சினிமா

நிழலழகி – 5: தாராக்களும் தாராள சிந்தனையும்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

பெண்களை ‘ப்ரொட்டாகனிஸ்ட்’ ஆகவும், முக்கியக் கதாபாத்திரங்களாகவும் பதிவு செய்த நல்ல சினிமா படைப்புகள் குறித்த பார்வையே நிழலழகி தொடர்.

O Kadhal Kanmani | Tamil | Mani Ratnam | 2015

“நிழலழகிகள் எல்லாருமே ஏன் சோகமாவே இருக்காங்க? சந்தோஷமாவே இருக்க மாட்டாங்களா?” என்ற நண்பர் ஒருவரின் கேள்வியை எதிர்கொண்ட பின் ஈடுபட்ட தேடலின்போது முதலில் இயக்குநர் மணிரத்னம் படங்களை வரிசைப்படுத்தினேன். ஆம், அவர் படங்களில் நாயகிகளுக்கு இயல்பாக ஒரு குறும்புத்தனம் துருத்திக் கொண்டிருக்கும். மணிரத்னம் படங்களில் வரும் நாயகர் எல்லோரும் பெண்கள் மனதை கவர முக்கிய காரணம், அவர்கள் நாயகியின் குறும்புத்தனத்தையும், அசட்டு தைரியத்தையும் ரசிப்பதும், உரிய உறுதுணைப் பெற்றுக்கொண்டு உறுதுணையாய் இருப்பதும்தான். அதனாலேயே பல பெண்களின் கனவு நாயகனாக இன்னமும் மணிரத்னம் படங்களின் நாயகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலின் ஒரு பிரபல நிகழ்ச்சியில் பெண்களிடம் ‘திருமணத்துக்கு உங்கள் பெற்றோர் என்ன கொடுக்க வேண்டும், உங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும்?’ என்று கேட்கப்பட்டது. வாழ்க்கையில் எந்தக் கஷ்டத்தையும் இன்னும் அனுபவிக்காத சில இளம்பெண்கள் தங்கள் திருமணக் கனவுகள் ஆசைகளை வெளிப்படையாக வெளிப்படுத்தினர். அதற்காக, அவர்களை வைத்துச் செய்த மீம்ஸ்களும், சமூக வலைதள கருத்துகளும் ‘இனி எந்தப் பெண்ணும் அப்படி வாயைத் திறக்க கூடாது’ என்ற அளவில் கலாய்த்துத் தள்ளி, ஏதோ ஒட்டுமொத்த பெண் சமூகமும் மாறிவிட்டது போல் ட்ரோல் செய்தனர்.

இவ்வாறாக, ஒரு பெண் எதைக் கேட்க வேண்டும்? எதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கூட ஓர் ஆணோ, அவள் சார்ந்து இருக்கும் குடும்பமோ அல்லது சமுகமோதான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையில், ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் வரும் தாரா சுகந்திரமாக தன் வாழ்க்கையை வாழ்வதும், அவள் எடுக்கும் முடிவுகளை அவளே பரிசீலனை செய்து சுயமாகவும் தெளிவாகவும் தீர்மானிப்பதும் அவளை நிலழகியாக உயர்த்தி ரசிக்கவைக்கிறது.

‘ஓ காதல் கண்மணி’ 2015-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்’ராஜ், லீலா சாம்சன் ஆகியோர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் வெளிவந்த படம்.

ஏஞ்சலோ அண்ணனுக்கு வயது 50-ஐ கடந்துவிட்டது. அவர் எனது குடும்ப நண்பர் – மென்ட்டர். எங்களுக்குள் சினிமா பார்ப்பதில் ஒத்த ரசனை அதிகம் உண்டு. நான் அதிகமாக தியேட்டருக்குச் சென்று படம் பார்த்ததும் பார்ப்பதும் அவருடன்தான். ‘ஓ காதல் கண்மணி’ பார்க்கும்போது அவர் வயதுக்கு இந்தக் கதையை எப்படி எடுத்துக்கொள்வாரோ என்று நினைத்தேன். படம் பார்த்து முடித்ததும் அவர் “இந்த லிவிங் டுகெதர் எல்லாம் நான் கல்லூரி படிக்கும்போதே உண்டு” என்று தனது நட்பு வட்டத்தில் அப்படி இருந்த ஒரு ஜோடியை பற்றி பல விஷயங்கள் சொல்லி முடித்துவிட்டு, “இப்போதான் இதெல்லாம் சினிமாவிலயே வருது” என்றுச் சொல்லி என்னை வியக்கவைத்தார்.

பாலுறவு ஒழுக்கம் பற்றி அதிகம் பேசும் நம் நாட்டில் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசினாலே கலாச்சாரம் கெட்டுப் போய்விடும் என்று நம்பும் மூடத்தனம் நிறைந்தவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம்.

ஆதி (துல்கர் சல்மான்) ஒரு கம்ப்யூட்டர் கேம் சாஃப்ட்வேர் என்ஜினீயர். தாரா (நித்யா மேனன்) ஆர்க்கிடெக். காதல் மீது ஈர்ப்பு கொண்ட இவர்களிடம் மலிந்துள்ள திருமணம் மீதான அவநம்பிக்கையுடன் கூடிய வெறுப்பைப் போக்கி, அவர்களது உறவை அழகாக நிர்வகிக்க முதிர் வயது தம்பதி கணபதி அங்கிள் (பிரகாஷ் ராஜ்) பவானி ஆன்ட்டி (லீலா சாம்சன்) எப்படி உறுதுணைபுரிகின்றனர் என்பதே கதை.

மும்பை ரயில் நிலையத்தில் தற்கொலை செய்ய முற்பட்ட பெண்ணை மீண்டும் தனது தோழியின் திருமண நிகழ்வில் பார்க்கும் ஆதி, தாரா உடன் அறிமுகம் ஆகிறார். முதல் சந்திப்பிலே இருவரும் திருமணம் மீதான ஈடுபாடின்மையையும், கனவு – லட்சியங்களையும் மிக இயல்பாக பரிமாறிக்கொள்வர், செல்போன் நம்பர் உட்பட.

வேலை நிமித்தமாக தனது குழுத் தோழிகளுடன் அகமதாபாத் செல்லப் போவதாக ஆதியிடம் சொல்லும் தாரா, அவனை ரயிலில் பார்த்ததும் அதிர்ச்சி அடைவாள். தனக்காகத்தான் வந்து இருக்கிறான் என்பது தெரிந்து சந்தோஷம் கொள்வாள். அவர்களின் அகமதாபாத் பயணம் தொடங்கும். தாரா தனது வேலை முடித்து ஆதியுடன் காந்தி ஆசிரமத்துக்கு செல்லும்போதுதான் தான் யார்? தனது குடும்ப பின்னணி என்ன? என்று விவரிப்பாள். அப்போது, “கோர்ட்ல எழு வயசு குழந்தையை கூப்பிட்டு, உனக்கு அப்பா கூட போணுமா? அம்மா கூட போணுமானு கேட்டா… என்ன சொல்ல? அப்பவே முடிவு பண்ணிட்டேன், எனக்கு யாரும் வேண்டாம்னு” என்று கண்கலங்க சொல்லும்போது அவளுக்கு திருமண உறவு மீது வெறுப்புத் தொற்றியதற்கான காரணம் புரியும்.

சென்னை ரயிலை தவறவிட்டதால் அன்றைய தினம் ஆதியுடன் லாட்ஜ் ஒன்றில் தாங்கும்போதும், இருவரின் தனிமையை உடம்புக்குத் தீனிபோட வாய்ப்பாய் அமைத்துக் கொள்ளாமல், அந்த இரவை ரம்மியமான இரவாக மாற்றியிருப்பாள் தாரா.

மும்பை வந்த பின்பும் இருவரும் ஒருவரையொருவர் அதிகமாய் ஈர்க்கப்படுவதையும், காதல் வயப்படுவதையும் உணர்த்தும் பல காட்சிகளுக்குப் பின் இருவரும் எல்லைகள் இன்றி தேகத் தேவையையும் பரிமாறிக்கொள்வர். எல்லாப் பெண்களும் படுக்கையில் ஆணிடம் எல்லாம் முடிந்த பின் கேட்கும் கேள்வி: “என்னைப் பிடிச்சு இருக்கா?” என்பதுதான். அதுதான் ஒவ்வொரு பெண்ணும் தான் வெறும் தேகத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது என்பதைக் கேட்டு உறுதி செய்துகொள்ளும் இடம். காதல்தான், ஆனால் திருமணம் வேண்டாம். அவரவர் லட்சியத்தை நோக்கிப் பயணித்து இலக்கை அடையும் வரை ஒரே வீட்டில் சேர்ந்திருப்பது என முடிவு செய்வர்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட முதிர்வயது தம்பதி பவானி, கணபதி வீட்டில் பேயிங் கெஸ்ட் ஆக தங்கும் ஆதி தன்னுடன் தங்குவதற்கு தாராவை அழைத்துச் செல்வான். முதலில் இதற்கு ‘மாட்டேன்’ என்று சொல்லும் கணபதி அங்கிள், தாராவுக்கு கர்நாடக சங்கீதத்தில் இருக்கும் ஆர்வம் பவானி ஆன்ட்டிக்கு பிடித்துப் போவதை புரிந்தபின் அவர்களை அனுமதிப்பார்.

பவானி ஆன்ட்டி ஒரு சிறந்த கர்நாடகா இசைப் பாடகி என்றபோதும், முதுமை காரணமாக அவருக்கு ஒருவகை மறதி நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தெளிவாகக் காட்டப்படும். அதுகுறித்த முழுமையான புரிதலுடன் பவானி ஆன்ட்டி மீது கணபதி அங்கிள் நேசித்தைக் காட்டும் விதம் அழகிலும் அழகு மிகு காட்சிகள். என்ன செய்தோம், என்ன கேட்டோம் என்று கூட மறந்து போய்விடும் பவானி ஆன்ட்டி, ஓர் இடத்தில் ஆதியும் அவன் நண்பனும் “கணபதி அங்கிளிடம் எப்படி லவ் ஸ்டார்ட் ஆச்சு?” என்று கேட்டதும், தன் காதல் நினைவுகளை வரிசையாக அடுக்குவார். பவானி ஆன்ட்டியின் அந்த நினைவுப் பகிர்வுகளை கேட்டதும், “இப்ப மட்டும் இவங்க மறதி நோய் எங்க போச்சு?” என்று வினவிடத் தோன்றும். காதல் நினைவுகள் பசுமையானது. அது மறையாது என்ற உண்மை மட்டுமல்ல; காதல் அழகானது. அது எந்த வயதில் இருந்தாலும் நம்மை ஏற்றுக்கொள்ள வைக்கும் என்று அப்போது உணர்வோம்.

தனது சொத்து மதிப்பைப் பார்த்து காதலிக்கிறேன் என்று வந்த முதல் காதலனை நிராகரிக்கும்போதும், ஆதியுடனான உறவு தன் அம்மாவுக்குத் தெரியும்போது திருமண பேச்சு வேண்டாம் என பிடிவாதமாய் இருக்கும்போதும் தாராவின் சிறு வயது வடு எவ்வளவு ஆழமானது என்று புரியும்.

தாரா தான் காத்திருந்த பாரீஸ் மேல்படிப்புக்கான வாய்ப்பு கிடைத்ததும், ஆதி இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றும், ஆதி மேல் இருப்பது காதல்தான் என்பதும் புரியும் அதேநேரத்தில் ஆதிக்கு வரும் அமெரிக்கா வாய்ப்புக்கு வாழ்த்துச் சொல்வாள். அப்போது, இருவரும் பத்து நாள் சண்டை போடாமல் சந்தோஷமாக இருப்பது என முடிவு செய்தாலும், அவர்களின் பிரிவு தரப் போகிற வலியின் பயத்தில் இருவரும் சண்டையிட்டு கொண்டாலும், காதலையும் லட்சியத்தையும் விடுவதற்கு மனமில்லாமல் இருப்பர்.

பவானி ஆன்ட்டிக்கு மறதி நோய் அதிகரித்த நிலையில், வீட்டுக்கு வர முடியாமல் தவிக்கும்போது கணபதி அங்கிள், ஆதி, தாரா மூவரும் தேடும்போது, வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு முக்கியம் என்பதையும், அதை என்றும் பிரியாமல் பார்த்துக்கொள்வதில் திருமண பந்தம் எவ்வளவு உறுதுணை புரிகிறது என்பதையும் உணர்ந்து, திருமணம் செய்துகொண்டு அவர்கள் கனவின் லட்சியத்தை கணவன், மனைவியாக தொடர்வர்.

ஒவ்வொரு பாடல் காட்சியிலும் தாராவின் துள்ளல் மிகு சந்தோஷம் நம்மையும் தொற்றிக்கொள்ளும். மாடர்ன் பெண்ணாக உடையிலும், சிந்தனையிலும் காட்டி இருந்தாலும் கர்னாடக இசை மீது நாட்டம் என்பது அழகு. அம்மாவின் சொத்துக்கும் பண வசதிக்கும் விலைபோகாமல் படிப்பு, வேலை என தனக்கான தடங்களை அமைப்பதில் இருந்த ஆர்வம் பேரழகு. இப்படி யாரும் தேவையில்லை என வாழ்ந்தாலும் ஆதியின் அன்பில் முழுமை பெறுவது அழகோ அழகு. ‘சுதந்திரம் என்பது யாரும் தேவையில்லை என்று இருப்பது இல்லை. யாரை சார்ந்து இருந்தாலும் நம் தனித்தன்மையை இழக்காமல் இருப்பதும் சுதந்திரம்தான்’ என தாரா எனக்கு உணர்த்தினார்.

காதலிக்கும்போது உலகின் சிறந்த அழகியாக, அறிவாளியாக தெரியும் காதலி, மனைவியாகும்போது பெரும்பாலும் ஒன்றும் தெரியாதவள் ஆகிறாள். உண்மையில் தாராவை போல தனக்கான வாழக்கையை சுதந்திரமாக சின்னச் சின்ன விஷயங்களில் கூட சுயமாய் முடிவு எடுக்கும் பெண்கள் கூட இன்றும் பல தோல்வியுற்ற, விரக்தி நிறைந்த திருமண உறவுகளைப் பார்த்து, இந்தக் குழிக்குள் தானும் விழுந்து விடுவேனோ என்ற அச்சத்தில் திருமணமே வேண்டாம் என்று நிராகரிக்க முற்படுவது உண்டு. அவர்களுக்கும் காலப்போக்கில் உரிய பக்குவம் தானாக வரும்போது, புரிதலுடன் கூடிய வாழ்க்கை அமையும்; அது, இந்த சமூக அமைப்புக்குள் அழகாய் அமையும் என நம்பி வைப்போம்.

தாராகளையும், ஆதியையும் கலாச்சார சீர்கேடு என்று ஒதுக்காமல், பவானி ஆன்ட்டிகளும் கணபதி அங்கிள்களும் பரஸ்பரம் புரிதலுடன் கூடிய அன்புடன் வாழும் இந்தச் சமூகத்தில், தாராக்களுக்கும் ஆதிகளுக்கும் வாழ்க்கையை எப்படி அணுகுவது என்பதில் பெரிதாக குழப்பம் வராது என நம்பலாம்.

நிழலழகிகளை பின்தொடர்வோம்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: