சி. மதிவாணன்

சி. மதிவாணன்
சி. மதிவாணன்

அஇஅதிமுகவின் கொள்ளையர்கள் தேவைப்படும்போது மக்கள் நலன் என்று பேசுவார்கள். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அல்லது சலுகை கொடுப்பதுதான் மக்கள் நலன் என்பது அவர்கள் எண்ணம். மற்றபடி அரசு என்பது கொள்ளையடிக்கக் கொடுக்கப்பட்ட லைசென்ஸ். அவ்வளவுதான். இதனைத்தான் முதல் குற்றவாளி ஜெ மீது சாட்டப்பட்ட குற்றங்களை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காட்டுகிறது.

ஆனால், கண்ணுக்குத் தெரியாத மற்றொரு அம்சம் இருக்கிறது. தமிழகத்தின் சாதிகளைப் பயன்படுத்தி, அந்த சாதிகளில் உள்ள முன்னேறிய ஆட்களை தன் பிடிக்குள் கொண்டுவந்து கொள்ளையடிக்க அனுமதித்து கமிஷன் பெறுவது ஜெவின் வழிமுறை. (திமுக உள்ளிட்ட கட்சிகளும் இதுபோன்ற சாதி வழிமுறையைத்தான் பயன்படுத்துகின்றன.)

தமிழக அமைச்சரவையின் தற்போதைய நிலையைப் பார்ப்போம்.

கவுண்டர் சாதியைச் சேர்ந்த 28 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் மந்திரிகளின் எண்ணிக்கை 5. (அதாவது ஏறக்குறைய 6 எம்எல்ஏவுக்கு ஒரு அமைச்சர்)

தேவர் சாதியைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் மந்திரிகளின் எண்ணிக்கை 9.(அதாவது ஏறக்குறைய 2 எம்எல்ஏவுக்கு ஒரு அமைச்சர்)

வன்னியர் சாதியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் மந்திரிகளின் எண்ணிக்கை 5. (அதாவது ஏறக்குறைய 4 எம்எல்ஏவுக்கு ஒரு அமைச்சர்)

தலித் சாதிகளைச் சேர்ந்த 31 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் மந்திரிகளின் எண்ணிக்கை 3. (அதாவது ஏறக்குறைய 10 எம்எல்ஏவுக்கு ஒரு அமைச்சர்)

பிற சாதிகளைச் சேர்ந்த 32எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் மந்திரிகளின் எண்ணிக்கை 10. (அதாவது ஏறக்குறைய 3 எம்எல்ஏவுக்கு ஒரு அமைச்சர்) (இச்சாதிகளில், மீனவர், நாயுடு நாடார் போன்ற சாதிகள் அடங்கும்)

கவனித்துப் பார்த்தால், தமிழகத்தின் ஆதிக்க சாதிகளாக இருக்கும் சாதிகளான தேவரும், கவுண்டரும் அதிக இடத்தைப் பெற்றிருப்பதையும், தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் கொண்டிருந்தும் மிகக் குறைந்த மந்திரிகளைப் பெற்றிருப்பதையும் பார்க்க முடியும். இந்த நிலையில் தனபாலுக்கு பதவி கொடுத்தது பற்றி பத்திரிகைகள் சிலாகித்து எழுதின.

தலித்துகளை சமூக விரோதிகள் என்று சட்டமன்றத்தில் சொன்ன ஜெ, தன்னை ஒரு பெருமைமிகு பார்ப்பனப் பெண் என்றும் சொல்லிக்கொண்டார்.

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணை கொன்றவன் என்று தலித் இளைஞன் ஒருவனைப் பிடித்து கொலை செய்ய வேகம் காட்டிய ஜெ அரசு, நந்தினி, அதற்கு முன்பு கொலை செய்யப்பட்ட தலித் பெண்கள் குறித்து, ஆணவக் கொலைகள் குறித்து காட்டிய ஆமை வேகமும், காவல்துறை அதிகாரி விஷ்ணு பிரியா தற்கொலை விவகாரம் மூடி மறைக்கப்பட்டது குறித்த செய்திகளையும் நாம் அறிவோம். அரசின் இச்செயல்பாடுகள்/ செயலின்மைகள் சாதிக் கட்டமைப்பின் அதிகாரம் ஆட்சியைக் காட்டுவதாகவே உள்ளது.

ஆக, சாதிக் கட்டமைப்பை சட்டமன்றத்துக்கு உயர்த்தி, முதலாளிகளுக்குச் சேவை, ஆதிக்க சாதிகளின் செல்வாக்கு மிக்க நபர்களைக் கையில் வைத்துக்கொண்டு வோட்டுகளைக் கைப்பற்றுவது, கொள்ளை அடிப்பது என்பதுதான் ஜெயலலிதா கண்ட ”கொள்கை”.

அப்படி கொள்ளையடித்து மாட்டிக்கொண்ட ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்தப் போகிறோம் என்றுதான் ஓபியும் எடப்பாடியும் சொல்கின்றனர்.

சமூக நீதி விரும்புபவர்கள் அதற்கு வழிவிடலாமா?

சி. மதிமாணன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.