கருத்து

போதும் இந்த நாடகம்!

கதிர் வேல்

கதிர்வேல்
கதிர்வேல்

சசிகலாவை நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. அவருடன் பேசியதும் இல்லை. எனவே ஒரிஜினலாக எந்த கருத்தும் கிடையாது. தனிப்பட்ட துவேஷத்துக்கு இடமே இல்லை.

ஆனால், நாட்டின் மிக உயர்ந்த கோர்ட் சசிகலா யாரென்று அடையாளம் காட்டி விட்டது.

அதன் தீர்ப்பை வாசிக்கும்போது, 30+ ஆண்டுகளாக சசிகலாவை பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் எவ்வளவு உண்மை என்பது விளங்குகிறது.

ஒரு பயங்கரமான கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாக அவர் நடமாடினார் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீர்ப்பு அம்பலப்படுத்துகிறது.

அப்போலோ ஆஸ்பிடலில் ஜெயலலிதா என்கிற பெரும் மக்கள் தலைவி ஒரு புழு பூச்சி போல 75 நாட்கள் எவருடைய பார்வையிலும் படாமல் மறைத்து வைக்கப்பட்ட மர்மத்தின் பின்னணி என்ன என்பது இப்போது புலப்படுகிறது.

சமாதியின் மேல் மூன்று தடவை அவர் ஆக்ரோஷமாக அறைந்து ஏதோ சொன்ன மயிர்க் கூச்செறியும் காட்சி, வேதா நிலையத்தில் ஜெயலலிதா எத்தகைய வாழ்க்கை வாழ்ந்திருப்பார் என்பதை ஊகிக்க உதவுகிறது.

ஒரு நிமிடம்கூட அவகாசம் தர முடியாது, குற்றவாளி உடனே சரண் அடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் மனிதாபிமானம் இல்லாமல் உத்தரவு பிறப்பிப்பது வழக்கம் அல்ல.

உன் உடலுக்கு என்ன கோளாறு என்று நீ சொல்வதை நம்ப முடியாது; ஜெயில் டாக்டர்கள் பரிசோதனை செய்து சொல்லட்டும் என்று ஒரு நீதிபதி ஆணையிடுவது வாடிக்கை அல்ல.

குற்றத்தின் தன்மையும் குற்றவாளியின் நடத்தையும் எந்த அளவுக்கு கொடூரமானதாக இருந்தால் நீதிமன்றங்கள் இத்தகைய உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.

எந்த விதமான உரிமையும் இல்லாமல் தனது காலமான எஜமானியின் வீட்டில் எப்போது அத்துமீறி குடிபுகுந்து அவரைப் போலவே மேக்கப் செய்து கொண்டு பேசவும் நடக்கவும் பயிற்சி பெற்று வளைய வந்தாரோ அப்போதாவது உறைத்திருக்க வேண்டும் நம் எல்லோருக்கும்.

சட்டப்படியும், நியாயப்படியும், தர்மப்படியும் இத்தனை கொடூரமான ஒரு குற்றவாளி எவ்வாறு ஒரு அரசியல் கட்சிக்கு தலைவராக முடியும்? எவ்வாறு தனது இடத்துக்கு இன்னொருவரை நியமனம் செய்ய முடியும்? எவ்வாறு தனது குடும்ப உறவுகளை நியமித்து கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இயலும்?

எல்லாமே இயற்கைக்கு முரணான காட்சிகள். மனசாட்சி என்கிற ஒன்று இருக்கிற எவராலும் ஜீரணிக்க முடியாத அநியாயங்கள்.

தப்பான வழியில் சம்பாதித்து குவித்த பணத்தை வாரி விட்டு ஆதரவை இழுக்கலாம். அதற்கு படியாதவர்களை அடியாள் பலத்தால் மிரட்டி பணிய வைக்கலாம். எதிரிகளையும் ஏதோ ஒரு வழியில் தன் பக்கமாக வளைத்து பொதுக் கருத்தை திசை திருப்பலாம்.

எத்தனை நாளுக்கு?

பன்னீரா, வென்னீரா, எடப்பாடியா, காட்பாடியா, தம்பிதுரையா, அண்ணாதுரையா என்பது பிரச்னை அல்ல. என்னதான் அரசியல் என்பது அயோக்கியர்களின் புகலிடம் என்றாலும் அதிலும் சில அளவுமுறைகள் இருக்கின்றன.

ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டை வேட்டையாட துடிக்கும் கூட்டத்தின் ஆதிக்கத்தில் இருந்து அதிமுகவின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் விலகி வெளிவர வேண்டும். தீய சக்திகளை ஓரங்கட்டி உட்கார்ந்து பேசுங்கள்.

இனிமேலாவது சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தும் எண்ணம் கொண்ட எவரோ ஒருவரை தேர்ந்தெடுங்கள். எத்தனையோ லட்சங்கள் செலவு செய்து எம்.எல்.ஏ ஆகிவிட்டோம்; இத்தனை சீக்கிரம் அதை விட்டு விட முடியுமா? என்ற சிந்தனையில் அயோக்கியத் தனத்துக்கு துணை போகாதீர்கள்.

அதுதான் பாதுகாப்பான வழி என்று நினைத்து நீங்கள் செயல்பட்டால், ஒரு மாதம் கூட உங்கள் அரசாங்கம் தாங்காது என்பதை உணருங்கள்.

தமிழ் நாட்டு மக்கள் இந்த சோக நாட்களில் சோதனைக் கட்டங்களில் சுதந்திர காற்றை சுவாசித்து பழகி விட்டார்கள்.

ருசி கண்ட பூனைகளே ஒதுங்கி நிற்காது என்ற நிலையில், அராஜக ஆளுமைகளில் இருந்து ஆண்டவன் கிருபையால் விடுபட்ட தமிழக மக்கள் முன்போல அடங்கிக் கிடப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.

சசிகலா மட்டுமல்ல, அவர் பெயரை மந்திரமாக உச்சரிக்கும் அத்தனை பேரையும் ஒதுக்கி வையுங்கள்.

தமிழகம் உருப்பட உதவுங்கள். சந்ததிகளாவது சந்தோஷமாக வாழட்டும்.

கதிர்வேல், நம்ம அடையாளம் இதழின் ஆசிரியர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.