தலித் ஆவணம் திராவிட அரசியல்

‘உங்கள் கட்சியையும் ஆட்சியையும் சக்கிலியர் மீதான அவதூறைச் சொல்லித்தான் காப்பாற்ற வேண்டுமா?’

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், ‘தாழ்த்தப்பட்ட’ சமூகத்திலிருந்து வந்தவன் என்றும் பாராமல் திமுகவினர் நடந்துகொண்டதாக தெரிவித்த கருத்துகள் விவாத்தை கிளப்பியுள்ளன.

எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டமன்றம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூடியது. அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி வாக்குவாதத்திலும் அமளியிலும் ஈடுபட்டனர். இதனால் அவையை 1 மணிக்கு ஒத்திவைத்து கிளம்பினார் சபாநாயகர். சபாநாயகரை அங்கேயே இருக்கும்படி திமுக எம்.எல்.ஏக்கள் வற்புறுத்தினர். அவைக்காவலர்கள் அவரை அழைத்துச் செல்ல முற்பட்டனர். இந்த தள்ளு முள்ளு சம்பவத்தில் தன் சட்டை கிழிந்ததாக சபாநாயகர் தெரிவித்தார். அவையில் திமுக எம்.எல்.ஏக்கள் நடந்துகொண்ட விதத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகரின் அறைக்குச் சென்று வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் அவை கூடியது. அமளியில் ஈடுபட்ட திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். வெள்ளை சீருடை அணிந்த காவலர்கள் அவர்களை வெளியேற்ற முற்பட்டனர். அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. மு. க. ஸ்டாலின் அவைக்கு நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரையும் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். சட்டை கிழிந்த நிலையில் சட்டப்பேரவைக்கு வெளியே வந்த மு.க. ஸ்டாலின் தான் தாக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார். சபாநாயகர் வேண்டுமென்றே சட்டையை கிழித்துக்கொண்டு நீலிக் கண்ணீர் வடித்தார் எனவும் கூறினார்.

அவையில் திமுக எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளியேற பின் நடந்த வாக்குப் பதிவுக்குப் பின் பேசிய சபாநாயகர் தனபால், ‘தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை நடைபெற்ற சம்பவங்களை மறந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நான் நீலிக் கண்ணீர் வடிப்பதாக சட்டப்பேரவைக்கு வெளியே புகார் கூறியுள்ளார். இதனால் வேதனையுடன் ஒருசில விஷயங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக கூறினார்.

‘மிக மிக தாழ்த்தப்பட்ட, சாமானிய எளிய குடும்பத்தில் இருந்த தன்னை பள்ளத்தில் இருந்து தூக்கி தொடர்ந்து இரண்டாவது ஆவது முறையாக இப்பதவியில் அமர்த்தியது ஜெயலலிதா தான்’ என கூறிய அவர்,

“சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த, இந்த எளியவனை மிக உயர்ந்த பதவியில் அமர்த்தி ஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. அவ்வாறு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த நான், அவை விதிகளுக்கு கட்டுப்பட்டு ஜனநாயக மரபுகளை கடைபிடித்து பேரவையை நடத்தியதால் தான் மீண்டும் இந்த பதவி வழங்கப்பட்டது. ஆனால் இங்கே திமுக உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் என் மீது தாக்குதலை நடத்தியிருந்தால் கூட கவலைபட மாட்டேன். பேரவைத் தலைவர் முறையில் நான் பணியாற்றுகையில் அந்த பதவிக்கு மரியாதை தராமல், நான் சார்ந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக அவர்கள் நடந்துகொண்டது அவர்கள் திட்டமிட்டு நடத்திய நாடகமாகவே கருதுகிறேன்.

ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட இன மக்களை அடக்கிவிடலாம், இந்த சமூகம் வளரக் கூடாது என நினைத்து திமுக-வினர் செயல்பட்டு இருப்பாராயின் உண்மையில் நான் சாந்துள்ள சமுதாயத்தின் சார்பில் தனபால் என்னும் தனிமனிதனாக அதனை என்றென்றும் எதிர்க்க கடமைப்பட்டிருக்கேன்.

சுதந்திரம் பெற்று, 69 ஆண்டுகளுக்கு பின்னும் இந்த சமூகம் முன்னுக்கு வரக் கூடாது. இந்த சமுதாயத்தில் இருப்பவர்கள் யாரும் உயர்பதவியில் இருக்கக் கூடாது என்ற எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடகவே இங்கே நடைபெற்ற குழப்பத்தை கருதுகிறேன்” என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சபாநாயகரின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து திமுக துணை பொது செயலாளர் வி.பி. துரைசாமி, அறிக்கை வெளியிட்டார். அதில், தி.மு.க‌.வை தாழ்த்தப்பட்டோரின் விரோதி என சபாநாயகர் தனபால் கூறியதை, தாழ்த்தப்பட்ட மக்களே மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘சட்டமன்ற ஜனநாயகத்தில் கருப்பு நாள் ஒன்றை உருவாக்கி மரபுகளையும், நெறிமுறைகளையும் சபாநாயகர் தனபால் புதைகுழிக்கு தள்ளியுள்ளார். தாழ்த்தப்பட்டவன் ‌என்பதால்தான் தன்னை அவமதிக்கிறார்கள் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை தனது பதவிக்குரிய கண்ணியத்தையும் மறந்து தி.மு.க மீது சுமத்தியிருப்பதற்கு கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.

சபாநாயகர் கண் முன்னே, கா‌வலர்களால் எழும்பூர் தொகுதி தி.மு.க எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன் தாக்கப்பட்டார். அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் சபாநாயகர் தான் முழு பொறுப்பு. சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாவிட்டால், சபாநாயகர் பதவியிலிருந்து தனபால் ராஜினாமா செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

சபாநாயகர் தனபாலின் ‘தாழ்த்தப்பட்ட’ கவசம் குறித்து கடும் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் மதிவாணன்:

தனபால் அவர்களுக்குக் கடைசியாகத் தான் அருந்ததியர் என்பது நினைவுக்கு வந்து விட்டது.

அருந்ததியர்களின் “நலம்விரும்பி”களான எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கண்ணீருடன் கை தட்ட, தாம் அருந்ததியர் என்பதற்காக அவமானப்படுத்தப் பட்டதாகக் கூறியிருக்கிறார்.

உங்கள் கட்சியையும் ஆட்சியையும் கடைசியில் சக்கிலியர் மீதான அவதூறைச் சொல்லித்தான் காப்பாற்ற வேண்டுமா?

இவ்வளவு நாள் அருந்ததியருக்கான நலன்களை முன்னிறுத்திதான் உங்கள் ஆட்சி நடந்தது என்பதை எடப்பாடியின் வீட்டுக்கு எதிரில் குடியிருக்கும் போலீஸ் வேலையிலிருக்கும் அருந்ததியரின் புலம்பல் தமிழக வீதிகளில் அநாதையாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

“என்னைப் பார்க்க கட்சிக் காரர்கள் வரலாம். அருந்ததியர் என்ற என் சாதிக்காரர் யாரும் வரக்கூடாது” எனச் சொன்ன தனபாலுக்கு இந்நேரம் எங்கள் சாதி தேவைப் படுகிறதோ? சாதிவெறிக் கவுண்டர்களுக்கு எப்போதும் போல எம்மக்களை காட்டிக்கொடுக்கப் போகும் தங்களுக்கு ஒரு அருந்ததியனாக என் கண்டனங்கள் !

எழுபத்தேழாம் ஆண்டிலிருந்து ரெண்டாயிரத்து பதினெழு வரையான (1977-2017) நாற்பது ஆண்டுகளில் ஐந்து முறை சமஉ/ MLA வாகவும் ஒருமுறை மந்திரியாகவும் இருந்த காலங்களில் இந்த பாவப்பட்ட சாதிக்குத் தாங்கள் என்ன கிழித்தீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா?

உங்கள் பிரச்சனையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் சாதி என்ன உங்களுக்கு என்ன ஊறுகாயா?

சுபா உலகநாதன்:

தனபாலை சபாநாயகராக நியமித்ததே இப்படி இக்கட்டான சூழலில் தலித் என்று சொல்லி ஆட்சியாளர்கள் மீதுள்ள கரையை துடைப்பதற்கே. நாமும் உணர்வு பூர்வமாக மட்டுமே அணுகக் கூடியவர்களாக இருக்கிறோம்.

தற்போது தனபாலை நாம் ஆதரித்தால் அ.தி.மு.க.வினர் என்ன காரணத்திற்காக அவரை நியமித்தார்களோ அதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள். தனபாலை ஆதரிக்க வேண்டாம் என்பதால் அதை தி.மு.க.விற்கு ஆதரவாக எடுத்துக்கொள்ள முடியாது.

திமுக வும் அதே காரணத்திற்காக துரைச்சாமியை துணை சபாநாயகராக நியமித்தது குறிப்பிடத்தக்கது. எப்படியாக திமுக ராசாவை ஊழல் வழக்கில் மாட்டிவிட்டு தலித் என்பதால் திட்டமிட்டு பொய்வழக்கு போட்டு விட்டதாக கலைஞர் கூறினாரோ, அதே போன்ற நிலைதான் தனபால் சூழலும்.

தனபாலோ, துரைச்சாமியோ தனக்கு கிடைத்த சபாநாயகர் பதவியை வைத்து இந்த சமூகத்திற்கு ஒன்று செய்துவிட்டதாக இல்லை. நமக்கு பிரச்சினை வரும் போது அவர்கள் வீதிக்கு வந்த நிகழ்வுண்டா? அதே போன்று அவர்களுக்காக நாம் துயரப்பட வேண்டிய அவசியமில்லை.

வள்ளியூர் அருகே மகாராஜா என்ற அருந்ததியர் சமுதாய மாணவன் ஆணவக்கொலை செய்யப்பட்டது இங்கு அநேகருக்கு மறந்திருக்கலாம். ஆனால் அந்த மாணவன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தபோது பேச அனுமதி மறுத்தவர் தான் அதே அருந்ததியர் சாதியை சார்ந்த இந்த தனபால்.

அருந்ததியர் என்று சாதியை குறிப்பிட்டு பேசுவது தவறு என்றாலும் சொல்ல வேண்டிய கட்டாயம் தற்போது.
மன்னிக்கவும் !

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.