கதிர்வேல்

கதிர்வேல்
கதிர்வேல்

”வேலைக்காரி என்பதால் எதிர்ப்பதா? அப்படியானால் வேலைக்காரிகள் எல்லாம் கேவலமா? இதற்காகவே அவர் சீயெம் ஆக வேண்டும்” என்று ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது.

அந்த கோஷ்டியில் உள்ளவர்கள் ஆகட்டும், நீங்களாகட்டும், நானாகட்டும் எல்லோருமே வேலைக்காரன் அல்லது காரிகள்தான். உழைத்து சம்பளம் வாங்கும் எல்லோரும் வேலைக்காரர்கள் அல்லாமல் வேறென்னவாம்?

எனவே, எதிர்ப்பு என்பது அவர் வேலைக்காரி என்ற அடிப்படையில் எழுந்தது அல்ல. சொல்லப் போனால் அவர் வேலைக்காரியாக இருந்ததே இல்லை. “அம்மாவுக்கு பணிவிடை செய்வதன்றி வேறேதும் அறியேன்” என்று அவர் சொன்னது அடக்கத்தின் வெளிப்பாடு அன்றி வேறேதும் இல்லை.

உயிர்த் தோழி, உடன் பிறவா சகோதரி, உற்ற ஆலோசகர் என்று அத்தனை பெருமைகளையும் அடைமொழியாக அவருக்கு வழங்கியிருக்கிறார் மறைந்த முதல்வர்.

”அரசியலில் எனக்கு துளியும் ஆர்வமில்லை” என்று எழுதிக் கொடுத்துவிட்டு வேதா நிலையத்துக்குள் மறுபிரவேசம் செய்தவர், ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் எதிர்பார்க்கிற எந்த ஒரு அடிப்படை அரசியல் அனுபவத்தையும் பெறாமல், தன்னை ஆதரித்த தலைவரின் வீட்டில் தொடர்ந்து குடியிருக்க என்ன உரிமை இருக்கிறது என்பதைக்கூட மக்களுக்கு தெரிவிக்காமல், அங்கிருந்தபடி கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற காய் நகர்த்துவது நியாயமான செயல் அல்ல என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள்.

அது ஒரு பெரிய கட்சி. அரசியல் அனுபவம் மிகுந்த ஏராளமான பிரமுகர்கள் இருக்கிறார்கள். ஆட்சி நிர்வாக அனுபவம் மிகுந்தவர்களும் இருக்கிறார்கள். கட்சியை காப்பாற்றுவதுதான் உண்மையான நோக்கம் என்றால், அவர்களில் ஒருவரை ஆட்சிப் பொறுப்பில் நியமனம் செய்துவிட்டு கட்சி நிர்வாகத்தை கவனிக்கலாம்.

பொதுச் செயலாளர் பதவியும் முதல்வர் பதவியும் ஒரே நபரிடம் இருந்தால்தான் நல்லது என்பது பசப்பு வாதம். இதைவிட பெரிய பதவியான இந்திய பிரதமர் நாற்காலியில் பிரபலம் அல்லாத ஒரு நல்லவரை அமர்த்தி விட்டு கட்சியை மட்டும் கவனித்தார் சோனியா. அதனால் அங்கே இரட்டை பவர் சென்டர் உருவாகி எதுவும் நாசமாய் போனதாக யாரும் குற்றம் சொல்லவில்லை.

இங்கே பன்னீர்செல்வமும் அப்படித்தான் செயல்பட்டார். ஆனால் ஆரம்பம் முதலே அவர் சுதந்திரமாக அல்லது சுயமாக செயல்பட முடியாதபடி எக்கப்பட்ட முட்டுக் கட்டைகள். ஒரு பிரச்னை சம்மந்தமாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதினால்கூட போட்டிக்கு அதிமுக பொதுச் செயலாளர் என்கிற ஹோதாவில் இவரும் ஒரு கடிதம் எழுதுவது என்பதில் தொடங்கி, எங்கோ கண்ணுக்கு தெரியாத கிராமத்தில் உள்ள ஏதோ ஒரு சங்கத்தின் தலைவர் தனது குடும்பத்துடன் வந்து பொ.செ.வை சந்தித்தார் என்று தந்தியில் படத்துடன் செய்தி வரவழைப்பது வரை பன்னீரின் பெயர் ஆக மட்டும் பலவீனப்படுத்தப் பட்டது.

பன்னீர் இடத்தில் ஒரு பி.எச்.பாண்டியன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அரசியல் சாசனம் பற்றி தெரிந்தவர்களுக்குதான் இது புரியும். முதல்வர் என்பது சாதாரண பதவி அல்ல. தனக்கு இல்லை என்றால் அது வேறு எவருக்கும் கிடைக்க விடக்கூடாது என்று தடுக்க அதில் உள்ளவருக்கு அபரிமிதமான அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது அரசியல் எதிரிகளை, சொந்தக் கட்சியில் உள்ளவர்களே ஆனாலும், தற்காலிகமாவது புழலில் கம்பி எண்ண வைக்கும் அதிகாரமும் அவருக்கு இருக்கிறது. இது தவிர எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதியில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து நல்ல பெயர் வாங்கி, அடுத்த தேர்தலிலும் தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முதல்வரால் பெரிதும் உதவ முடியும். பன்னீர் இதில் எதையும் செய்யவில்லை. பரிசுத்தமான விசுவாசியாக மட்டும் செயல்பட்டார்.

புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் பல வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளனர். அவரே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார். மேலும் இரு வழக்குகளில் இருந்து அவரை விடுவித்தது செல்லாது என சமீபத்தில்தான் ஐகோர்ட் அறிவித்துள்ளது. அவருடைய கணவர் மீதிருந்து விலக்கப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வர வேண்டும் என மேல் கோர்ட் ஆணையிட்டுள்ளது. மற்றொரு குடும்ப உறுப்பினர் பல லட்சம் அபராதம் கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் அவர் கொஞ்சம் காத்திருக்கலாம் என முடிவு செய்திருந்தால் அது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும்.

ஜெயலலிதா மரணம் அடைந்து மிகச்சரியாக ஒரு மாதமே முடிந்த நிலையில் அவர் அமர்ந்திருந்த முதல்வர் நாற்காலியில் தான் அமர இவர் எடுத்த முடிவு பெரும்பாலான கட்சித் தொண்டர்கள், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே அமைந்திருக்கிறது. வெகுஜன ஊடகங்கள் என்னதான் மறைக்க முயன்றாலும், சமூக ஊடகம் இருப்பதால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பு அடக்க மாட்டாமல் வெளிப்படுகிறது.

அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் மட்டும் இந்த முடிவுக்கு முழு மனதாக சம்மதிக்க காரணம், இன்னொரு தேர்தலை இப்போது சந்திக்க அவர்களில் எவரும் தயாராக இல்லை என்பதுதான்.

நியாயம், தர்மம் எப்படி இருந்தாலும் சட்ட ரீதியாக சசிகலா முதல்வராவதை தடுக்க பொதுமக்களால் முடியாது என்பது எதார்த்தம். சென்ற ஆண்டு மே மாதம் தேர்தலில் இந்த மக்கள் ஓட்டு போடும்போது, ஜெயலலிதா தலைமையில் ஓர் அரசு வர வேண்டும் அல்லது தொடர வேண்டும் என்றுதான் விரும்பினார்களே தவிர, முதல்வர் யாராக இருந்தால் என்ன, அதிமுக ஆட்சிதான் தொடர வேண்டும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை.

ஜெயலலிதா இறந்தபின் பன்னீர் செல்வத்தை தமிழக மக்கள் சகித்துக் கொண்டதற்கு காரணம், அவர்கள் அங்கீகரித்த ஜெயலலிதாவே அவரைத்தான் தனது இடத்துக்கு தேர்வு செய்தார் என்பதுதான். இரண்டு முறை ஜெயல்லிதா முதல்வர் பதவியில் இருந்து இறங்க நேர்ந்த சந்தர்ப்பங்களில் பன்னீர்செல்வத்தையே அவர் அங்கு அமர வைத்தார். என்றேனும் ஒருநாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சசிகலா அந்த நாற்காலியில் அமரக்கூடும் என்று தமிழ்நாட்டு மக்களோ அதிமுக தொண்டர்களோ எந்தக் காலத்திலும் கற்பனைகூட செய்திருக்கவில்லை.

எல்லாம் தாண்டி இன்று சசிகலா அதிமுக எம்.எல்.ஏ.க்களின் தலைவராக வந்துவிட்டார். முறையற்ற வழி என்று சொல்ல முடியுமே தவிர, சட்டப்படி தப்பு வழி என சொல்ல முடியாது. அவர் இதுவரை ஒரு பஞ்சாயத்து கவுன்சிலராகக்கூட இருந்ததில்லை என்பது விமர்சனத்துக்கு உதவலாமே தவிர, சட்டத்துக்கு அது குறித்து கவலை இல்லை.

முதல்வராக சசிகலாவுக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதை தவிர வேறு வழியில்லை. அதிலிருந்து ஆறு மாதத்துக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து அவர் எம்.எல்.ஏ ஆக வேண்டும், அவ்வளவுதான். பிறகு சட்டசபையில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு, அதாவது 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக நிரூபிக்க வேண்டும். இப்போதைக்கு அதைவிட 18 எம்.எல்.ஏ.க்கள் அதிகமாக இருப்பதால் சசிகலா பயப்பட எதுவுமில்லை. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்கிற எண்னம் பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கு இல்லை என்பதும் சசிகலாவுக்கு சாதகமான அம்சம்.

ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகரில் போட்டியிடும் எண்ணம் சசிகலாவுக்கு இல்லை என தோன்றுகிறது. தென் தமிழக தொகுதிகள் எதிலாவது அவர் போட்டியிட்டு வெற்றி பெற வசதியாக ஒரு அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ பதவி விலகக் கூடும். அந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தப்பித் தவறி ஒன்றுபட்டு பொது வேட்பாளரை நிறுத்தி தீவிரமாக வேலை செய்தால் அது மட்டுமே சசிகலா சந்திக்கும் உண்மையான சவாலாக அமையும்.

ஒருவேளை அந்த இடைத்தேர்தலில் அதிமுக, அதாவது சசிகலா, தோற்க நேர்ந்தால் அது தமிழக அரசியலில் அடுத்த மாற்றத்துக்கு ஆரம்பமாக இருக்கும். இன்றுள்ள குழப்பமான அரசியல் சூழலில் மோடியின் மத்திய அரசு எத்தகைய அணுகுமுறையை கையாளப் போகிறது என்பதுதான் சராசரி தமிழர்களின் கேள்வியாக நீடிக்கிறது. யார் முதல்வராக வந்தால் பிஜேபிக்கு லாபம் என்று பார்த்து செயல்படுவது முதல் ஆப்ஷன். யார் முதல்வராக வந்தாலும் வராவிட்டாலும் கவலையில்லை என்று சட்டத்தின் அடிப்படையில், மக்களால் சந்தேகிக்கப்படாத ஒரு அரசை ஏற்படுத்த வழி வகுப்பது அடுத்த ஆப்ஷன். மோடிக்கு இங்கு நடக்கும் முதல் அக்னி பரீட்சை இதுதான்.

கதிர்வேல், மூத்த பத்திரிகையாளர். நம்ம அடையாளம் இதழின் ஆசிரியர்.