கண்ணன் ராமசாமி

கண்ணன் ராமசாமி
கண்ணன் ராமசாமி

சமீபத்திய அசாதாரணமான சூழல்களை கவனிக்கும் போது ஒரு விடயம் நன்றாக புரிகிறது. சசிகலாவை முதல்வர் பதவிக்கு வரச் செய்வதற்கான வரலாற்று கையெழுத்து ஜெயலலிதாவின் மறைவு நாள் அன்றைக்கே போடப்பட்டு விட்டது. வரலாற்றில் இனி ஜெயலலிதாவின் வாரிசு யார் என்று தேடப்போகும் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த காணொளி காட்டித் தருவது சசிகலா என்னும் தலைவரைத் தான்! இந்த கருத்தின் பின்புலத்தில் தான் ஏன் தீபா அங்கு அனுமதிக்கப்படவில்லை என்கிற உண்மை ஒளிந்திருக்கிறது. எதிர்கால மடையர்கள் “சசிகலா எடுத்துக் கொடுத்த நவதானியங்களை ஜெயலலிதாலின் பிரேதத்தின் மேல் தூவினார் தீபக்” என்பதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எழுதப்பட்ட வரலாறு.

இந்த காட்சிப்படுத்தலுக்குள் தீபா பொருந்தவாய்ப்பில்லை என்பதாலேயே அவரை அந்த இடத்தினுள் அனுமதிக்கவில்லை அதிமுகவினர். சசிகலா தான் ஜெயலலிதாவின் இடத்திற்கு ஆசை பட்டார். ஆனால் அதனை பன்னீர்செல்வம் முன்மொழியும் படியாக காட்சிப்படுத்தியது அதிமுகவின் அடுத்த சாதனை. பின்பு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு நகல்கள் நமது எம்ஜிஆர் பேப்பர் கட்டிங்ஸ் மூலமாக ஆவணமாக்கப்பட்டிருக்கின்றன. தேர்ந்த தமிழ் எழுத்தாளரை வைத்து சசிகலாவின் கண்ணீர் பேச்சு வடிவமைக்கப் பட்டது. பின்பு ஜல்லிக்கட்டு முதலான மக்கள் பிரச்சனைகளுக்கு அவர் கடிதம் எழுதியதை அரசியல் தெரியாது என்பவர்களுக்கு பதிலாக கூற காட்சிகள் சொறுகப்பட்டு விட்டது.

ஜெயலலிதாவின் சடை புடவை செருப்பு என அனைத்தையும் காப்பியடித்து ஆதரவாளர்களை ஒரு வகையான உணர்ச்சிப் பிணைப்புக்குள் ஆட்பட வைத்துவிட்டனர். இவையெல்லாம் ஏன் நிகழ்ந்தன? மக்கள் ஜெயலலிதாவை மட்டுமே மதித்து மற்ற யாரையும் மதிக்காமல் ஆட்சியை மதிப்பிட்டதால் தான். இதை, மோடியை தனிப்பட்ட முறையில் சிலர் புகழ்வதை வைத்தும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். பாஜகவில் பல சீனியர்கள் இருந்தும் மோடி என்பவரின் so called  Gujarat சாதனையை கட்டமைத்து பஜக அவரிலிருந்து ஒரு தலைவரை உருவாக்கியது. தீர்க்கமான முடிவுகளை தனிப்பட்ட முறையில் ஒருவரால் எடுத்து விடமுடியாது என தெரிந்தும் செல்லாக் காசு விவகாரம் Surgical strike முதலான முடிவுகளில் மோடிக்கு மட்டும் சாதனை மெடலை அணிவிக்க மக்கள் தயாராகி இருப்பதன் அடிப்படையில் தான் சசிகலாவின் வளர்ச்சியும் சாத்தியப்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்தின் மேல், கூட்டு முயற்சியின் மேல் நம்பிக்கை இழக்கும் மக்களின் இந்த மனநிலை ஆபத்தான விளைவுகளை அளிக்கவல்லது. முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தனிமனித தலைமையால் தான் முடியும் என்னும் நம்பிக்கையினால் தான் வரலாற்றில் பல தலைவர்கள் அவர்களுடைய காலத்தில் செய்த தவறை கட்டுப்பாடுகள் இன்றி தைரியமாக அரங்கேற்றினார்கள். செல்லாக் காசு முதலான முடிவுகளை பொருத்த வரையில் அதன் விளைவுகளை உடனடியாக புரிந்து கொள்ள முடியாத மக்களுக்கு விவாதங்களில் இந்த தலைவர்களுக்கு சாதகமாக பேச சில வாதங்களை கட்சிகளே உருவாக்கித் தந்துவிடுகின்றன. இதனால் விமர்சனங்களை புறந்தள்ளி அந்தத் தலைவரை நம்பி எதிர்காலத்தை ஒப்படைப்பதே சிறந்த செயல் எனவும் அதுவே தேசபக்தி எனவும் முடிவுக்கு வர மக்களால் முடிகிறது.

தற்போதும் சசிகலா எந்த பதவியிலும் இல்லாமல் முதலமைச்சர் ஆவதற்கு வரலாற்றிலிருந்து பல உதாரணங்களை முன்வைத்து அவர் பக்க நியாயத்தை கட்டமைக்க அதிமுகவினர் முயற்சிப்பதன் பின்புலத்தில் இந்த தலைவர் மோடில் இயங்கும் பொது மனசாட்சிக்கு வாதங்களை உருவாக்கித் தரும் முடிவே உள்ளதென்று தீர்க்கமாக சொல்லலாம். நாளை சசிகலாவும் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெறலாம். அதை மக்களின் மனசாட்சி என அக்கட்சியினர் பரப்புரையின் மூலம் நியாயப்படுத்துவார்கள். ஆனால் அன்று ஜெயலலிதாவின் அருகில் நிற்கும் சசிகலாவின் அழுகை காட்சிப்படுத்தப்பட்ட விதம் நம் மனசாட்சியை எப்போதும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும். இது உன்னைக் குறிவைத்துத் தானே காட்சிப்படுத்தப்பட்டது என்று.

கண்ணன் ராமசாமி, எழுத்தாளர். வெண்புள்ளிகள் குறித்ததான ‘ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு’, இவர் எழுத்தில் வெளியான இரண்டாவது நாவல்.