சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன்

நாலாங் கிளாஸ் படிக்கிற பையன் ஒருத்தன் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தானாம். அப்போது ஒரு பாலை சிக்ஸருக்கு அனுப்பிய போது, என் வாழ்க்கையில இப்படி ஒரு ஷாட்ட பாத்ததே இல்லை என்றானாம். அதைப் போலத்தான் எனக்கும் சின்ன வயதுதான். ஆனால் என் வாழ்க்கையில் இப்படி ஒரு மாநிலமே ஒருவை வெறுத்துப் பார்த்ததில்லை. என்ன போஸ்டர் ஒட்டினாலும் முகத்தில் எதையாவது கொண்டு போய் அப்பி விடுகிறார்கள். அப்படி அப்புபவர்களுக்குப் பயந்து மலைமேலே மரத்திற்கு மேலே எல்லாம் தட்டி போர்டை வைத்திருக்கிறார்கள். அதன் மேலே ஏறியும் அதே வேலையைச் செய்கிறார்கள். ஏன் இந்த வெறுப்பு?

தவிர இவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாதா? பத்திரிகைகளுக்குத் தெரியாதா? ஆளுநருக்குத் தெரியாதா? முட்டுக் கொடுக்கிறவர்களுக்குத் தெரியாதா? இந்த நாடகத்தை இதற்கும் மேல் இழுத்துக் கொண்டு போவது நல்லதில்லை என்றுதான் தோன்றுகிறது. தமிழகம் முழுக்க இருந்து மக்கள் தன்னெழுச்சியான எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள். கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை தங்க வைத்த இடத்தில் இளைஞர்கள் கிளம்பி வந்து போராடுகிறார்கள். ஊரில் என்னுடய அம்மாவும் அவர்களுடைய சிநேகிதிகளும் டிக்கெட் போட்டுத் தரச் சொல்லி நச்சரிக்கிறார்கள். என்ன செய்வதாக உத்தேசம் என்றால், நேரே பீச்சுக்கு போய் சமாதியில் ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு, போயஸ் கார்டன் போய் மண்ணை வாரித் தூற்ற வேண்டுமாம்.

ஊர்ப்பக்கம் மினி பஸ்ஸில் கட்சிக்காரர் ஒருத்தர் ஏறி சின்னம்மாவிற்கு சப்போர்ட் செய்து பேசியிருக்கிறார். அத்தனை கூட்டமும் சேர்ந்து கத்திக் கூப்பாடு போட்டு இறக்கி விட்டிருக்கிறார்கள். அளவு கடந்த வெறுப்பு தமிழகம் முழுக்க கரை புரண்டோடுகிறது. இந்த மேற்படி எம்.எல்.ஏக்கள் வந்தால் சாணியைக் கரைத்து ஊத்துவோம் என மதுரை பக்கம் சவால் விட்டுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. நிறையச் சம்பாதித்தாகி விட்டது. எங்கிருந்தாலும் வாழ்க என சொல்வதற்குக்கூட மக்கள் தயாராக இருக்கிறார்கள். வேதா நிலையத்தை விரைவில் கைப்பற்றினால் அதைவிட அசிங்கம் எதுவும் இருக்காது.

உண்மையில் சசிகலா காதிற்கு இதுபோன்ற தகவல்கள் போய்ச் சேர்கின்றனவா என்பதிலேயே ஐயம் இருக்கிறது. பொதுவாகவே மேலே போகப் போக காதை மூடிக் கொள்வதுதான் இயல்பாக இருக்கிறது என்பதால் இதைச் சொல்கிறேன். இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தின் பேராசையின் அடிப்படையிலான முயற்சியே. மக்கள் விரும்பாத எதுவும் நின்றதாகச் சரித்திரம் இல்லை. ஊரில் சின்னம்மாவிற்கு சப்போர்ட் செய்த அண்ணன் ஒருத்தருக்கு அந்த அண்ணி சாப்பாடு போட மறுத்திருக்கிறது. மெல்லமாக ஒரு மௌனப் புரட்சி உருவாகிக் கொண்டிருப்பதாகவே அறிகுறிகள் தெரிகின்றன. மாணவர்கள் மெரீனாவில் இலட்சக்கணக்கில் கூடுவார்கள் என ஒரு மாதத்திற்கு முன்பு சொல்லியிருந்தால் நம்பியிருப்பீர்களா? அதைப் போலத்தான் இதுவும். மக்கள் கூடி அகற்றுவதற்குள் அவர்களே விலகிப் போவதுதான் அவர்களின் கௌரவத்திற்கு அழகு. தனிப்பட்ட முறையில் அவர்கள் பகைவர்கள் இல்லை. என் சோற்றில் மண்ணை அள்ளியும் போடவில்லை அவர்கள். ஆனால் மாநிலத்தின் வளர்ச்சியில் மண்ணை அள்ளிப் போட்டு விடுவார்கள் என மக்கள் நினைக்கிறார்கள். மீண்டும் ஒரு கூட்டம் சேர்ந்தால் மெரீனா தாங்காது. உண்மை நிலவரத்தை மட்டுமே பதிவு செய்கிறேன். மக்கள் மௌனமாய் ஒன்றுதிரள ஆரம்பித்திருக்கிறார்கள். வேண்டாம் விபரீத விளையாட்டு. நாடகத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என கவர்னர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர். சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.