நந்தினி கொலை வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் குற்றவாளியை ஊக்கப்படுத்தும் விதமாக அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியதாக ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ 4-2-2017 அன்று புதிய தலைமுறை டிவி – ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் அரியலூர் தலித் சிறுமி நந்தினியின் கொலை வழக்கு குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தில் பேசிய அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி இவ்வழக்கில் காவல்துறை துரிதமாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ததாக மிகப்பெரிய பொய்யை லட்சக்கணக் கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சியில் பேசுகிறார்.

இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். குற்றவாளி யார் என்பதை நந்தினியின் தாயார் குறிப்பிட்டும் காவல்துறை குற்றவாளி மணிகண்டனை அழைத்து விசாரித்துவிட்டு திரும்பி அனுப்பிவிட்டனர். 16 தினங்கள் கழித்து நந்தினியின் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பின்னரே மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அரிய லூரில் ஜனநாயக மாதர்சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்புதான் விசாரணை துரிதமாக்கப்பட்டு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

எனவே இவ்வழக்கு விசாரணையில் அரியலூர் காவல்துறை காட்டிய மெத்தனப் போக்கை அதிமுக செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் நிர்மலா பெரியசாமி அப்பட்டமான பொய்யை சொல்லி மூடி மறைத்துள்ளார்.

மேலும் இவ்வழக்கில் படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமி நந்தினியின் தாய் ஒழுக்கத்தைக் கற்றுத் தரவில்லை எனவும், அதுவே இதுபோன்ற படுகொலைகள் நடப்பதற்கு காரணம் என்றும் குறிப் பிட்டார்.
நிர்பயா வழக்கில் இரவு 11 மணிக்கு அவள் பயணம் செய்ததும், சுவாதியின் படுகொலைக்கு அவளது செயல்பாடுகள் தான் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய ஆணாதிக்க கருத்துக்களை கேட்டு கேட்டு புளித்துவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இத்தகைய பேச்சுக்களை பேசிக்கொண்டே இருக்கப்போகிறார்கள்.

நிர்மலா பெரியசாமி போன்றோரின் இத்தகைய பேச்சு குற்றவாளிகளின் நடத்தை குறித்து என்றுமே பேசுவதில்லை. இப்படிப்பட்ட பேச்சுக்கள் குற்றங்களை குறைக்க உதவாது மாறாக குற்றவாளிகளை மேலும் குற்றம் செய்யத் தூண்டும் வகையில்தான் அமையும்.

இவரது அத்தகைய பேச்சுக்கள் பெண்களின் முன்னேற்றத்தை பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கும் செயலாகும்.

எனவே பெண்களை இழிவாகப்பேசிய அதிமுக வின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமியின் அரசியல் ஆதிக்க, ஆணாதிக்க, சாதியாதிக்க கருத்தை ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

– எஸ்.வாலண்டினா, மாநிலத் தலைவர்
பி.சுகந்தி, மாநிலப் பொதுச்செயலாளர்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.