அழகிய பெரியவன்
ஓர் எழுத்தாளர் இறந்து போனால் அவருக்கு அஞ்சலியாக அவர் படைப்புகளின் மேன்மைகளை முன்வைத்து பேசுவதே சிறந்த நினைவு கூறலாக இருக்கும். SBS வானொலியில் அசோகமித்திரன் குறித்து ஜெயமோகன் பேசியிருப்பது அப்படி இல்லை. அந்த பேச்சு அருவருப்பூட்டுகிறது. எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்குகிறது.
பாரப்பனர்களால் பாவம் ஒரு விருதைக்கூட வாங்க முடியவில்லை என்கிறார். தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் யூதர்களைப் போல நடத்தப்படுகின்றனர் என்று அசோகமித்திரன் சொன்னதைப் போலத்தான் இருக்கிறது இதுவும். அறிவுத்துறையில் பட்டங்கள், பதவிகள், பரிசுகள், ஆங்கில மொழி பெயர்ப்புகள், நிதி நல்கைகள், வெளிநாட்டு பயணங்கள், ஆய்வு உதவிகள், ஊடக திரைப்பட வாய்ப்புகள் என பல அனுகூலங்கள் யாருக்கு இங்கு அதிகம் கிடைத்துள்ளன என்று ஒரு ஆய்வு மேற்கொள்ளலாம். உண்மை தெரிந்து விடும்.
வாழ்க்கையை நடத்த அசோகமித்திரன் கார் ஓட்டியிருக்கட்டும், அவர் மனைவி அப்பளம் விற்றிருக்கட்டும். என்ன குறைவு? தமிழ் எழுத்தாளர்கள் பலரும் பலவகையான வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அன்றாடம் இந்த நாட்டில் மலக்குழியிலும், சாக்கடைத் தொட்டியிலும் இறங்கி மனிதர்கள் சாகிறார்களே? அவர்களை விடவும் எழுத்தாளர்கள் ஒன்றும் வேறல்லவே? அசோகமித்திரனுக்கு சாதாரண பரிசான சாகித்திய அகாதமி விருது கிடைப்பதற்கு கூட கீழ் மகன்கள் பலபேர் விடவில்லை என்கிறார்.
தமிழ் சமுதாயத்தால் தங்களுடைய பெருமிதம் என்று முன் வைக்கப்படுகிறவர்கள் குஷ்டநோயைப்போல பொத்தி வைக்கக்கூடிய இழி மகன்கள் என்கிறார். ‘கீழ் மகன்கள்’ , ‘குஷ்ட நோயைப்போல பொத்தி வைக்கக்கூடிய இழி மகன்கள்’… இவையெல்லாம் எவ்வளவு மோசமான வார்த்தைப் பிரயோகங்கள்? டால்ஸ்டாய், தாஸ்தயேவ்கி, மேரி கொரல்லி படிக்கிற, அறம் எழுதுகிற ஒரு மனதால் இவ்வளவு வன்மத்தோடு எப்படி பேச முடிகிறது?
அழகிய பெரியவன், எழுத்தாளர்.