முருகன் கன்னா

murugan-kanna
முருகன் கன்னா

தொலைகாட்சி ஊடகங்களிலும் சமுக ஊடகங்களிலும் நடத்தும் விவாதங்கள் தற்போது மிகவும் முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது ஆரோக்கியமான ஒன்றாக இருக்க வேன்டும். ஆனால் இதில் சில ஆரோக்கியமானதாகவும் சில சம்பிரதாய அடிப்படையில் கூட விவாதப் பொருளின் தன்மையை திசைதிருப்பி விடும் சூழல் ஏற்படுகிறது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ந்தேதி அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் இராஜேந்திரன் (லேட்) ராஜகிளி ஆகிய தம்பதியின் மகள் நந்தினி என்ற 16 வயது பெண் காணாமல் போனார் பின்னர் 2017 ஜனவரி மாதம் கீழ்மாளிகை எனும் கிராமத்தின் அருகே உள்ள ஒரு முந்திரி தோப்பில் உள்ள கிணற்றில் வாயில் பிரா வைத்து கட்டப்பட்டும் பெண்ணுறுப்பு அருக்கப்பட்டும் முழு நிர்வான நிலையில் பிணமாக கிடைத்தார். இதற்கான காரணிகளை ஆராய்கையில் நடந்துள்ள சம்பவங்கள் இப்படியும் நடக்குமா என்பது போல இருந்தது.

நந்தினி எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார் . அதற்கு மேல் படிக்க வாய்ப்பில்லை காரணம் வறுமை. இதனால் அக்கம் பக்கம் சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார் கடந்த சில மாதங்களாக கட்டிட சித்தால் வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்து போகும் கீழ்மாளிகை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞன் இந்துமுன்னணியின் செந்துறை ஒன்றிய செயலாளர். தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நந்தினி அவனது காதலுக்கு தொடர்ந்து மறுத்தாலும் சில காலத்திற்கு பின் மணமிறங்கி ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திய மணிகண்டன் தனது இச்சைகளுக்கு நந்தினியை பயன்படுத்தியுள்ளார். இதனால் நந்தினி கர்ப்பம் அடைந்திருக்கிறார் . நந்தினி தனது கர்ப்பமடைந்தததை மணிகண்டனிடம் கூற மணிகண்டன் நந்தினியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் யாரிடமும் சொல்ல முடியாமலும் தவித்துள்ளார் . நந்தினி மீண்டும் மணிகன்டனிடம் பேசியுள்ளார் இந்த முறை மணிகன்டன் திருமணத்திற்கு சம்மதித்துள்ளான் இதனால் நந்தினி மகிழ்ச்சியுடன் அவனுடன் சென்று விட்டாள் .

மண்கண்டன் கீழ்மாளிகையில் உள்ள ஒரு வீட்டில் நந்தினியை தங்க வைத்துள்ளார். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டனை பார்த்து பறைச்சியை கூட்டி வந்து வச்சிருக்க என்று பேசவும் அன்று இரவே நந்தினியை வேறு இடத்திற்கு மாற்றி விட்டார். நந்தினி காணவில்லை என்று தேடிய நந்தினியின் தாய் அக்கம் பக்கம் விசாரித்ததில் நந்தினியின் தோழி மூலமாக மணிகண்டனுடன் சென்றதை தெரிந்து கொள்கிறார் . உடனே நந்தினியின் தாய் இரும்பிலிகுறிச்சி காவல்நிலையம் சென்று தனது மகள் நந்தினியை மண்கண்டன் என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டார் என்று புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறை வாங்க மறுத்து மறுநாள் வரசொல்லி ராஜகிளியை திருப்பி அனுப்பி விட்டது. மறுநாள் கடத்தல் என்று புகார் பெற முடியாது காணவில்லை என புகார் கொடுங்கள் என்று கேட்டு அவர்களே காணவில்லை என்று ஒரு புகார் எழுதி அதில் கையெழுத்து வாங்கிக் கொண்டு உங்கள் மகள் பற்றிய தகவல் கிடைத்தவுடன் சொல்கிறோம் என்று கூறி அனுப்பி விட்டனர்.

ஜனவரி மூன்றாம் தேதி மணிகண்டனை அழைத்து காவல்துறையினர் விசாரிக்கிறார்கள். இதனை அறிந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் காவல்நிலையத்தில் உள்ளவர்களிடம் மணிகண்டனுக்கும் அந்த பெண் காணாமல் போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இதனால் நீங்கள் மணிகண்டனை விடுங்கள் மீறினால் காவல்துறை எங்கள் அமைப்பிற்கும் இந்துமக்களுக்கும் எதிராக உள்ளதாக நோட்டீஸ் போஸ்டர் அடிப்பேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மணிகன்டனை அனுப்பிவிடுகிறார்கள் .

ஜனவரி 4-ஆம் தேதி ராஜசேகரன் இந்து முன்னணி மீதும் அமைப்பினர் மீதும் தவறான செய்தி பரப்பி கலங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று செந்துறை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். பின்னர் 8ந்தேதி மண்கண்டனும் ராஜசேகரனும் பைக்கில் ஒன்றாக செல்வதை பார்த்து மீண்டும் நந்தினி குடும்பத்தாரும் சில சமுக ஆர்வலர்களும் சில அமைப்பினரும் ஒன்று சேர்ந்து காவல்நிலைத்தில் புகார் அளிக்கிறார்கள். இதனை அறிந்த மணிகண்டன் தரப்பில் ராஜசேகரனும் 9-ந்தேதி ஏற்கனவே கொடுத்த அதே புகார் விபரங்களோடும் மணிகண்டனை எங்கள் அமைப்பை விட்டு 29ந்தேதியே நீக்கி விட்டதாகவும் எஸ்பியிடம் புகார் கொடுக்கிறார். நந்தினி தப்பினர் 10ந்தேதி எஸ்பியை சந்தித்து மண்கண்டனையும் ராஜசேகரனையும் உடனடியாக கைது செய்து விசாரித்தால் நந்தினி குறித்த உண்மை தெரியும் என்று புகார் கொடுக்கிறார்கள்.

மணிகண்டனுக்கும் ராஜசேகரன் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுக்கு இதிலிருந்து தப்பி என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால் ஜனவரி 12ந்தேதி மணிகண்டனை விஷம் குடிக்கும் நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார். இதனை அறிந்த காவல்துறை வழக்கம் போல் ஒருவர் விஷம் குடித்தால் நடத்து விசாரனையை மணிகன்டன் விஷம் குடிக்க என்ன காரணம் என்று அவரது நண்பர்களான மணிவண்ணன், வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகியோரை அழைத்து விசாரிக்கிறார்கள். இதில் அவர்கள் நந்தினியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததையும் நந்தினியின் பிணம் இருக்கும் இடத்தையும் சொல்லிவிட்டார்கள். ஆனால் காவல்துறையினர் இதனை வெளியிடாமல் மறுநாள் காலை பிணத்தை கைப்பற்ற அனைத்து நடவடிக்கைகளையும் தயார் செய்து விட்டு நந்தினி குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கிறார்கள். நந்தினி குடும்பத்தார்கள் செல்லும் போது அனைத்தும் தயார்நிலையில் அடையாளம் காண்பிப்பதற்காக மட்டுமே காத்திருந்துள்ளது. நந்தினியை அடையாளம் காட்டியதும் காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.

நந்தினியின் கொலை குற்றவாளிகளான ராஜசேகரன் மணிகன்டன் உள்ளபட ஐந்து பேரையும் கைது செய்யக்கோரியும் பிணத்தை வாங்க மறுத்து நந்தினி குடும்பமும் சமுக ஜனநாயக இயக்கங்கள் அரியலூர் பேருந்து நிலையம் அருகே தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள் இதனால் காவல்துறையினர் ராஜசேகரனை தவிர்த்து மணிகன்டன் ,மணிவன்னன்,திருமுருகன் ,வெற்றிச்செல்வன் ஆகியோரை மட்டுமே கைது செய்கிறார்கள் ராஜசேகரனை கைது செய்ய மறுக்கிறார்கள் மற்றும் பிணத்தை வாங்காவிட்டாள் நாங்களே புதைத்து விடுவோம் என்றும் கூறி நந்தினி குடும்பத்தாரை மிரட்டுகிறார்கள் இதில் உடன்படாத நந்தினி குடும்பம் பின்னர் தொடர் நெருக்கடி காரனமாக 17ந்தேதி பிணத்தை வாங்க சம்மதித்து நந்தினியின் சகோதரி கையெழுத்திட்டு வாங்கி கொள்கிறார்கள் ( அந்த சமயம் நந்தினியின் தாய் ராஜகிளி சென்னை எஸ்சிஎஸ்டி ஆணையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார் அவருக்கு பிணம் வாங்குவது தெரியாது )

நந்தினிக்கு நீதிகேட்டும் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை கைது செய்யக்கோரியும் தொடர்ந்து பல சமுக முற்போக்கு ஜனநாயக இயக்கங்களும் போராட்டம் நடத்தினாலும் அதனை அரசும் காவல்துறையும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை இது குறித்து சமுக ஊடகங்களில் மட்டுமே செய்திகள் அதிகமாக பரப்பி வந்தது. தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் இதனை கண்டுகொள்ளவே இல்லை. தற்போது சில பத்திரிக்கைகளும் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளனர். ஸ்வாதி, நிர்பயா படுகொலை செய்யப்பட்டபோது தேசம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் சமுக அவலங்கள் குறித்தும் பேசிய ஊடகங்களும் தானாக முன் வந்து செயல்பட்ட நீதிமன்றமும் அரசும் நெல்லையில் கல்பனா சாதி ஆணவ கொலை செய்யப்பட்ட போதும் அரியலூரில் நந்தினி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டபோதும் கள்ள மௌனமே காட்டுகிறது.

நிர்பயாவுக்காகவும் ஸ்வாதிக்காகவும் முன்வந்து செயல்படுபவர்கள் ஏன் கல்பனாக்களுக்கும் நந்தினிகளுக்கும் முன் வருவதில்லை என்று ஆராய்ந்தால் அரசு , காவல்துறை, ஊடகங்கள் இவர்களிடம் உள்ள சாதிய பார்வையே அப்பட்டமாக வெளிப்படுகிறது. இதில் சில ஊடகங்கள் விவாத நிகழ்ச்சிகள் மூலமாக விவாதிப்பது போல் விவாதித்து பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தோடு செயல்படுவது நடக்கிறது. அதுபோல் தற்போது நந்தினி விவகாரத்தில ஏதோ சம்பிரதாயத்திற்காகவும் உள்நோக்கத்தோடும் ஒரு விவாத நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்கு சில முக்கிய நபர்களை அழைத்துவிட்டு பின்னர் நிராகரித்துள்ளார்கள். காரணம் தங்கள் நோக்கம் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக அதிலும் குறிப்பாக தோழர் வழக்கறிஞர் சவிதாவை அழைத்துள்ளார்கள். உடனே சவிதா தோழர் என்னிடம் நந்தினி குறித்த முழுவிபரங்களையும் கேட்டு அறிந்து கொண்டார். ஆனால் அவரை அதன் பின் அழைக்காமல் நிராகரித்துள்ளனர்.

விவாதத்தில் கலந்து கொன்ட நிர்மலா பெரியசாமி , பானுகோம்ஸ் இருவரும் நந்தினியின் ஒழக்கம் குறித்தும் அவர் தாயின் வளர்ப்பு குறித்தும் மற்றும் நந்தினியை தலித் என்று அடையாளப்படுத்தியதால் தான் பொதுசமுகம் இது குறித்து பேசவில்லை எனறும் பேசி தங்களது சாதிய வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தி திசைதிருப்பியுள்ளார்கள். ஸ்வாதிகூட கர்ப்பமாக இருந்தாகவும் இதனால் தான் அவர்கள் குடும்பமே ஸ்வாதியை கூலிப்படை வைத்து ஆணவ கொலை செய்ததாக தகவல் உள்ளது. அதற்கு ஆடுமேய்கும் அப்பாவியை பலி ஆடாக்கீயுள்ளார்கள். இதனால் தான் இப்போது வரை ஸ்வாதியின் பிரேதபரிசோதனை ரிப்போர்ட் கொடுக்கவில்லை ஏன் என சொல்லுவார்களா?

ஒழுக்கம் என்பதின் வரையறை என்ன ?

பொய் , வஞ்சகம், இச்சை, போதைபொருள் உட்கொள்வது , திட்மிட்டு தீங்குவிளைவிப்பது, திருட்டு போன்றவைகளே உள்ளடக்கம் கொண்டது. இதில் நிர்மலா பெரியசாமியும் பானுகோம்ஸ் இருவரும் ஏதும் செய்ததில்லை என்று சொல்ல இயலுமா இல்லை இதனை நடத்திய ஊடகங்கள் இதனை தவிர்த்துள்ளது என்று சொல்ல முன் வருமா? பட்டியல் சமுகம் என்றால் எப்படி வேண்டுமானாலும் கருத்தை திரித்து திசைதிருப்பி விட்டு அவர்களையே குற்றவாளி ஆக்கிடாலம் என்பதுதான் இவர்களை இப்படி எல்லாம் பேச வைக்கிறது? இவ்வளவு வக்கிரமாக சாதிய சிந்தனையோடு பேசுவர்களே இன்றைய சமுக சூழலில் ஒவ்வொரு பெண்களுக்கும் உள்ள மாதவிடாய் பிரச்சனைகள் குறித்து அறிவார்களா? உணவில் உள்ள அதிகமான ரசாயன கலப்பு காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு 45 நாட்கள், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் மாதவிடாய் காலமே வருகிறது என்பது தெரியுமா தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

7 வாரம் 50 நாட்கள் கூட நிறைவாக கருவை சுமந்து கொண்டு அதற்கு காரணமான தனது காதலனை கைப்பிடித்து தனது வாழ்க்கையை தொடங்க முயற்சித்தது ஒழுக்க கேடான செயலா? அந்த வளர்ப்பில் தவறு உள்ளதா?

முருகன் கன்னா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.