தலித் ஆவணம்

பொது குழாயில் நீர் எடுக்கச் சென்ற அருந்ததிய மக்கள் மீது தாக்குதல்

ரபீக் ராஜா

ரபீக் ராஜா

தொட்டியபட்டி கிராமம், கொத்தங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது. தனித்தொகுதி. தொட்டியபட்டியில் ஏறக்குறைய 400 குடும்பங்கள் நாயுடு சாதியினர். 50 குடும்பங்கள் அருந்ததியினர்.

கடந்த 30.03.2017 அன்று, அருந்ததியினர் காலனி குடியிருப்பில் உள்ள 43 வீடுகளை அடித்து நொறுக்கியும், 3 வீடுகளை எரித்தும், சோற்றுப் பானை, குடங்கள், டிவி, மின்விசிறி என அனைத்தையும் சிதைத்தும், சிறுவர்கள், சிறுமிகள், கைகால் விளங்காத முதியவர் என அனைவரையும் தாக்கியும் ஒரு சாதிவெறியாட்டம் நிகழ்ந்திருக்கிறது.

அங்கே பேசியதில் இருந்து …

ஊருக்கு வெளியே இருக்கும் சுடுகாட்டில் ஒரு தண்ணீர் தொட்டியும், குழாயும் இருக்கின்றன. குடிதண்ணீர் குழாய் வசதி ஊர் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் கட்டுப்பாடு அதாவது தண்ணீர் திறந்துவிடும் நேரம், சாவி போன்றவை நாயுடு சமூகத்தினரிடம் இருக்கிறது. முறைவைத்து தண்ணீர் பிடிப்பதில் நீண்டநாட்களாகவே பிரச்சினை இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அடிக்கடி இந்தக் காலனி பகுதிகளில் தண்ணீர் குழாய் பழுது என்பதாலோ, வேறு சில ஆதிக்கத் திமிராலோ தண்ணீர் வருவதில்லை. ஆகவே, இந்த மக்கள், பக்கத்து ஊரான வன்னியம்பட்டியில், மினிபஸ்ஸில் சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள். பிற பயன்பாட்டுக்காக, சுடுகாட்டில் இருக்கிற குழாயைப் பயன்படுத்துகிறார்கள்.

கண்மாய் அருகே குடியிருக்கும் இக்குடும்பங்கள் பலவற்றுக்குப் பட்டா இல்லை. பத்துக்கும் குறைவான மக்கள் ஒப்பந்தத் துப்புறவு பணியாளர்களாகவும், பிறர் அருகில் உள்ள மில்களிலும் வேலைக்குச் செல்கின்றனர். தனித்தொகுதி என்றாலும் இந்தத் தொட்டியபட்டியில் இவர்களது வாக்கு 90 மட்டுமே. கடந்த ஊராட்சியின் போது சமுதாயக்கூடம் ஒன்று, இந்தக் காலனிக்கு அருகில் கட்டப்பட்டிருக்கிறது. அதை நாயுடு சமூக மக்கள் மட்டுமே பயன்படுத்துவதாகவும், காலனி மக்களை அனுமதிக்கவில்லை என்பதும் ஏற்கனவே இங்கு பிரச்சனையாக இருந்திருக்கிறது.
பள்ளிகளில் பயிலும் அருந்ததியின மாணவர்களைக் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்வது, சுடுகாட்டுச் சடங்குகளில் அருந்ததியின மக்களை நிர்பந்திப்பது என்று ஏற்கனவே, அடக்குமுறைகளை இம்மக்கள் எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். காலனியில் தனியாகக் கடைகள் ஏதுமில்லை. இவர்கள் நாயுடுகள் பகுதிக் கடைகளுக்கு வரக்கூடாது என்று கட்டுமானம் இருக்கிறது. அருந்ததி இனக் குழந்தைகள் பக்கத்து ஊர்களுக்குச் சென்று தின்பண்டங்கள் வாங்குவதும், அன்றாடத் தேவைகளுக்கும் இம்மக்கள் பக்கத்து ஊருக்குமே செல்கின்றனர். ரேசன் கடைகளுக்குக் கூட, குறிப்பிட்ட ஒரு நாள் தவிர்த்து, பிற நாட்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் தீண்டாமைச் சுவர் ஒன்று, கட்டப்பட்டு, எதிர்ப்பு வலுக்கும்போது, சமையற்கூடமாக மாற்றப்பட்டு, அங்கும் அருந்ததியினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இவ்வாறாக, ஊருக்குள் அனுமதி மறுப்பு, சமுதாயக்கூட அனுமதி மறுப்பு, பள்ளி, ரேசன்கடையில் பாரபட்சம், சுடுகாட்டிலும் நிழற்குடை இல்லாத தனிஇடம் என்று பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. குடி தண்ணீர் பிரச்சினை, அதிகபட்சமாக, புழங்கு தண்ணீரிலும் அடக்குமுறை.

கடந்த 31.03.2017 அன்று, சுடுகாட்டுக் குழாயில், காலையில் நீர் பிடிக்கவேண்டிய, காலனி மக்கள், வளைகாப்பு ஒன்றுக்குச் சென்றதனால், மாலை செல்கின்றனர். காலையில் தான் வரவேண்டும் இப்போது இல்லை என்று நாயுடு சமூகத்தினர், காலனி மக்களின் குடங்களை வீசி எறிந்தும், விரட்டியும் இருக்கின்றனர். வாக்குவாதம்!

சற்றுநேரத்தில், நாயுடு ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், உருட்டுக்கட்டை, கம்பு, கற்கள், மண்ணெண்ணெய்க் கேனுடன், காலனிக்குள் நுழைந்து, வீடுகளை நொறுக்கியும், பண்டபாத்திரங்களை உடைத்தும், டிவி ஒன்றைத் தூக்கிச் சென்றும், மூன்று வீடுகள், சின்னசின்ன கொட்டகைகளை எரித்தும், பெண்கள் இருவர், முதியவர், குழந்தைகளை அடித்தும், வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியதாக அம்மக்களிடம் பேசியதிலிருந்து அறியமுடிந்தது.

30 நாயுடு ஆண்களும், சில அருந்ததி ஆண்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஊர் முழுவதும் போலிஸ் குவிக்கப்பட்டிருக்கிறது.

சிபிஎம் , விசிக, ஆதித்தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள், பியுசிஎல் ஆகிய கட்சிகள் /அமைப்புகள் தொட்டியபட்டியில், காலனி மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

ரபீக் ராஜா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

Advertisements

பிரிவுகள்:தலித் ஆவணம்

Tagged as:

2 replies »

  1. இவ்வளவு அடி உதை வாங்கியும் ஏன் இந்த இந்து ஜாதி சாக்கடையில் உழல வேண்டும்?. சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம் வேண்டுமானால் திருக்குரானை எடு. இஸ்லாத்தை தழுவு.

    Like

    • இந்த நாட்டுக்குள் இருப்பது வரை சுற்றியிருக்கும் மக்கள் மாறப்போவதில்லை. எந்த மதத்துக்கு மாறினாலும் ஊடகங்கள் வரும் படம் எடுக்கும் நிலைமை அப்படியேதான் இருக்கும். ஒடுக்கபட்டவர்கள் இனைந்து தற்சார்புடன் இருக்க ஏற்பாடு செய்யவேண்டும். பழைய இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதே என் சந்தேகம் ?!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s