சினிமா

நிழலழகி – 4: எஸ்தர்களை நாம் எப்படி எதிர்கொள்வது?

நிழலழகி – 4

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

பெண்களை ‘ப்ரொட்டாகனிஸ்ட்’ ஆகவும், முக்கியக் கதாபாத்திரங்களாகவும் பதிவு செய்த நல்ல சினிமா படைப்புகள் குறித்த பார்வையே இந்தத் தொடர்.

Neerparavai | Tamil | Seenu Ramasamy | 2012

வெயில் மண்டையைப் பிளக்கும் ஒரு மதிய வேளையில் நான் என் வண்டியில் போகும் போது, ஒருவழிச் சாலையில் சுற்றிக்கொண்டுப் போக பொறுமை இல்லாமல் பக்கத்தில் இருந்த குறுக்கு சந்து பொந்துக்குள் வளைந்து நெளிந்து போகும்போது சடன் பிரேக் போட்டேன். கோயிலில் அன்னதானம் சாப்பிட்டுவிட்டு வெளிய வந்த அந்தப் பாட்டி என் வண்டிக்கு நடுவில் வந்ததால் கொஞ்சம் வேகம் குறைத்து நிறுத்தி வழிவிட்டேன். அடுத்த சந்தில் திரும்புவதற்குள் ஒரு வயதான தம்பதிகளை பார்த்தேன். அவர்களும் அதே கோயிலில் அன்னதானம் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தவர்கள்தான். என் வண்டியை பார்த்ததும் அந்த தாத்தா வேகமாக பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டார், பாதுகாக்கும் உணர்வுடன்.

ஒருவழிச் சாலையை கடந்து வந்த என் மனதிற்குள் தொக்கி நின்றன சில கேள்விகள்: ஒரு பெண்ணிற்கு ஆண் துணை எந்த வயதில் மிகுதியாக தேவை? திருமணமான இளம் வயதிலா? தள்ளாடும் வயதிலா? மனரீதியாக எந்த வயதில் அதிகம் தேவை? வாழ்க்கை ரீதியாக எந்த வயதில் அதிகம் தேவை?

இந்தக் கேள்விக்கு இன்று வரை எனக்கு முழுமையான விடை கிடைக்கவில்லை. சில நண்பர்களிடம் கேட்டுப் பெற்ற பதில்களிலும் முழு திருப்தி இல்லை. சில தினங்களாகவே இந்தக் கேள்விகள் என் மனதைப் பற்றியபடி இருந்தன. ஆனால், ‘நீர்ப்பறவை’ படத்தைப் பார்த்த பிறகு, எஸ்தர் எனும் நிழலழகி இந்தக் கேள்விகளை இன்னும் ஆழமாக மனதில் செலுத்திட வைத்துவிட்டாள்.

*

சீனுராமசாமி இயக்கத்தில் நந்திதா தாஸ், விஷ்ணு விஷால், சுனைனா, சரண்யா, ‘பூ’ ராம், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து உதய்நிதி ஸ்டாலின் தயாரிப்பில் 2012 ஆண்டு வெளிவந்த படம் ‘நீர்ப்பறவை’. இளம் வயதில் வரும் எஸ்தர் கதாபாத்திரத்தில் சுனைனா நடித்திருப்பார். முதிர் வயது எஸ்தர் கதாபாத்திரத்தில் நந்திதா தாஸ் நடித்து இருப்பார்.

பொதுவாக திரைப்படங்களில் கதாபாத்திரத்தின் இளம் வயது, முதுமை வயது இரண்டும் காட்டப்படும்போது மேக்கப் யுக்தியே அதிகம் கையாளப்படும். நரைமுடி, முகச்சுருக்கம், வாயில் புடவை என்று முதுமை அடையாளமாய் காட்டுவர். இயக்குனர் சீனுராமசாமி இரண்டு வேறு நாயகிகளை ஒரே கதாபாத்திரத்திற்கு ஏன் நடிக்க வைத்தார் என்ற உண்மை, கதை முடியும்போது நமக்கும் புரியும். ஆம், இளம் வயது எஸ்தர் கனவுகள், துள்ளல்கள், நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள் என நேர்மறை உணர்வுகளுடன் இருப்பார். முதிர் வயது எஸ்தர் காத்திருப்பு, தவிப்பு, தனிமை என அத்தனை எதிர்மறை துயர உணர்வுகளின் அடையாளம். இளமையில் இருந்து முதுமைக்கு மட்டும் அவள் மாறவில்லை; அவள் கிட்டத்தட்ட வேறு ஒரு பெண்ணாகவே மாற வேண்டிய கட்டாயம். அவள் தனிமையும் இழப்பும்தான் நம்பிக்கையையும் வைராக்கியத்தையும் அவளுக்குள் விதைத்தது.

நந்திதா தாஸ் தனது முகத்தில் அத்தனை உண்மையையும் சோகத்தையும் புதைத்துக்கொண்டு கதை சொல்லிய விதம் நமக்கு ஒரு த்ரில்லர் பட அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால் படம் பார்த்து முடித்த பின் நமக்குள் ஓர் அழகிய அதீத காதல் அலை அடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.

மீனவர்கள் வாழ்க்கையையும் கடல்சார் சூழல்களையும் கதைக்களமாக கொண்டு அதிகப்படியான உண்மைத்தன்மையுடன் பல வாழ்வியல் போராட்டங்களைப் போகிற போக்கில் அழுத்தமாய் சொன்ன படைப்பு எனும் விதத்தில் எனக்கு ‘நீர்ப்பறவை’ மிகவும் பிடித்திருந்தது.

‘இலங்கை கடற்படையிரானால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை’

‘மீனவர்கள் பிரச்சினை: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்’

‘இலங்கை கடற்படையினரைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம்’

நம் மீனவர்கள் கொல்லப்படுவதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளும், அலட்சியம் காட்டும் அரசுகளும், அடுத்த பரபரப்பு வரும் வரை அசைபோடும் செய்தி ஊடகங்களும், அந்தச் செய்திகளைப் பார்த்து உச்சுக் கொட்டிக் கடந்து செல்லும் நாமும் என்றாவது ஒருநாள் இறந்த மீனவர் ஒருவரின் மனைவியின் மனநிலையை யோசித்தது உண்டா?

*

அருளப்பசாமி (விஷ்ணு) இளம் வயதில் குடிக்கு அடிமையாகி எந்த வேலைக்கும் போகாமல் எங்காவது குடித்துக் கிடப்பதைக் கண்டு நொந்து கண்டிக்கும் அப்பா. குடியை நிறுத்தினால் இறந்து விடுவானோ என்ற பயத்தில் செல்லம் கொடுத்து குடியை கண்டிக்காத அம்மா (சரண்யா) குடிப்பழக்கத்தால் ஊருக்குள் யாரும் தன்னை மதிக்கவில்லை என்பது பற்றி கவலை இல்லாமல் எல்லோரிடமும் ஏமாற்றி காசு வாங்கி, குடித்து விட்டு எங்காவது மயங்கி கிடக்கும் அருளப்பசாமி.

ஒருநாள்… தேவாலயத்தில் சின்னச் சின்ன வேலைகள் செய்யும் எஸ்தர் (சுனைனா) எனும் இளம்பெண்ணிடம் ஏமாற்றி, குடிக்க காசு கேட்கிறான். அவளோ அவன் தலையில் கைவைத்து ஜெபிப்பாள். அவள் மீது அந்த நொடியில் காதல் வயப்படுவான் அருளப்பசாமி. பின்பு மெதுவாய் எஸ்தர் தன் காதல் மூலம் அருளை எப்படி குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுத்து அந்த ஊர் மதிக்கும் ஒரு நல்ல மீனவராக மாற்றினாள் எனப் பார்க்கும்போது, எஸ்தர் மீது அருளப்பசாமிக்கு இருந்த காதலைவிட அருளப்பசாமி மீது எஸ்தருக்கு இருந்த காதலின் ஆழமே அவனை மீட்டு முழு மனிதனாக்கியது என்பது புரியும்.

சுனைனா மிக அழகாய் இளம் வயது எஸ்தர் கதாப்பாத்திரத்தில் பொருந்தியிருப்பார். குடியை விட்ட அருளப்பசாமி ‘என்ன வேலைக்குப் போறது?’ என்று கேட்கும்போது, ‘நீ ஏன் யார்கிட்டயாச்சும் போய் வேலை செய்யணும்? கடலில் மீன் பிடிச்சா நீதான் முதலாளி’ என்பாள்!
ஆம், இதுவரை எந்த மீனவரையும் முதலாளியாக நாம் யோசித்தததே இல்லைதானே!!??.

ஒரு கட்டுமரப் படகை தனக்கென வாங்க பாடுபடும் அருளப்பசாமி, அவனுக்கு மனரீதியாக துணைநிற்பாள் எஸ்தர். அருளப்பசாமி திருந்திவிட்டதால் அவனுக்கு தவணைத் தொகையில் படகை செய்து கொடுக்கும் உதுமான்கனி (சமுத்திரக்கனி) போகிறபோக்கில் மீனவர்களின் அவலநிலையை வசங்களில் பதிவுசெய்வார். சுனைனா அருளப்பசாமியின் இதமான காதலை அழகாய் காட்டி இருக்கும் பாடல்களும் பாடல் வரிகளும் இன்றும் நம்மை காதலில் மூழ்கடிக்கும். கடலுக்கு மீன்பிடிக்கப் போக ஆரம்பிப்பதும், ஊர் சம்மதத்துடன் சுனைனாவை திருமணம் செய்து காதல் வாழ்க்கை அழகாய் தொடரும். ‘தேவன் மகளே’ பாடலின் ஒரு காட்சியில் எஸ்தர், அருளப்பனை உப்புமூட்டை தூக்கும் காட்சி இருக்கும். அந்தப் பாடல் வரிகளும் அந்த காட்சியும் அருளப்பசாமி வாழ்க்கையில் எஸ்தரின் பங்கை தெளிவாகக் காட்டும்.

இரண்டு வருட திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக போகும்போது ஒருநாள் கடலுக்குப் போன அருளப்பன் வீடு திரும்ப மாட்டார். எங்கே தேடியும் கிடைக்காமல் நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்து செல்லும்.

இருபது வருடங்களாய் தன் கணவனுக்காக கடற்கரையில் தினமும் எஸ்தர் காத்திருப்பாள். பணத் தேவைக்காக வீட்டை விற்று காசு தரும்படி கேட்கும் மகனிடம் ‘வீட்டை விற்க முடியாது’ என பிடிவாதமாய் சொல்லும் முதிர்வயது எஸ்தர், கொல்லைப்புறத்தில் மெழுவர்த்தி ஏந்தி அழுவதை பார்க்கும் மகன், மறுநாள் அந்த இடத்தை தோண்டும்போது அங்கு தன் அப்பாவின் எலும்புகூடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைவான். ‘அம்மாதான் அப்பாவை கொலைசெய்து வீட்டிலேயே புதைத்து வைத்துவிட்டு இத்தனை ஆண்டுகளாக எல்லாரையும் ஏமாற்றி இருக்கிறாள்’ என்பான்.

இலங்கை கடற்படையால் அருளப்பசாமி சுடப்பட்டதும், பின்னர் உடல் கண்டெடுக்கப்பட்டு வீட்டிலேயே புதைக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் பின்னர் தெரியவரும். இதன் பின்னணியில் அருளப்பசாமியின் அப்பாவுடைய பங்கு மிக முக்கியமானது. காவல்துறையை நாடுவதால் எந்தப் பலனும் இல்லை. மாறாக, வழக்கு – விசாரணை என வாட்டிவதைப்பார்கள். அருளப்பசாமி மிகவும் விரும்பிய அவனது வீட்டிலேயே அடக்கம் செய்யப்படும். அந்த மறைத்துவைக்கப்பட்ட சமாதிதான் எஸ்தருக்குத் துணை. இப்படி பல உண்மைகள் வெளிவரத் தொடங்கும்போடும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியில் உறைந்திருப்போம்.

“ஏன் அரசாங்கத்திடம் சொல்லவில்லை?” என எஸ்தரிடம் நீதிபதி கேட்கும்போது, “சொல்லி என்ன பிரயோஜனம்?” என்று எஸ்தரின் பதில் கேள்விக்கு, எத்தனை அருளப்பசாமிகளின் உயிர்களுக்கு நாம் பதிலளித்திருக்கிறோம்? என்று நமக்குள் கேள்வி எழுப்பி வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கும்.

கடைசியில், “அப்புறம் ஏதற்காக கடற்கரையில் தினமும் காத்திருக்கிறாய்?” என்று கேட்கப்படும்போது எஸ்தர் சொல்வார்:

“அவர் உடம்பு மட்டும்தான் கரைக்கு வந்துடுக்கு, அவர் உயிர் ஒருநாள் என்னைத்தேடி வரும்னு காத்திருக்கேன்.”

அன்பின் ஆழத்தையும், காத்திருப்பின் வலியையும் நமக்குள் நங்கூரமாய் பதியும் எஸ்தரின் செயல் அதீதத்தின் வெளிப்பாடாகத் தெரியலாம். ஆனால், இலங்கை படையினரால் சுடப்பட்டு உயிரிழக்கும் நம் மீனவர்களின் உறவுகள் அதீதங்களை நாடுவதற்கு நம் அலட்சியமும் முக்கியக் காரணம் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்வோம்?

நிழலழகிகளை பின்தொடர்வோம்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.