வறட்சி, மழை பெய்யவில்லை ஒருபுறம், பாழாய் போன மழை இப்பவா பேய்ஞ்சு என் குடியை கெடுக்கனும் என்று ஒருபுறம் இப்படி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்தியை கேட்காத நாளில்லை. இந்த வருடத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஏழை விவசாயிகள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தம் விவசாய நிலத்திலேயே தமது உயிரை உரமாக்கி வருகின்றனர். எனினும் இதனைத் தடுக்க எந்த அரசாங்கமும் நமக்கு உதவுவதாகவும் தெரியவில்லை. மாபெரும் புரட்சியாக உலக மக்கள் அனைவராலும் பேசப்பட்ட நமது இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் ஆங்காங்கே சில மாற்றத்தைக் கொண்டு வந்து இருக்கின்றது. அந்நிய நாட்டுப் பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் மக்கள் மனதில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் விவசாயிகளின் இறப்பு என்ற செய்திக்கு மட்டும் பஞ்சமில்லை.
எங்கள் தோட்டத்தில் விளையும் கெமிக்கல் கலக்காத இயற்கை காய்கறிகளைக் கூட விற்பனைச் செய்ய முடியாத அவல நிலை, கொண்டு போவதற்கு செலவாகும் பெட்ரோல் காசு கூட தரமாட்டான் தரகர் என்கிறார் அப்பா. விவசாயிடம் 5ரூபாய்கு வாங்கி பெரிய மால்களிலும், சூப்பர்மார்க்கெட் போன்ற பெரிய கடைகளிலும் அதே பொருளை 50 முதல் 100 ரூபாய் வரை விற்கின்றனர். ஆனால் இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த விவசாயிக்கு கிடைப்பது ரேசனில் கிடைக்கும் புழுத்த அரிசி சாப்பாடு. இப்படி ஒருபுறம் தரகர்களின் தலையீடு என்று மாறிமாறி விவசாயிகளின் கழுத்திற்கு தொங்கவிடும் தூக்குக்கயிறு.

காலங்காலமாக நமது இந்தியாவில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு இடைத்தரகர்கள் மூலமே விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல நேரங்களில் விவசாயிகள் போட்ட முதலீட்டைக்கூட எடுக்கமுடியாத அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அரசாங்கத்த நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்று தாங்களாகவே முன்வந்து தஞ்சை விவசாயிகள் புதிய முயற்சியை செய்திருக்கிறார்கள். காவேரி டெல்டா அக்ரோ புரடியூசர் என்ற நிறுவனத்தை 1000 விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கிறார்கள்.

விவசாயி உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு அவர்களே மதிப்புக்கூட்டி விலை நிர்ணயம் செய்து நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்ய வேண்டும். மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்து விற்பனைச செய்யவேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களைத் தாங்களே நேரடியாக குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி உற்பத்திச் செலவை குறைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்:

இதைப்பற்றி நிறுவனத்தின் தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், “இந்த திட்டத்தில் குறைந்தது 20 முதல் 1000 பேர் வரை உறுப்பினர்களாக இருக்கலாம் என மத்தியஅரசு கூறியது. அதன்படி 1000 விவசாயிகள் ஒன்றிணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த தலைக்கு 1000 என 10 இலட்சம் ரூபாய் சேர்த்து இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் தருவதற்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உறுதுணையாக உள்ளது.

பின்னர் ஏபிஜெ. அப்துல்கலாம் அவர்களால் 2015 ஏப்ரல் மாதம் ஒரு கருத்தரங்கம் தஞ்சாவூரில் நடத்தப்பட்டது. அதில் விவசாயிகளுக்கு விளைப்பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது பற்றியும், அறிவியல் ரீதியில் எப்படி கையாளுவது பற்றியும் அப்துல்கலாம் எடுத்துரைத்தார். கிராமங்களிலேயே நகரங்களைப் போன்று எல்லா வசதிகளும், பொருட்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இங்கு இயற்கை தானியங்கள், மண்புழு உரம் மற்றும் காய்கறிகள் என மக்களுக்கு தேவையான இதர பொருட்களும் விற்பனை செய்வதால் 700க்கும் அதிகமான மக்கள் தினமும் தங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் இங்கேயே வாங்கிச் செல்வதாகவும் குறிப்பிடுகிறார் ஆர்.பன்னீர் செல்வம்.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் (பிஸ்கட்,லேப்டாப், நூடுல்ஸ்…….. ) அதிகம் லாபம் பெறும்வகையில் அவர்களே விலையையும் நிர்ணயம் செய்கின்றனர். இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களுடைய பொருட்களுக்கு தாங்களே விலைநிர்ணயம் செய்து விற்பனைச் செய்தால் விவசாயிகள் மட்டுமின்றி நுகர்வோரும் பயன்பெறுவர்.