏறக்குறைய எல்லோருக்குமே தெரிந்த, எல்லோருமே எதிர்பார்த்த ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போது “அதிர்ச்சியடையவும் அறச்சீற்றம்” கொள்ளவும் என்ன இருக்கிறது? இன்றைய நிலைமைக்கும் நிகழ்வுக்கும் வெறும் கட்சி அரசியல் மட்டுமேவா காரணம்? காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட “நம்மினத்தின் நடுநிலைப் பங்களிப்பு” கொஞ்சமா நஞ்சமா? நாமே பங்கேற்று உருவாக்கி வளர்த்துவிட்ட ஒரு நாடகம் அரங்கேறும்போது அதன் ஒரு காட்சியில் திடீரென தோன்றி “அதிர்ச்சி”யடைவதாக நடிப்பதெல்லாம் நன்றாகவா இருக்கிறது? நம் “நடுநிலைக்கு” அது இழுக்கில்லையா? உடனே ஊடகங்களுக்கே உரிய default நிலைக்கு திரும்புங்கள். காரணம் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போனபோது அதிமுக அமைச்சர்கள் அழுத அழுகையைவிட இன்றைய ஊடகத்துறையினரின் திடீர் குபீர் “அதிர்ச்சி” மிகப்பெரிய நாடகத்தனமாகபடுகிறது. அவ்வளவு செயற்கை. அஜித் நடிப்பைப்போல…

Yamuna Rajendran: லிபரல் ஜனநாயகத்தில் யார் பலம் வாய்ந்தவர்கள் மக்களா அல்லது லிபரல் ஜனநாயக நிறுவனங்களா எனும் விவாதம் உலக அளவில் நடந்துவருகிறது. கிரேக்கத்தில் வெகுஜன வாக்கெடுப்பின் ஒப்புதலைப் புறக்கணித்து ஐஎம்எப்-ஐரோப்பிய வங்கி-கார்ப்பரேட்டுகள் கூட்டமைப்பு அம்மக்களின் மீது நிதிவெட்டுக்களைச் சுமத்தியிருக்கிறது.வெகுமக்கள் வாக்கெடுப்பின் பயனாக விளைந்த பிரிக்சிட் விவகாரத்தில் பாராளுமன்றமே தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டது என்கிறது பிரித்தானிய நீதியமைப்பு. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநிதிமன்றத் தீர்ப்புக்கு ஏன் தமிழக அரசு சவாலாகத் திகழ்கிறது என உச்சநிதிமன்றம் தமிழக அரசைக் கண்டித்திருக்கிறது. தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு வெகுமக்கள் எழுச்சி காரணம் என்பதை அறிக. மக்களது விருப்பம் எங்களுக்கு எதற்கு என அதிமுக எம்எல்ஏக்கள் தமது முதலமைச்சரைத் தேர்தெடுத்திருக்கிறார்கள். குடிமைச் சமூகமா, பாராளுமன்ற அதிகார நிறுவனங்களா, உச்சநீதிமன்றம் எனும் அமைப்பா எனும் கேள்வி நம் காலத்தின் மிக முக்கியமான கேள்வி. குடிமைச் சமூகம், தமது அதிகாரத்தின் பொருட்டுத்தான் அனைத்தும் என நிறுவ வேண்டிய நேரம் இது..

Arul Ezhilan : சசிகலா முதல்வராவதால் சிலர் பதட்டமடைவதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது!

Su Po Agathiyalingam: பொங்குவோரே ! கவனம் ! யாரைப் பொதுச் செயலாளர் ஆக்குவது என்பது அக்கட்சியின் உள்விவகாரம் ; யாரை முதல்வராக்குவது என்பது பெரும்பான்மை பெற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை ; அங்கீகரிப்பது சட்டத்தின் கடமை ; ஆட்டிப்படைப்பது சுரண்டல் கூட்டத்தின் வேலை ; அனைத்தையும் ஏற்க மறுப்பதும் திமிறி எழுவதும் சுயமரியாதையுள்ளோரின் உரிமை ; காலம் விடுத்துள்ள கட்டளை

Sap Marx: சசிகலா உறுதி

அம்மா வழிநடப்போமாம்-ஆற்றுமணல் தாதுமணல் கிரானைட் வனமரக்கொள்ளை லஞ்ச ஊழல் தொடரும் என்பது -சர்வாதிகாரியாய் இருந்தது–தமிழக மக்களை நாலுலட்சம்கோடி கடனாளியாக்கியது இவைதான் தொடருமோ??

ஜோ ஸ்டாலின்: தமிழகத்தின் நாலரைச் சசி : எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதில் எம்.ஜி.ஆர் தப்பி பிழைத்தது எம்.ஜி.ஆரின் அதிஷ்டம். எம்.ஆர்.ராதா சரியாக குறிபார்த்து சுடத் தவறியது, தமிழகத்தின் துரதிருஷ்டம். அப்போது தமிழகத்தை பீடித்த சனி, ஏறத்தாழ 40 ஆண்டுகளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களுக்கு இந்தக் கேடு தொடரும். அல்லது அதிகபட்சமாக வரப்போகும் நாலரை ஆண்டுகளும் இந்த ஏழரை சனி நீடிக்கலாம்.

Senthil Kumar:  முதல் முறை ராஜிவ் காந்தி மரணமும் இரண்டாவது முறை மிகப்பெரிய கூட்டணி பலமும் மூன்றாவது முறை தேமுதிக வும் நான்காவது முறை திமுகவின் தவறான தேர்தல் அணுகு முறையும் தான் ஜெயலலிதாவை நான்கு முறை ஆட்சி கட்டிலில் அமர வைத்தது மற்றபடி எம்ஜியாரின் விருப்பத்திற்குரியவர் என்பதை தவிர ஜெயலலிதாவுக்கே எந்த அரசியல் தகுதிகளும் கிடையாது வரலாறே இப்படி இருக்கும்போது அவருக்கு பின்னால் வருபவர்களிடம் அந்த தகுதியை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் …