கருத்து

நூறு நாள் வேலைத் திட்டம்: சில உண்மைகளை பேசித்தான் ஆக வேண்டும்!

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்

இந்த நூறு நாள் கட்டாய வேலைத் திட்டம் குறித்து பேசுவதெல்லாம் கத்தி மேல் நடப்பதற்குச் சமம். ஆனாலும் இந்த வறட்சி, விவசாயம் என்றெல்லாம் பேசும் போது அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி புரியும் அம்மாவின் மகன்தான் ரோலக்ஸ் வாட்ச் நாயகன் என்பது நான் எந்தப் பக்கம் என்பதை உணர்த்தியிருக்கும். அந்த சொற்ப பணத்தை வைத்து ரேஷன் அரிசி பொங்கிக் குடும்பம் நடத்தும் மூதாட்டிகளை எனக்குத் தெரியும்.

சும்மா கிடைக்கிறதே என்பதற்காக தலை கணக்கிற்குப் போய் விட்டு வாய்க்கா வரப்பில் உட்கார்ந்து வெட்டி ஞாயம் பேசுபவர்களையும் தெரியும். பெரும்பான்மை ரேஷன் அரிசிதான் என்பதில் கூடுதல் தெளிவிருக்கிறது. அவர்களையும் இந்தத் திட்டத்தின் ஊழல் கூட்டாளி ஆக்கினார்கள். ஊருக்குத் தகுந்த மாதிரி பத்திலிருந்து பதினைந்து ரூபாய் வரை தலை கணக்கில் கமிஷன் அடித்தார்கள். கிராமங்களில் பதவிகளில் இருக்கும் உள்ளூர் உத்தமன்கள்தான் அதைச் செய்தார்கள். மக்கள் கூட்டாளிகள்.

ஏரியைத் தூர்வாரப் போகிறோம் எனக் கிளம்பிப் போவார்கள். வெத்தலைகள் பரிமாறிக் கொள்ளப்படும். சுண்ணாம்புகள் மாறி மாறித் தடவிக் கொள்ளப்படும். பொழுது சாய வீட்டிற்கு வந்து விடலாம். அவர்கள் வறுமைதான் இந்த வேலைக்கே அழைத்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால் உழைப்பு. உழைக்காமல் உண்ணும் உணவு திருட்டு உணவிற்கு சமம் என்றார் காந்தி. அது அவர்களின் உரிமைதான் என்ற போதும், ஒரு ஒட்டுமொத்தக் கூட்டமும் திருட்டைச் செய்கிற மாதிரி ஆயிற்று பார்த்தீர்களா?

அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில வேலைகள் நடந்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மை எந்தப் பக்கம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவர்களின் வேலை என்ன? தமிழகத்தில் ஊடுருவியிருக்கிற ஏரி குளங்களைச் செப்பனிட வேண்டியது. செய்தார்களா? ஆளுக்கு ஒரு பிடி மண்ணை அள்ளிப் போட்டிருந்தால்கூட, பாதி விஷயங்களைச் சரி பண்ணியிருக்கலாம். ஒட்டுமொத்தமாக நேர்மையில்லாமல் செயல்பட்டோம். எவன் அப்பத்தா வீட்டுக் காசு கொடுக்கட்டும் என்றீர்கள் அல்லவா?

விவசாயத்திற்கான பணியாளர் தட்டுப்பாடு ஏன் வந்தது? விவசாயப் பணியாளர்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். பாதி நிலங்களில் பயிர் சாகுபடியை ஏன் குறைத்தீர்கள்? இப்போதுதானே தண்ணீர் பிரச்சினை. அப்போது பணியாளர் தட்டுப்பாடுதானே பெரிய பிரச்சினையாக இருந்தது. அதற்குக் காரணம் என்ன? அந்தத் திட்டத்தால் விவசாயமும் தழைக்கவில்லை. விவசாயத்திற்கு உதவியாக நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் செய்யவில்லை. மறுபடியும் சொல்கிறேன். சில இடங்களில் நடந்திருக்கலாம்.

இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். அதை எபெக்ட்டிவ்வாக ஊழல் களைந்து செயல்படுத்த முனையலாம். விடுவார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஜனநாயகத்தில் மக்கள் மீதான குறைகளையும் பேசியாக வேண்டும். உழைக்காமல் உண்ணும் உணவு திருட்டு உணவு என காந்தி இப்போது இருந்திருந்தால் நிச்சயமாகச் சொல்லியிருப்பார். தெருத் தெருவாக அலைந்து பிரச்சாரமும் செய்திருப்பார். மக்களையே கண்டிக்கும் தார்மீக வலிமை அவரைப் போன்றவர்களுக்கு இருந்தது. இப்போது யாருக்கு இருக்கிறது?

சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர். சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

Advertisements

One comment

 1. வணக்கம்
  சரவணன் சந்திரன் அவர்களே

  நூறு நாள் வேலைத்திட்டம் குறித்த உங்கள் கருத்தை நான் கண்டிக்கின்றேன். மறுக்கிறேன். நூறு நாள் வேலைத்திட்டத்தின்கீழ் வேலை செய்யும் மக்கள் ஏமாற்றுக்காரர்கள் அல்ல. உழைப்பதை பற்றி நீங்கள் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்காதீர்கள். குறைந்த கூலிக்கு எவ்வளவு சுரண்டப்படுகிறோம் என்றும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

  மக்களை குறை சொல்வதை நிறுத்துங்கள்

  நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு அரசு ஒதுக்கும் நிதி, அவை எந்ததெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மக்களுக்கு எவ்வளவு கொடுக்கப்படுகிறது? அதை பொறுப்பெடுத்துக்கொ ண்ட அரசியல்வாதிகள் எவ்வளவு சுருட்டுகிறார்கள்? என்பது குறித்து விவரங்கள் இருக்கா? மக்களிடம் வேலை செய்திருக்கிறீர்களா? அவர்களோடு உறவாடி விட்டு பதிவுபோடுங்கள். எழுத்தாளர் என்பதற்காக எதையாவது எழுதக்கூடாது.

  உழைக்காமலேயே மக்கள் வரிப் பணத்தில் ஊழல் செய்து சுகபோக வாழ்க்கை நடத்தும் திருட்டு கும்பலை ஆட்சியாளர்களை பற்றி முதலில் பேசுங்கள். மக்கள் ஊழல் செய்கிறார்கள் சுகபோக வாழ்க்கைக்கு இத்திட்டம் வழிவகுத்துவிட்டதே என்று கண்ணீர் விடாதீர்..

  விவசாயம் நசிந்து வேலையில்லாமல் வறுமையில் நெருக்கடியில் நாடுவிட்டு, மாநிலம் விட்டு நகரம் நோக்கி புலம்பெயரும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கம் வாழ வழியின்றி அலைந்துகொண்டிருககிறார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதிசெய்து பாதுகாப்பது முக்கியம். அதற்கு சிறிது உயிராதாரமாக இருப்பது இத்திட்டம்தான். அதனையும் மோடி அரசு முடக்கியிருக்கிறது.

  ஒவ்வொரு குடிமகன்/ள் க்கும் உண்டான அடிப்படை வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்துவது அரசின் கடமை. அவர்கள் உழைத்தாலும் உழைக்காவிட்டாலும் குறைந்தபட்ச ஊதியம் வாழ்வை வாழ்வதற்கான ஊதியத்தை அரசு கொடுக்க வேண்டும். இன்றுவரை உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கவேண்டும் என்பதற்குதான் தொழிலாளர்களும், விவசாயிகளும், பெண்களும் போராடிக்கொண்டிருருக்கிறார்கள். அவர்களுக்கான கூலியை சரியாக கொடுக்க சொல்லுங்கள்.

  மக்கள் உழைக்காமல் வாங்கித் திண்கிறார்கள் என்கிற பரப்புரையை செய்வதன்மூலம் அவர்களுக்கு சேரவேண்டிய பணத்தை இன்னும் சுருட்டுவதற்குதான் வழிவகுக்கும்.

  நாம் பேசும் கருத்தும் எழுத்தும் எந்த வர்க்க மக்களுக்கானது என்பது முக்கியம்.

  ரமணி
  சிபிஎம்எல்மக்கள் விடுதலை

  9566087526

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.