சென்னை மதனந்தபுரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாஷினியின் குடும்பத்தினரை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

போரூர் அருகேயுள்ள மதனந்தபுரம் மாதா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாபு- ஸ்ரீதேவி தம்பதி. இவர்களின் மகளான ஹாஷினி (7 வயது) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட தன்வந்த் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஹாஷினி குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ” காட்டுமிராண்டித்தனமான குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் மூலம் வெகு விரைவில் தண்டனை பெற்றுத் தர வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராவது என்ற போட்டியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்களே தவிர பெண்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஊடகங்கள் பரபரப்பான செய்திகளுக்கு அதிக விளம்பரங்கள் தருவதைவிட இதுபோன்ற மோசமான, கொடுமையான சம்பவங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதனுடைய ஆணையர் இதுவரைக்கும் இந்தப் பக்கமே வரவில்லை என்பது இன்னும் கொடுமை. அரியலூரில் நந்தினி என்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஈரம் காயும் முன் ஹாசினி கொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் -குறிப்பாக பச்சிளங்குழந்தைகளின் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்த காவல்துறைக்கு ஆளுநர் அவர்கள் உத்தரவிட வேண்டும்” என தெரிவித்தார்.