செய்திகள்

ஜெயமோகனை நிராகரித்தல் : ஜக்கி கட்டுரைக்கு எதிர்வினை…

Akhil Kumar

ஜெயமோகன் மீதான பிடிப்பின்மை அவரது ‘தேர்வுசெய்யப்பட்ட சிலர்’ என்ற கட்டுரையை மறுவாசிப்பு செய்யும்பொழுதே எனக்கு துவங்கிவிட்டது. நித்ய சைதன்ய யதியிடம் வரும் ஒருவர் என்னால் எந்தப் புத்தகத்தையும் படிக்க முடியவில்லை என்று சொல்லும்பொழுது நீ அதற்காகப் படைக்கப்படவில்லை , உனக்கான வேலையைச் செய் என அவர் சொன்னதாகச் சொல்லும் ஜெயமோகன் அப்படி ஒவ்வொருவருமே அவரவருக்கான பணிகள் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவரே எனவும், வேறு எதுவும் அவர்களுக்குச் சரிபட்டு வராது எனவும் குறிப்பிட்டிருப்பார். முதல்முறை இதைப் படிக்கும்பொழுது ‘ஆம், நானும் இப்படி எழுதுவதற்குப் படைக்கப்பட்டேன், வாசிப்பதற்கு படைக்கப்பட்டேன். மற்றவர்கள் அதற்குப் படைக்கப்படவில்லை’ என்று சுய அகங்காரத்தோடு , பெருமிதத்தோடு இருந்தேன். ஆனால் பின்னொருநாள் சிந்தித்துப் பார்த்தபொழுது அதில் எவ்வளவு உள் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன என்பதைக் கண்டுகொண்டேன். ஒரு பிராமணன் கடவுளுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டான், ஒரு தலித் மலம் அள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டான் எனச் சொல்வதற்கு ஒப்பான ஒரு கருத்துதான் தேர்வுசெய்யப்பட்டவர்கள் என்கிற கட்டுரையில் ஜெயமோகன் சொல்லியிருப்பது. நான் நம்புகிற கோட்பாடுகளில் ஒன்றான இருத்தலியலின் மிக முக்கியக் கருத்தான ‘ சாரத்திற்கு முன்பே இருத்தல் இருந்தது’ ( Existence precedes essence) என்பதற்கு முற்றிலும் எதிரான கருத்து ஜெயமோகனுடையது. நீங்கள் ஒரு குறிப்பிட்டச் செயலைச் செய்ய படைக்கப்படவில்லை, முதலில் நீங்கள் உருவாகி வந்தீர்கள் அதாவது உங்கள் இருத்தல் இருந்தது ,அதன்பின்பு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேர்ந்தெடுத்துகொண்ட செயல்களின்படி உங்கள் வாழ்க்கை இருந்தது , நீங்கள் என்னவாக ஆக வேண்டுமென்று முன்னரே யாராலும் திட்டமிடப்படவில்லை, நீங்களே திட்டமிடுகிறீர்கள், அதன்படி உங்கள் வாழ்க்கை அமைகிறது என்பதே இருத்தலியல் தத்துவமாகும். இதை உண்மையென்று நான் நம்புகிறேன். நமக்கு என்ன வாய்ப்புகள் அளிக்கப்படுகிறதோ, அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதைப்போலத்தான் வாழ்வு அமையுமே ஒழிய ஜெயமோகன் சொல்வதுபோல விதியால் அல்ல. ஒருவன் CBSEல் படிப்பதும் இன்னொருவன் ஆசிரியரே இல்லாத பள்ளியில் படிப்பதும் விதியாலா இல்லை நமது அரசின் நடைமுறைகளாலா? உங்கள் விதியால் உங்கள் வாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது என்பது பழமைவாதம் மட்டுமல்லாது அது ஒரு மேட்டிமைத்தனமும் கூட.

சுய அகங்காரத்தை ஒதுக்கி, கற்றுக்கொள்ளுதலில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று சொல்லும் ஜெயமோகனே சுயமதவெறியும், பிற மதக் காழ்ப்பும் உடையவராய் இருக்கிறார் என்பது பெரிய முரண். ஜக்கி வாசுதேவை எனக்குப் பிடிக்காது ஆனால் இந்து மத குருவின் மீதான தாக்குதல் என்பதாலேயே அதனைக் கண்டிக்கிறேன் எனும்போது, தான் சார்ந்த மதத்திற்கு முழு விசுவாசியாய் மாறிவிட்ட ஜெயமோகனைப் பார்க்கிறோம். ஒரு மதத்தின் உறுப்பினராவதென்பது ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராவதைப் போன்றதல்ல. ஒரு அரசியல் கட்சியின் கொள்கைகள் பிடித்தால் அதில் சேர்ந்து அது செய்கிற எல்லா அயோக்கியத்தனத்திற்கும் வக்காலத்து வாங்குவோம். அது நாமே விரும்பித் தேர்ந்தெடுத்து இணைந்த கட்சி என்பதால் வக்காலத்து வாங்குகிறோம் என விட்டுவிடலாம். ஆனால் மதத்தில் இணைவதென்பது யாரும் விருப்பப்பட்டு, பிடித்துப்போய் இணைவதல்ல. பிறப்பாலே இணைந்துவிடுகிறோம். ஒருவன் இந்துவானதோ, இஸ்லாமியன் ஆனதோ, கிறித்துவன் ஆனதோ அவனாக அல்ல. மனிதர்களால் தேர்ந்தெடுக்க முடியாத மதத்திற்கு வக்காலத்து வாங்குகிற ஒரு எழுத்தாளர் அவர் எவ்வளவுபெரிய சிந்தனையாளராக இருந்தாலும் அவர் கருத்துகளைப் புறக்கணிக்கத்தான் வேண்டும். ஒரு மதத்தின் ஆதரவாளராக செயல்படுகிற எழுத்தாளர் மனித சமூகத்திற்கானவர் அல்ல. அவர் மனிதப் பிரிவினைகளைத் திட்டமிட்டு செய்கிற ஒருவர், மத வல்லாதிக்கத்தைத் திணிக்க, நிலை நிறுத்த முயல்பவர்.

பிறப்பால் அமைந்தது என்றாலும், ஒரு மனிதன் தனித்துவிடப்படல் குறித்த பயத்தால் தனது மதத்திற்கு பற்றுள்ளவனாய் இருப்பானென்றால்கூட அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஒன்றின் மீதும் பற்றற்ற ஒருவனாக இருப்பது மிகவும் கடினமான காரியம்தான். ஆனால் அது தன்மதப்பற்று என்பதைத் தாண்டி பிற மதக்காழ்ப்பாக மாறுமேயானால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? அறம் போதிக்கிற ஒருவரே அறம் இல்லாதவராய் இருந்தால் எப்படி அவரைப் பின்பற்ற முடியும்? பாரதிய ஜனதாவின் இந்துதுவத்தை நான் ஆதரிக்கவில்லை, இந்து வாழ்வியல் முறையைத்தான் , அதன் மரபுகளைத்தான் சொல்கிறேன், நம் மண்ணின் வாழ்வியல் முறையான அதை நவீன வாழ்விலும் பயன்படுத்த இயலும் என்று சொன்ன ஜெயமோகனை நான் நம்பினேன். ஆனால் ஜக்கி வாசுதேவ் பற்றிய கட்டுரைக்குப் பிறகு அவர் பழமைவாத மனவோட்டம் தெளிவாகப் புரிந்துவிட்டது. விஷ்ணுவும், சிவனும் இணைந்து ஐயப்பன் பிறந்தார் என்ற கதை ஒரு குறியீடு என்கிறார். என்ன குறியீடு? கடைசிவரை விளக்கவில்லை.

துறவறத்தை விரும்பியவர்களுக்கு ஜக்கி வாசுதேவ் மொட்டை அடித்தார். அவர் மகள் அதனை விரும்பவில்லை, அதனால் அந்தப் பெண்ணின் விருப்பத்தை மதித்து திருமணம் செய்துவைத்தார் என்கிறார் ஜெயமோகன். அவர் மகளுக்கு அவர் எதுவும் செய்யட்டும், அது அவரது உரிமை. ஆனால் அவரிடம் துறவு பூண்டவர்களுக்கு மொட்டை அடித்த ஜக்கி ஏன் தனக்கு மொட்டை அடித்து,முழுவதும் சிரைத்து அலங்கோலப்படுத்திக்கொள்ளவில்லை? ஜக்கியும் ஒரு துறவிதானே? நியாயப்படி அவரும் மொட்டை அடிக்க வேண்டும்தானே? அவர் மட்டும் ஏன் அத்தனைக்கும் ஆசைப்படுகிறார்? ஒருவேளை ஜக்கி துறவி இல்லையெனில் மற்றவர்களுக்கு துறவறம் தரவும், குருவாகவும் அவர் எப்படி தகுதியுள்ளவர் ஆகிறார்?

கிறிஸ்துவர்கள் , இந்துக்களை மதமாற்றம் செய்வதாகக் குறிப்பிடும் ஜெயமோகன் வசதியாக இந்து மதம் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் செய்யும் கொடுமைகளை மறைத்து விடுகிறார். இந்து மதத்தில் தேவையான சீர்திருத்தங்கள் நிகழுமேயானால் ஏன் மதம் மாறப் போகிறார்கள்? அதை ஏன் பேச மறுக்கிறார் ஜெயமோகன்? மதம் பிடிக்காமல்தானே மாறுகிறார்கள்? ஒருவனைத் தீண்டத்தகாதவன், உனக்கு இதுதான் வேலை என்றால் எவ்வளவுநாள் அவன் பொறுத்துக்கொள்வான்? மதம் மாறி அங்காவது விடிவு கிடைக்குமா என்றுதான் பார்ப்பான்.

ஈஷா நில முறைகேடு செய்கிறதா என்று கேட்டால் அரசியல் வாதிகள் செய்கிறார்கள், சிறுபான்மை அமைப்புகள் செய்கிறார்கள் அவர்களை முதலில் கேள்,பிறகு ஈஷாவைக் கேள் என்றெல்லாம் சொல்வது நிச்சயமாக ஒரு சிந்தனையாளர் செய்வதல்ல. அரசியல் கட்சிகளின் மூன்றாந்தரப் பேச்சாளர்களின் கருத்து போல இருக்கிறது ஜெயமோகனின் இந்த சவால்.

ஜெயமோகன் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பதில் நிச்சயமாக எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அவரை எதிர்த்து எழுதுவதற்கான அனுபவமோ, வயதோ எனக்கில்லை. ஆனால் நாம் மிகவும் நேசிக்கிற, பின்பற்றுகிற ஒருவர் எந்த அறமும் இன்றி, வார்த்தைத் திறத்தால், ஒரு பக்கச் சார்போடு , மதக் காழ்ப்போடு ஒரு விஷயத்தை செய்வாரேயானால் அவரை நிராகரித்துச் செல்கிற, அவர் சொல்லிய விஷயங்களைப் புறக்கணிக்கிற சுய அறிவும் அவரைவிட மேம்பட்ட மனித அன்பும் எனக்கிருப்பதாகவே கருதுகிறேன்.

Advertisements

One comment

  1. ///முதலில் கேள்,பிறகு ஈஷாவைக் கேள் என்றெல்லாம் சொல்வது///
    அப்படி அவர் சொல்லவில்லை. முறைகேடுகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் சொல்கிறார்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.