சென்னை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார் சசிகலா. அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களைச் சொன்னார்.

“எம்ஜிஆர் மறைவின்போது கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவை அவரது இறுதிச் சடங்கின் போது அனுமதிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ஜெயலலிதா, தமக்கு கட்சியும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தார். உங்களை எதிர்த்தவர்கள் முன்னால் வளர வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவுக்கு நான்தான் அரசியல் ஆர்வத்தினை ஊட்டினேன். அத்தகையை சூழலில் இருந்து இன்றைய நிலைக்கு அதிமுகவைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அவரது ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஜெயலலிதா மறைந்த போது, கட்சியை உடைக்க சதி நடந்தது. அதைத் தடுப்பதற்காக நான் உடனடியாக பன்னீர் செல்வத்தையும் அமைச்சர்களையும் உடனடியாக பதவி ஏற்கச் சொன்னேன். அப்போது பன்னீர் செல்வமே நான்தான் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்றார். எனக்கு அப்போது ஜெயலலிதாவின் உடல் அருகில் இருப்பதுதான் முக்கியம். அப்படி தேவை என்றால் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றேன். எனக்கு பதவி ஆசை இல்லை. நான் நினைத்திருந்தால் அப்போதே முதலமைச்சராகியிருக்க முடியும்.

இதுகாபந்து அரசாக இருந்தாலும் அதிமுக அரசுதான். அதிமுக அரசு தொடருவதற்காக எனது உயிரையும் விடத் தயார். காவல்துறைக்கு இடையூறு ஏற்படாமல் அமைதிப் போராட்டம் தொடரும். அதிமுகவை அழிக்க சதித்திட்டம் தீட்டுவதில் பலரும் ஈடுபட்டனர். எத்தனை ஆண்கள் எதிர்த்தாலும் தனியொரு பெண்ணாக சாதிப்பேன். 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இணைந்து பயணித்துள்ளேன். எனக்கு பயமில்லை” என தெரிவித்தார்.