ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ்

சசிகலா, ஜெயலலிதாவின் கல்லறையில் அறைந்து சத்தியம் செய்ததை ‘பொறுக்கிகளுக்கு இருக்கும் தெனாவெட்டு’ என்பதாக கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்திரி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரது இந்த கூற்றுக்காக சமூக வலைத்தளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இதையொட்டிய பலரது கண்டன நிலைத்தகவல்களில், பத்ரியின் மீதான வசைகள் பின்னூட்டப் பெட்டியை நிறைக்கின்றன. வெறும் கோபம் மட்டும் அல்லாது, ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது இதே ‘பொறுக்கி என்ற வார்த்தையே ஏன் நீங்கள் சொல்லவில்லை…? சங்கராச்சாரி கைது செய்யப்பட்டபோதும், பின்னர் விடுவிக்கப்பட்டபோதும் இத்தகைய அற ஆவேசத்தை நீங்கள் காட்டினீர்களா…? போன்ற கிடுக்கிப் பிடி கேள்விகள் அவரை நோக்கி எழுப்பப்படுகின்றன. ஒரு கட்டத்தில், ‘பொறுக்கி’ என்ற வார்த்தையை அவரது நிலைத்தகவலில் இருந்து நீக்கிவிட்டு யாரும் கருத்து கூற முடியாதபடி அந்தத் திரியையும் மூடி வைத்திருக்கிறார் அவர். இந்த விவகாரத்தின் ஊடாக, இங்கு நிலவும் அரசியல், மற்றும் நமது சாதியப் புரிதல் குறித்த ஒரு உரையாடலைத் துவங்கலாம்.

badri

முதலில் சசிகலாவின் ஆவேசத்தை ‘பொறுக்கித்தனம்’ என்று வரையறுத்த பத்ரியின் கோபத்தை நாம் வரவேற்போம். இதில் பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். அது என்ன மாற்றுக்கருத்து? சசிகலாவின் அரசியல் முழுக்க ஊழலும் பொறுக்கித்தனமும் மிகுந்தது என்பதிலா? இருக்க முடியாது…! ஏனெனில் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் இதைவிட வன்முறையான எதிர்வினையைத்தான் அவர் மீது கடந்த ஒரு மாதமாக காண்பித்துவருகிறது. இன்று பத்ரிக்கு எதிராக கொந்தளிப்பவர்களில் பெரும்பான்மை சசிகலாவை இதை விட கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்தவர்கள்தான். அதில் எல்லா அரசியல் இயக்கத்தவர்களும் உண்டு. திமுகவினர், திகவினர், அதிமுகவினர், பிஜேபியினர், நடுநிலை என்று சொல்லிக்கொள்ளும் நான்காம் தரப்பினர் என்று சசியை வசை பாடியதில் எல்லாரும் இருந்தார்கள். இவர்கள் எல்லாருக்கும் எதிர்வினை புரிய இருக்கும் உரிமை பத்ரிக்கு எங்கு இல்லாமல் போகிறது என்று பார்த்தால், ‘அவர் ஒரு பார்ப்பனராக இருப்பதனால்’ இல்லாமல் போய்விடுகிறது. மேலும் குற்றம் புரிந்த மற்ற பார்ப்பனர்கள் மீது கடுமையாக அவரது எதிர்வினையைப் பதிவு செய்து தனது நேர்மையை நிரூபிப்பதிலும் அவர் தவறியிருக்கிறார் என்கிற போது பத்ரி மீது வசை பாடும் உரிமை சசியைக் கழுவி ஊற்றியவர்கள் உட்பட எல்லாருக்கும் வந்துவிடுகிறது.

‘பத்ரி ஒரு பார்ப்பனர் இல்லையா…? அவர் எப்படி பார்ப்பனரல்லாத சசிகலாவின் செயலைப் பொறுக்கித்தனம்  என்று சொல்லலாம்…? என்று வாதிட்டால், வந்திருக்கும் இந்தத் தீர்ப்பைக் கொண்டாட பார்ப்பனர்கள் தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது என்றே நான் சொல்வேன். ஏன்…?

முதலில் இந்த வழக்கைத் தொடுத்தது சுப்ரமணிய சாமி என்கிற பார்ப்பனர். பிறகுதான் அன்பழகன்  என்கிற சூத்திரர் அதில் இணைந்துகொள்கிறார். அதை விடாப்பிடியாக ஏற்று நடத்திய, எந்த விதத்திலும் வளைந்து கொடுக்காமல், உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராடிய கர்நாடக உயர்நீதி மன்ற வக்கீல் B. V ஆச்சார்யா ஒரு பார்ப்பனர். இதைச் சொல்கையில், இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்த, இதை இந்த அளவுக்கு இழுத்தடிப்பதில் உதவிய பார்ப்பனர்கள் இல்லையா…? என்று கேட்கலாம். மேலும் இந்த வழக்கில் தண்டனை அனுபவிக்காமலேயே இறந்து போன ஜெயாவுக்கு அவர் பார்ப்பனராக இருந்த தகுதி உதவவில்லையா என்றும் கேட்கலாம். அது மிகச் சரியான கேள்வி.

அதற்கான பதில் என்னவென்றால், மற்ற எல்லா சாதிகளிலும் இருப்பது போலவே பார்ப்பனர்களிலும் சாதி வெறி கொண்ட, மேட்டிமைத்தனம் கொண்ட, ஒடுக்குமுறையைக் கையிலெடுக்கிற ஒரு தரப்பும் இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கிற, அதற்காக தனது உயிர் உள்ளிட்ட சக்தி முழுவதையும் பணயம் வைக்கிற மற்றொரு தரப்பும் வரலாறு நெடுக இருந்துகொண்டே இருக்கிறது என்பதுதான். ஆனால், நாம் பார்ப்பனராக இல்லை என்கிற ஒரு காரணத்தாலேயே, இதில் கருத்து சொல்கிறவன் ஒரு பார்ப்பனன் என்கிற ஒரு காரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு கம்பு சுத்துவது ஆபாசம் இல்லையா என்பதுதான் எனது கேள்வி. முத்தாய்ப்பாக குமாரசாமி என்ன சாதி என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் பொது சமூகம் அமைதியாக இருப்பது கள்ள மவுனத்தில் வருமா வராதா என்பதும் முக்கியமான கேள்விதான்.

இதுதான் ஒரு எதிர்வினைக்கான அடிப்படை என்றால், இவ்வாறுதான் விமர்சிப்பவர்களின் தகுதியை வரையறை செய்வோம் என்றால், இந்த அடிப்படையில்தான் பத்ரி தகுதி இழக்கிறார் என்றால் சசிகலாவின் ஊழல் வழக்கு மீது கருத்து சொல்லும் தகுதியை யார் யாரெல்லாம் இழக்கிறார்கள் என்று பார்ப்போம்.

முதலில் ஊழலுக்கு எதிரான ஒரு வழக்கில் தம்மை இணைத்துக்கொள்ளும் தகுதியே திமுகவுக்கு கிடையாது. திறமையாக ஊழல் செய்யும் திறமையை வைத்திருப்பதாலேயே அதற்கு அந்தத் தகுதி வந்துவிடுமா என்ன ? திமுக தகுதியிழக்கிறது என்றால், திமுக அபிமானிகளுக்கும் இதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை இல்லையா? அவர்கள் இப்போது பட்டியலில் இல்லை. வெளியேறிவிடுகிறார்கள். இரண்டாவது, தாம் யாரைக் கடவுளராகக் கொண்டாடுகிறோமோ அவர் முதல் குற்றவாளியாகவும் அவருக்கு உதவி புரிந்த நபர் இரண்டாவது குற்றவாளியாகவும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கக் கூடிய சூழலில், அந்த இரண்டாவது குற்றவாளி முதல்வராவதை எதிர்க்கிறார்கள் என்பதால் மட்டும் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடி பட்டாசு வெடிக்கும் அதிமுகவினரின் செயல் ஆபாசம் இல்லையா? ஆக, அவர்களும் நாக் அவுட்.

அடுத்ததாக பன்னீர் செல்வம். இப்போதும் கூட முதல் குற்றவாளியின் ஆன்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும், இதுவரை நிரூபிக்கப்படாததாலேயே ஊழல் விவகாரத்தில் நிரபராதியாக இருந்துகொண்டிருக்கும் பன்னீரின் அரசியல் நிலைப்பாடு மக்கள் விரோதம் இல்லையா? எளிமையின் திருவுருவாக பன்னீரை முன்னிறுத்திய, ‘அதோ அங்கிளை பார்…’ என்று தனது குழந்தையைத் தோளில் தூக்கி பன்னீரின் முகத்தைக் காட்டியவர்கள் இதோ இந்த தீர்ப்பு வந்த பிறகும் கூட முதல் குற்றவாளியை தலையிலேயே சுமந்து திரியும் பன்னீரை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டாமா? சசிகலா குற்றவாளி என்றால் அம்மாவும் குற்றவாளிதானே அதை ஒத்துக்கொள்ளுங்கள் என்று கேட்கவேண்டாமா? தனது குழந்தையிடம் ஒரு குற்றவாளியின் காலில் விழுவதும் இன்னொரு குற்றவாளியின் முதுகில் குத்துவதும் இந்த அங்கிளுக்குப் பிடிக்கும் என்று சொல்லித்தர வேண்டாமா ஒருவன். அப்படி கேள்வி எழுப்பாத பட்சத்தில், பன்னீரின் மீது இந்த அரசியல் அழுத்தத்தை தர திராணி இல்லாத பட்சத்தில், அவரை ஆதரித்த நடுநிலை சமூகத்தின் செயல் பாரபட்சமானது இல்லையா? ஆக இங்கு யார்தான் அறத்தின் பாற்பட்டு கேள்வி எழுப்புபவர்களாக இருக்கிறீர்கள் என்ற கேள்வி நியாயமானதா இல்லையா? ஆக அவர்களும் அவுட்.

நடந்த ஊழலுக்கு எதிராக அதன் ஆரம்ப காலத்திலேயே போராடியிருக்க வேண்டிய திகவின் வீரமணி போன்றவர்களின் பாராமுகம் மானத்திற்கு எதிரானதா இல்லையா? பார்ப்பனர்கள் X பார்ப்பனரல்லாதவர்கள் என்ற இருமையில் மட்டுமே எல்லாவற்றையும் பார்க்க முடியும் என்றால், ஒரு பாப்பாத்தியுடன் சேர்ந்துகொண்டு இவ்வளவு ஊழல்கள்  செய்த சசிகலா இன துரோகியா இல்லையா? அவரை பார்ப்பன அடிவருடி என்று வரையறுப்பதை விட்டுவிட்டு ஒடுக்கப்படுபவனின் நியாயத்தையும்  சேர்த்து அவர் பார்ப்பனரல்லாதவர் என்கிற ஒரே காரணத்துக்காக  அவரது காலடியில் கொண்டு சமர்ப்பிக்கும் வீரமணி, நெடுமாறன் வகையறாக்களின் அரசியல் அயோக்கியத்தனம் இல்லாமல் வேறென்ன. இவர்களுக்கெல்லாம் பத்ரியின் செயலை அயோக்கியத்தனம் என்று வரையறுக்கும் தகுதி எங்ஙனம் வந்துவிடும். மட்டுமல்லாது, சசிகலாவின் அரசியல் அதன் தொடக்கம் முதலே தலித் விரோத அரசியல். ஜெயலலிதாவின் பிறப்பின் அடிப்படையான மனநிலை துத்துவார்த்தரீதியாக இந்து உயர்சாதி ஒடுக்கும் அடிப்படையைக் கொண்டது என்றால், சசிகலாவின் பிறப்பு என்பதும் அந்த ஒடுக்குமுறைக்கு ஸ்தூலமான ஆதரவை வழங்குகிற அதை செயல்படுத்தும் உடல் வலிமையை வழங்குகிற ஆதிக்கசாதிக் கருத்து நிலை. ஒன்றில்லாமல் மற்றொன்று இயங்கமுடியாது. அந்த அளவுக்கு பின்னிப்பிணைந்து அவை ஒன்றுக்கொன்று உதவிக்கொள்பவை. உதவிக்கொண்டவை. ரத்தப்பூர்வமான அவ்வளவு உதாரணங்கள் உண்டு. பரமக்குடி முதல் தற்போதையை ஜல்லிக்கட்டு போராட்ட குடிசை எரிப்பு வரை.

இந்த ஊழல் விவகாரத்தில், சசிகலாவை ‘ஒடுக்கப்படும் தரப்பாக’ மக்கள் முன் வைக்கும் செயல், அடிப்படையிலேயே மக்கள் விரோதமானது. அவருக்கு அந்த சலுகையை வழங்குவதன் மூலம், அவரை மட்டும் இவர்கள் விடுவிப்பதில்லை. அவருடன் கைகோர்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனியத்தின் ஆபத்தையும் சேர்த்தேதான் இவர்கள் மூடிவைக்கிறார்கள். பத்ரி சேஷாத்திரி போன்ற ‘மத்தியதர வர்க்க  லௌகீகப் பார்ப்பனரை’ ஒரு தத்துவ அடிப்படை கொண்ட ஆளும் வர்க்கப் பிரதிநிதியாக வரித்து மக்கள் முன்பு நிறுத்துவதன் மூலம் இந்த அரைவேக்காட்டு முற்போக்காளர்கள் செய்வது ஒரு வகையில் பார்ப்பன சேவைதான். போட்டியின்போது காட்டப்படும் சிவப்புத் துணியை நோக்கி மூர்க்கத்துடன் பாயும் காளை தன் முதுகில் ஈட்டியால் குத்து வாங்குவது போல ஓரளவு அற அடிப்படை கொண்ட பொது சமூகம் இந்த போலி சமூகநீதியாளர்களால் காயடிக்கப்படுகிறது என்பதே உண்மை. ஆமாம். பத்ரி போன்றவர்களின் ஆகிருதியை ஊதிப் பெரிதாக்கி அந்தத் திரையின் பின்னால், ஊழல்வாதிகளை மறைந்துகொள்ளச்செய்யும் அற்பத்தனமே இங்கு நிகழ்வது. இதன் பொருள் பத்ரி புனிதர் என்பதல்ல. அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது அல்ல. இதே போன்ற ஒன்றிற்கு பழைய உதாரணம் ஸ்பெக்ட்ரம் ராசாவை தலித் என்றும் அதனாலதான் வழக்கில் சிக்க வைக்கப்பட்டார் என்றும் இவர்கள் வைத்த ஒப்பாரி.

மக்களை அரசியல் மயப்படுத்துவது என்பது அவர்கள் முன்னால் பொருத்தமற்ற ‘conspiracy theory’ களை கடைவிரித்து அவர்களை வெருட்டுவது அல்ல. அவர்கள் செய்வது தவறு என்றாலும் அவர்களது முகத்திலடித்தாற்போல் அதைச் சொல்வதுதான். அதுதான் மார்க்சீய, பெரியாரிய, அம்பேத்காரிய அடிப்படை. குறைந்த பட்சம் நான் அவ்வாறுதான் அதைப் புரிந்துகொள்கிறேன். மேலும் பத்ரியை வலதுசாரி ஆதரவாளராக புரிந்துகொள்வது வேறு. அவரை வலதுசாரி ஆதிக்க அரசியல் பிரதிநிதியாக புரிந்துகொண்டு எதிர்வினை புரிவது வேறு.

தாம் அரசியலை விட்டு துரத்தப்படும் சூழலில் கூட, ‘இந்த குழப்பங்களுக்குப் பின்னால், பிஜேபி இருப்பதாக நினைக்கிறீர்களா…? என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறபோது, ஆமாம்… இருக்கிறார்கள், என்று சொல்லத் திராணியற்ற கோழை சசிகலா, ‘உங்கள் எல்லாருக்கும் உண்மை தெரியும், நான் சொல்ல என்ன இருக்கிறது’  என்று பசப்புகிறார். அந்த பதிலின் பின்னுள்ளது ஊழலில் ஊறிப் போன சொரணை உணர்வு மங்கிய கபடம்.

பத்ரியிடம் ஒரு முறை IIT களில், இப்போதும் பார்ப்பன ஆசிரியர்கள்தானே பெரும்பான்மையாக இருக்கிறார்கள், அவர்கள்தானே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற கேள்வியை முன்வைத்த போது எச்சில் விழுங்கிக்கொண்டே அந்தக் கேள்வியை எதிர்கொள்வதில் இருந்து நழுவினார். அதுவொரு மேட்டுக்குடி பார்ப்பனரின் லௌகீக மொன்னைத் தனம் என்பதைத் தாண்டி அதற்கு அரசியல் ரீதியான எந்த பெறுமதியும் கிடையாது.

அவரை முன்வைததெல்லாம், பார்ப்பன பயங்கரவாதம் என்று முட்டியை மடக்குவதும் அந்த அடிப்படையில் சசிகலாவை முட்டுக்கொடுப்பதும் அரசியல் புரிதலில் சேராது. சொந்த நலன்களுக்கான சோரம் போவது என்பதே அதன் பொருளாக வரலாற்றில் நிலைக்கும்!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள்.