சினிமா

நிழலழகி- 2 : ‘இரும்பு மனுஷி’ யாமினி!

கே.ஏ.பத்மஜா

கே.ஏ.பத்மஜா
கே.ஏ.பத்மஜா

நிழலழகி- 2

பெண்களை ‘ப்ரொட்டாகனிஸ்ட்’ ஆகவும், முக்கியக் கதாபாத்திரங்களாகவும் பதிவு செய்த நல்ல சினிமா படைப்புகள் குறித்த பார்வையே இந்தத் தொடர்.

Mayakkam Enna | Tamil | Selvaraghavan | 2011

நிழலழகி தொடர் எழுதத் தொடங்கிய பின், என்னை மிகவும் மயக்கிய ‘இரும்பு மனுஷி’ யாமினியை குறிப்பிடாமல் இருக்க முடியாது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா நடித்து ஜி.வி.பிரகாஷ் இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில் 2011-ல் வெளிவந்த படம் “மயக்கம் என்ன”. ஆறு வருடம் கழித்து இந்தத் தொடருக்காக மறுபடியும் பார்த்தபோது கதையில் இருந்து வசனம், காட்சி, ஒளிப்பதிவு, பாடல் என எதுவும் அலுப்புத் தட்டாமல் ஒரு புதுப் படத்தை பார்த்த அனுபவம். இன்னும் அவ்வளவு ஃபிரஷ் ஆக இருந்தபோதும், தனுஷை தாண்டி முதல் படத்தில் தனது நடிப்பால் யாமினி (ரிச்சா) நம் மனதில் பதிவதை தவிர்க்க முடியாது.

இம்முறை படம் பார்த்தபோது என் நண்பன் வினோத் நினைவுக்கு வந்தான். அவனுக்கு சிறு வயதில் இருந்தே தேடல் அதிகம். யாரும் செய்யத் தயங்கும் விஷயங்களை துணிச்சலாக செய்து முடிக்கும் அசாத்திய குணம் உண்டு. தாழ்வுமனப்பான்மை அதிகம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் தன் பேச்சாலும் வித்தியாசமான செயல்களாலும் அனைவரையும் கவனிக்கவைக்க தவறியது இல்லை. ஏழு வயதில் தொடங்கியே சினிமாவும் பயணமும்தான் தன் தேடலின் இலக்கு என்று தெரிந்தும், இன்று வரை அதை நெருங்க முடியாமல் ஏங்குகிறான் வினோத். அதிகம் பேசாமல் பார்வையிலேயே தனது காதலை வெளிப்படுத்திய அஞ்சலியை கல்லூரி நாட்களிலே திருமணம் செய்துகொண்டான்.
தன் வாழக்கையில் நான்கு பேர் மதிக்கும் நிலைக்கு வருவதற்கு அஞ்சலிதான் காரணம் என்று எப்போதும் சொல்லிக் கொண்டாலும், வினோத்தின் லட்சியத்துக்கு தடையாக இருந்தது அவனது குடும்பச் சூழல். அவனுக்கும் ஏதோ ஓர் உருவில் ஒரு யாமினி கிடைத்தால்..? – இந்த யோசனையுடன் யாமினியை உற்று நோக்க ஆரம்பிக்கிறேன்.

தனுஷ் (கார்த்திக்) பெற்றோர் தவறியதால் தங்கை மற்றும் நண்பர்களின் கவனிப்பில் இருந்தாலும் ஒயில்ட்லைஃப் போட்டோகிராபர் ஆவதையே தனது லட்சியமாய் கொண்டு வாழும் இளைஞர். தனது நண்பன் சுந்தர் தன்னுடைய கேர்ள் ஃபிரெண்ட் என அறிமுகப்படுத்தும் யாமினி (ரிச்சா) உடன் ஏற்படும் முதல் மோதல் பின் காதலாய் மாறி திருமணத்தில் முடிகிறது. அந்தத் தருணத்தில், தனது குருவாக கருதும் மாதேஷ் எனும் புகழ் பெற்ற ஒயில்ட்லைஃப் போட்டோகிராபர் தனக்கு துரோகம் இழைத்தது தெரிய வருகிறது. விபத்து, மனநல பாதிப்பு என சிதறிப் போகும் அவனை ஒரு வெற்றி மனிதனாக யாமினி எப்படிச் செதுக்குகிறாள் என்பதே எஞ்சியவை.

“உன்னைப் பிடித்து இருக்கு, டேட் பண்ணிப் பாக்கலாமா” என்று சுந்தர் கேட்டதும் ஒப்புக்கொள்ளும் யாமினி ஒரு நவீன மங்கை ஆக நம் மனதில் பதிக்கிறாள். சுந்தரின் நண்பன் கார்த்திக்குடன் ஏற்படும் மோதல்களில் ஒரு தைரியமான பெண்ணாய் தெரிவாள். ஒரு கட்டத்தில் கார்த்திக்கும் யாமினியும் காதலை வெளிப்படுத்த முடியாமல் சுந்தருக்கு நடுவில் நிகழும் காட்சிகளும் உரையாடல்களும் நம்மையே ஒரு குழப்பத்தில் ஆழ்த்தும். ஆயினும், “அப்புறம் ஏன் சுந்தர்கூட சுத்துற?” என்ற கார்த்திக்கின் கேள்விக்கு, “நான் எங்க அவன் கூட சுத்தினேன், நான் உன்கூட தானே சுத்தினேன்” என்ற யாமினியின் பதில், இன்றைய மனமுதிர்ச்சி மிக்க இளம் தலைமுறை பெண்களின் அப்பட்டமான தெளிவின் வெளிப்பாடு. ஆனால், இன்றைய பெண்களில் பலரும் எது காதல் என்பதில் கொண்டிருக்கும் தெளிவை செயலிலும் வார்த்தையிலும் வெளிப்படுத்தியது இல்லை. இதனால்தான் பல சுந்தர்கள் காதல் மீது நம்பிக்கை இழக்கின்றனர்.

யாமினி தான் வேலைபார்க்கும் விளம்பர நிறுவனத்தில் கார்த்திக்குக்கு ஒரு வாய்ப்பு வாங்கி தரும்போது, அந்த புகைப்படம் எதுவும் சரியில்லை என நிராகரிக்கபடும்போது, “நீ வாழக்கையில் போட்டோ எடுக்குறத நிறுத்திட்டு, வேற ஏதாச்சும் வேலை பார்த்து முன்னேற பாரு. இதுக்குன்னு படிச்சவங்களே இந்த துறையில் சாதிப்பது கஷ்டம்” என்று அவனிடம் சொல்லி அனுப்புவாள். ஒரு கட்டத்தில் கார்த்திக் உடன் காட்டுக்குள் சென்று அவன் எடுக்கும் ஒயில்ட்லைஃப் புகைப்படங்களைப் பார்த்து வியந்து, அவன் தேடல் எது? அவன் திறமை எது? என புரிந்து செயல்பாடுவாள்.

இந்த இடத்தில் வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே வரும் கஸ்தூரி பாட்டி காட்சிகள் குறித்து விவரித்தே ஆகவேண்டும். நமக்கு சமீபத்திய தேர்தலில் பிரபலமானவர் என்றாலும், ‘மயக்கம் என்ன’ படத்தில் ‘போஸ் கொடு’ என்றதும், ஒவ்வொரு போஸிலும் பாட்டி கொடுத்த வேறுபாடு திரையில் நடிக்கத் துடிக்கும் ஒவ்வொருவரும் பார்த்து படிக்க வேண்டிய காட்சியாகவே திகழும். “நான் இவளோ அழகாவா இருக்கேன்?” என்று பாட்டி கேட்பதும், அந்தத் தாத்தா, “என் பொண்டாட்டி அழகா இருந்து நான் பார்த்ததே இல்லை” என்பதும் ‘அழகு எங்கும் நிறைந்துள்ளது; நமக்கு ரசிக்கும் கண்கள்தான் இல்லை’ என்பதை போகிறபோக்கில் சொல்லிச் செல்வார் இயக்குனர் செல்வராகவன்.

யாமினி – கார்த்திக் காதல் திருமணத்தில் சேரும்போது எந்த நெருடலும் நமக்குள் இல்லாமல், உண்மைக் காதல் சேர்ந்தது என்ற உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இனி கதையில் அடுத்து என்ன என்று யோசிக்க முடியாத தருணத்தில் கடகடவென வரும் அடுத்தடுத்தக் கட்சிகளும் கதை திருப்பங்களும் சற்றே திகைக்க வைக்கும்.

கார்த்திக் பல ஆண்டுகளாக யாரிடம் உதவியாளர் ஆக சேரவேண்டும் என துடித்தானோ, அதே புகைப்படக் கலைஞரால் துரோகத்துக்கு ஆளாகி, உலகப் புகழை இழக்க நேரிடும்போது அதிர்ச்சியில் விபத்துக்குள்ளாகிறான். பின்னர் சிகிச்சை, மனநல பாதிப்பு, குடி – போதை என தடம் மாறுகிறது அவனது வாழ்க்கை. ஒரு மனநோயாளியைப் போல் அனைவராலும் பார்க்கப்பட்ட போதும், கார்த்திக்கை யாமினி எப்படி கவனித்துக்கொண்டாள் என்பதற்கு ‘பிறைதேடும் இரவிலே’ என்ற ஒற்றைப் பாடலும் காட்சிகளும் போதும். பாடல் வரிகள், காட்சி அமைப்பு, இசை என அனைத்தும் கச்சிதமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஒன்று சேரும்போது அது ஒரு காவியமாய் மாறுவது உறுதி. எல்லா ஆண்களுக்கும் அந்தப் ஒற்றை பாடலில் யாமினியின் மீது அன்பு வயப்படுவதும் உறுதி.

கார்த்திக்கின் நிலையற்ற தன்மையை அறிந்து, யாமினியிடம் ஆறுதலாகப் பேசுவதுபோல் பேசிவிட்டு அவளுக்கு வலைவிரிக்க முற்படுவான், கார்த்திக்கின் நண்பன் சங்கர். அப்போது அவனுக்கு யாமினி கொடுக்கும் பதில், திருமணமான பெண்கள் பலருக்கும் பாடம். இன்றும்கூட திருமணத்துக்குப் பின் தனது கவலைகளைச் சொல்லி, சாய்வதற்கு ஒரு தோள் தேடும்போது, அதை ஆண்களில் பலரும் வக்கிரத்தனமாக உபயோகிப்பதும், பெண்கள் அதற்கு அறியாமையில் வழிவிடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. யாமினியை இறுக்கமான பெண்ணாகக் காட்டியதுகூட இந்த சமூகத்தில் இறை தேடும் ஆண் நரிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தான் போலும்.

கார்த்திக்கின் செயலால் தன்னுள் இருந்த கரு கலைந்திடும்போது யாமினி சீற்றம் கொள்வாள். அந்த உணர்வுக்கும், அதன் வெளிப்பாட்டுக்கும் எந்த வார்த்தையும் பொருள் தராது. அதை வெறும் முகபாவனையில் நடிப்பில் காட்டி இருக்கும் யாமினி, அந்தப் படத்தில் புதுமுக நடிகை என்று சொன்னால் ஆச்சர்யம். பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு என்பதுபோல் அவள் அதன்பிறகு கார்த்திக் உடன் பேசாமல் இருந்தாலும், தொடர்ந்து அவன் லட்சியத்துக்கும் கனவுக்கும் உறுதுணையாய் இருப்பாள்.

இந்தப் படத்தில் யாமினியின் பெற்றோர் என யாருமே காட்டப்படவில்லை. இன்று கணவன் – மனைவி இடையே எழும் பற்பல சின்னச் சின்ன சண்டைகள், விவாகரத்து வரை போவதற்கு ‘என் பெண்ணை இதுக்கா நான் கட்டிக் கொடுத்தேன்’ என்று வரிந்து கட்டும் பெற்றோர்களும் முக்கியக் காரணம். உண்மையில், கணவன் – மனைவி இடையே எழும் சண்டையில் முன்றாவது நபர் தலையிடாமால் இருந்தால் பல நேரங்களில் அவர்களின் அன்பே அவர்களை மீண்டும் எளிதில் ஒன்று சேர்த்திடலாம்.

கணவன் – மனைவி இடையே புரிதல் இல்லாததே பல திருமணங்கள் முறிந்திட முதல் காரணம் என்கிறார்கள். எந்த நிலையிலும் கணவனை மனைவி புரிந்துகொண்டாலோ, மனைவியின் எதிர்வினைகளை கணவன் ஏற்றுக்கொண்டாலோ அந்தத் திருமணத்தில் ஜெயிக்கலாம் என்ற மறைமுக மந்திரத்தை நமக்கு இயல்பாய் சொல்லிக் கொடுத்துச் சென்றது ‘மயக்கம் என்ன’.

இதே படத்தில் வேறு இரண்டு பெண் கதாபாத்திரங்கள் காட்டப்பட்ட விதத்தையும் இங்கே பதிய விரும்புகிறேன். சமீபத்தில் ‘இறைவி’ திரைப்படத்தில் எல்லோராலும் கவனிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்ட கதாபாத்திரம் மலர். அதை செம்மையாய் செய்த பூஜா தேவரியா, இப்படத்தில் பெண் தோழி பத்மினியாக உறுதுணை கதாபாத்திரத்தில் வலம்வந்திருப்பார். “அட, பூஜா அப்பவே சூப்பரா நடிச்சிருக்குப்பா’ என்று நம்மை இயலபான நடிப்பால் கவனம் ஈர்ப்பார். ஒரு ஆண் – பெண் நட்பு கலங்கம் இல்லாமல் காட்டப்பட்ட திரைப்படத்தில் இதுவும் முக்கியமான ஒன்று.

கார்த்திக்கின் தங்கையாகவும், சுந்தரின் மனைவியாகவுமான விந்தியா (ஷில்பி கிரண்) கதாபாத்திரத்துக்கு தன் அண்ணனின் நண்பன் மீது காதல். அவன் வேறு பெண்ணை காதலிக்கிறான் என்பதால் தன் காதலை சொல்லாமல் மறைத்து வைத்திருப்பாள். அது யாருக்குமே தெரியாது. யாமினியால் சுந்தர் காதல் நிராகரிக்கப்பட்டவுடன் தனக்கான வழி இருப்பதை அறிந்து, உடனே தான் அடக்கி வைத்த காதலை சுந்தரிடம் கொட்டித் தீர்த்து கல்யாணம் செய்துகொள்வாள். நம் சமூகத்தில் பரவலாய் இருக்கும் பேச்சு வழக்குதான்… “நம்ம காதலிச்சவளங்களை விட நம்மள காதலிச்சவங்களை கலயாணம் பண்ணினா, வாழ்க்கை நல்லா இருக்கும்.”

இந்தப் பகுதியில் இயக்குனர் செல்வா காட்சி அமைத்த விதம் அருமை. கதையின் நாயகன், நாயகி காதலுக்கு தரும் முக்கியத்துவம் இந்தக் கட்சிக்கு தேவை இல்லை; ஆனாலும், அதன் தேவை உணர்ந்து கார்த்திக், சுந்தர், அவனது அப்பா ஆகியோர் ஒரே அறையில் இருக்கும் ஒரு நேரத்தில், விந்தியாவின் காதல் அனைவருக்கும் தெரியவரும்படி காட்சி அமைத்திருப்பார். அடுத்தக் காட்சியிலேயே திருமணம் நடப்பது நம்மையும் அந்தக் காதலுக்கு பச்சைக் கோடி காட்ட வைக்கும். கணவனின் முன்னாள் காதலி யாமினியை அண்ணி என்ற மரியாதையுடன் பார்த்தாலும், அவ்வப்போது வார்த்தைகளால் வஞ்சம் தீர்ப்பது, சுந்தர் பெருமை பேசத் துடிப்பதும், கார்த்திக் வெற்றியில் யாமினியை கட்டியணைப்பதும் தனக்குள் இருக்கும் இயல்பான பாசத்தின் வெளிப்பாடு.

உலகம் வியக்கும் ஒயில்ட்லைஃப் போட்டோகிராஃபராக தான் விருது பெற முக்கிய காரணமே தன்னுடைய மனைவி யாமினிதான்; அவள் ஒரு ‘இரும்பு மனுஷி’ என்று எல்லோர் முன்னிலையிலும் சொல்லும் கார்த்திக், யாமியினிடம் பேசுவதற்காக போன் செய்யும்போது படம் முடியும். அந்த முடிவில், அவளை ஏன் அவன் ‘இரும்பு மனுஷி’ என்று அழைக்கிறான் என்று நாம் கொஞ்சம் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினால் தெரியவரும் விஷயம்:

உள் உணர்வுகளையும் புற உணர்ச்சிகளையும் எந்தச் சூழலிலும் வெளிக்காட்டி, கேடு கெட்ட சமூகச் சூழலுக்கு பலிகடா ஆகாமல், அன்பான அழுத்தக்காரியாக தன் காரியத்தை பக்குவமாகவும் நிதானமாகவும் சாதித்துக்கொண்டவளை ‘இரும்பு மனுஷி’ என்று சொல்லாமல் வேறு எப்படி வருணிப்பது?

அழகிகள் தரிசனம் தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.