அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

கொட்டிக் கிழங்கை வெட்டி சிலபேர்
கொண்டு போய் நன்றாக வேக வைத்து
இட்டமதகாவே தின்று பொழுதை
இவ்விதம் போக்குகிறார் பாருங்கடி
எறும்பு வளைகளை வெட்டியதனில்
இருக்குந் தானியந் தானெடுத்து
முறத்தால் கொழித்திக் குத்துச் சமைத்து
உண்ணுகிறார் சிலர் பாருங்கடி

1877 ஆம் வருடத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சமான தாது வருஷப் பஞ்ச நிகழ்வுகள்
குறித்து தோழர் மலை மருந்தன் எனும் புலவர் பதிவு செய்துள்ள கும்மி தான் இப்பாடல்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலகட்டத்தில், இங்கிலாந்து நெசவாலைகளுக்கு இங்கிருந்து பருத்தி ஏற்றுமதி நடைபெற்றது. உணவுப் பயிர் பாற்றாக்குறை அதிகரித்து பருத்தி ஏற்றுமதியும் அயுரி ஏற்றுமதியும் அதிகரித்தது. அதீதமான இச்சுரண்டல் முறையால் பல பஞ்சங்கள் இந்தியாவிலும் தமிழகத்திலும் தலைவிரித்தாடின. 1783, 92, 1807, 23, 33, 54 என இவ்வாறு தொடர்ந்த பஞ்சத்தின் உச்சமான பஞ்சம்தான் தாது வருடத்தில் தொடங்கிய 1876-77 பஞ்சம்.

1876 ஏப்ரல் தொடங்கி 1877 வரை இந்த பஞ்சம் நிலவியதாக சொன்னாலும் சுமார் 1890 வரை,அதாவது தாது வருடம் முடிந்த பின்னரும் இந்தப் பஞ்சம் நீடித்தது. இந்தக் கொடூர பஞ்ச காலத்தில் சுமார் நாற்பது இலட்சம் மக்கள் உணவு தட்டுப்பாடாலும்,காலரா தோற்றாலும் தாக்குண்டு கொத்து கொத்தாக மடிந்தனர்.
பஞ்ச காலத்தின் கொடுமை குறித்து பல பதிவுகளை அப்போதைய ஆங்கில அதிகாரிகளும் தமிழ் இலக்கியவாதிகளும் பதிவு செய்துள்ளனர்.

பால் குடிக்கிற குழைந்தைகளை விற்று நெல் வாங்கியது, தாலி அடமானம் வைப்பது, வீட்டுக் கூரைகளை பெயர்த்து விற்பது, கிழங்குகளை பறித்து உண்பது, பணங்குருத்தை உண்பது
போன்ற கொடு நிகழ்வுகள் பதியப் பட்டுளள்ளது. மக்கள் செய்வதறியாது கொள்ளையிலும் அதிகமாக ஈடுபட்டனர்.

இந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மக்களின் உழைப்பை சுரண்டுகிற வேலைகளிலும் தமிழர்களை ஈடுபடுத்தினர்.இந்தப் பஞ்ச காலத்தில்,இவ்வாறு வெட்டப்பட்டதுதான் பக்கிங்காம் கால்வாய்.
சுமார் 150 வருடத்திற்கு முன்னர் ஏற்பட்ட இப்பஞ்சங்கள் தற்போது மீண்டும் வருவது போன்றதொரு சூழல் நிலவுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மோசமாக புறக்கணிக்கப்பட்ட நீர் மேலாண்மை திட்டங்கள்,சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவிலும் தொடர்ந்தன.கூடவே சமகால ஆற்று மணல் கொள்ளை,வேதியல் வேளாண்மை, கடன் சுமை, பொய்த்துப் போன பருவமழை விவசாயிகளைவேளாண் தொழிலை மோசமாக தாக்கி வருகிறது. எந்திர மோட்டார் வைத்து பாசனம் செய்துவருகிற குறு விவசாயி மட்டும் இந்த வறட்சி காலத்தில் தப்பித்து வருகிறார். ஏனைய நிலமற்றக் கூலிகள்,மோட்டார் வசதியற்றை விவசாயிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி பயிர் கருகுவதை தாங்க மாட்டாமல் தற்கொலை செய்து வருகின்றனர்.தமிழக விவசாயிகள் அரசின் துணையின்றி தங்களது சொந்த முயற்சியால் மட்டுமே விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 200 விவசாயிகள் காவிரி டெல்டாவின் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வறட்சி குறித்து ஆய்வு செய்து சென்ற மத்திய அரசு குழு குறித்து எந்தத் தகவலும் இல்லை.மத்திய அரசும் மாநில அரசும் அதிகார பேரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க, டெல்டா விவசாயிசெத்துக் கொண்டிருக்கிறான். முதல்வர் பதவிக்கு வந்துள்ள எடப்பாடி அரசும் மத்திய மோடி அரசும் அதிகார பேரம் ஓய்ந்த நேரத்திலாவது மீண்டுமொரு தாதுப் பஞ்சத்தை தவிர்க்கிற வேலைகளை உடனடியாக தொடங்கவேண்டும்.

மத்திய மாநில அரசுகளே

  • காவிரி சமவெளி மாவட்டங்களை வறட்சி பகுதிகளாக அறிவித்திடு!
  • விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30,000 நிவாரணம் வழங்கிடு!
  • வறட்சியால் உயிர்விட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்கிடு!
  • விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்!
  • டெல்ட்டா மாவட்ட நீர்நிலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்திடு!
  • உழவர் வருவாய் ஆணையம் அமைத்து, கூலி விவசாயத் தொழிலாளர்கள,சிறு குறு விவசாயிகளுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கு!
  • இரசாயன உரப் பயன்பாட்டை தடை செய்து, இயற்கை உரப் பயன்பாட்டிலான வேளாண்மையை ஊக்குவித்திடு!
  • வேளாண்மைக்கென தனி பேரிடர் ஆணையம் அமைத்து,உடனடியாக வேளாண் பேரிடர் நிவாரணத் தொகையை வழங்கு!
  • #எடப்பாடி அரசேஅதிகார பேரத்திற்காக நேரத்தைப் போக்காதே விவசாயத் தற்கொலையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடு!

படம்:சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட தாதுப் பஞ்ச நிகழ்வில் எழும்பும் தோலுமாக மக்கள் …

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.