சினிமா

நிழலழகி – 7: சாதி ஆணவமும் மீராக்களின் சீற்றமும்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

NH10 | Navdeep Singh | Hindi / Haryanvi | 2015

காதலும் மசாலாவும் மிகுந்ததுதான் வர்த்தகம் சார்ந்த இந்திய சினிமா என்று நமக்கு நாமே விமர்சிக்கிறோம். ஆனாலும், அப்படிப்பட்ட படங்களைதான் அதிகம் வரவேற்கிறோம். நாம் கண்டுணரும் எதிர்மறையான யதார்த்த சூழலை திரையில் எதிர்கொள்ள அஞ்சுவதும் இதற்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக, இப்போதைய சூழலில் கெத்தாக புல்லட் ஓட்டுவதைக் காட்டியே பெண்கள் சுதந்திரமாகவும் தைரியமாகவும் இருக்கிறார்கள் என்று நம்பும் வகையில்தான் சமூக கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.

கில் பில் (kill Bill) எனும் அமெரிக்க திரைப்படத்தை இந்தியச் சூழலுக்கு ஏற்றார்போல் கதையை மாற்றி அமைந்தால், அதன்
தாக்கம் நிச்சயம் என்எச்10 (NH10) போல் இருக்கலாம். ‘ஆணவக் கொலைகள்’ குறித்த செய்திகளை வாசிக்கும்போது, “எங்கோ
யாருக்கோ நடக்கும் கொடூரம். முட்டாள்கள்” என்று உச்சு கொட்டிவிட்டு நம் வசதியான வாழ்க்கைச் சூழலை நினைத்தோ அல்லது நமது சாதியை நினைத்து பெருமிதம் கொண்டோ கடந்து விடுகிறோம்.

‘என்றாவது இந்தப் பிரச்சினையை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால்..?’ – இப்படிக் கொஞ்சம் யோசித்து பாருங்கள். முகம் குப்பென
வியர்க்கும். அந்த உணர்வோடு நீங்கள் என்எச்10 படம் பார்த்தால், அது உங்களை படாத பாடுபடுத்திவிடும்.

நவதீப் சிங் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா, நீல் பூபாலன் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் ரோடு மூவி வகையிலும் அடங்கும். ‘மனைவியின் பிறந்தநாளை கொண்டாட கிளம்பும் தம்பதிகள் வழியில் சந்திக்கும் எதிர்பாராத பிரச்சினைகள்’ என வருடி கொடுத்தால் போல கதையைச் சொல்லலாம். அல்லது, ‘பிறந்தநாள் கொண்டத்துக்கு கிளம்பும் தம்பதிகள் வழியில் பார்த்த ஆணவக் கொலை, அதன் தொடர்ச்சியாக அந்த ரத்தவெறி கொலை கும்பலிடம் இருந்து எப்படி எதிர்த்துப் போராடி உயிர் பெறுகிறாள்’ என்று சாதி ஆவணக் கொலை பிரச்சினை பற்றி கன்னத்தில் அறைந்தால்போல் சொல்லப்பட்ட படம் என்றும் சொல்லலாம்.

மீரா (அனுஷ்கா சர்மா) – அர்ஜுன் (நீல் பூபன்) தனது நண்பர்களுடன் ஒரு விருந்தில இருக்கும்போது அலுவலக வேலை நிமித்தமாக
தனியாகப் புறப்படுகிறாள். காரில் போகும் வழியில் மர்ம நபர்களால் தாக்கப்படும்போது, அவர்களிடம் இருந்து மயிரிழையில்
தப்பிக்கிறாள். அவளுக்குள் பெரிய பய உணர்ச்சி உருவாகும். டெல்லி போலீஸ் அதிகாரியின் உதவியோடு தற்காப்புக்கு துப்பாக்கி வாங்கி வைத்துக்கொள்வாள். மீரா அதிர்ச்சியில் இருந்து மீளாததால் அவள் பிறந்தநாளை ஒரு சிறப்பு விடுதியில் கொண்டாட முடிவு செய்து அவளை அர்ஜூன் காரில் அழைத்துச் செல்வான். பசிக்கு ஒரு தாபாவில் நிற்கும்போது, ஒரு பெண் தன்னை பிங்கி என்றும், தன்னைக் காப்பாற்றும் படியும் மீராவிடம் கதறுவாள். சிறிது நேரத்தில் ஒரு கும்பல் அந்தப் பெண்ணையும், அவளது இளம் கணவனையும் இழுத்து செல்லுவதைப் பார்த்தும் அர்ஜுன் அவர்களை தட்டி கேட்க முற்படும்போது கும்பலில் ஒருவன் அர்ஜுனை அறைத்துவிடுவான்.

அர்ஜுன் அந்த இடத்தில அறைபட்டதால் அவன் தன்மானம் பாதிக்கபட்டதாய் நினைத்து அந்த கும்பலை தேடி பழிதீர்க்கப் போவான். மீரா எவ்வளவு வேண்டாம் என்று தடுத்தாலும் “நம்மகிட்ட தூப்பாக்கி இருக்கு. அவங்களை நிச்சயம் மிரட்டிவிட்டு அவர்கள் என்னை அடித்தது தவறு என்று புரியவைக்க வேண்டும் பயப்படாதே. வேற ஒண்ணும் இல்லை” என்பான்.

அந்தக் கும்பலை துரத்திப் போன இடத்தில், பிங்கியும் அவளது காதல் கணவனும் கொடூரமான முறையில் அவளது அண்ணன் உள்ளிட்ட உறவினர்களால் கொல்லப்படுவதை மீராவும் அர்ஜுனும் பார்த்து அதிர்ச்சி அடைவர். இவரும் அவர்களிடம் சிக்குவதும், தப்பிப்பதும் என உயிர்ப் போராட்டமாக மாறுகிறது நிலைமை.

பெண்களை ‘ப்ரொட்டாகனிஸ்ட்’ ஆகவும், முக்கியக் கதாபாத்திரங்களாகவும் பதிவு செய்த நல்ல சினிமா படைப்புகள் குறித்த பார்வையே நிழலழகி தொடர்.

ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியாமல் போகும் அர்ஜுனை மீட்டுவிட்டு, தன்னையும் காப்பாற்றிக் கொள்ள தனி ஒருத்தியாக போர்க் களத்தில் இறங்கும் மீராவும், அவளைச் சுற்றி நடக்கும் அதிர்வுகளும் நம் உடம்பில் வியர்வைத் துளிகளை சுரக்கவைக்கும். இதனூடே இந்திய குக்கிராமங்களின் சாதி அரசியல், அதிகாரம் மிக்கவர்களின் கொடூர முகம், காவல்துறையில் அசல் போக்கு, குடும்ப அமைப்புகளின் பெண்களின் இருவேறு அதீதச் சூழல்கள் என பலவும் நம்மை நோக்கி பகிரங்கமாக பாயும்.

அந்தக் கிராமத்தின் இருள் சூழ்ந்த பகுதியானது மீராவுக்கு மட்டுமல்ல; நம்மில் பலருக்கும் புதிதாகவே இருக்கும். அவள் ஓடும்போது நாமும் உடன் ஓடுவம்; அவள் உதவிநாடும் போது நாமும் மூச்சிரைக்க காத்திருப்போம்; அவள் ஏமாற்றப்படும்போது நாமும் அதிர்ச்சி அடைவோம்… ஒரு கட்டத்தில் நாம் சோர்ந்துபோகும்போது அவள் துடித்து எழுவாள். அப்போது நாம் நிமிர்வோம். வன்முறையை ஆயுதமாக்க வேண்டியதன் கட்டாயத்தை உணர்வோம்.

உளவியலில் ஃபைட் ஆர் ஃப்ளைட் (fight or flight) எனும் தியரி உண்டு. அதாவது, இக்கட்டான சூழலில் “ஓடிப் போய்விடு
அல்லது எதிர்த்துப் போரிடு” என்று சொல்லலாம். ஓர் இரவில் தான் சந்திக்க நேர்ந்த அனுபவத்தில் மீரா இந்தத் தியரியை மிகச் சிறப்பாக கையாள்வாள்.

ஒரு த்ரில்லரான ரோடு மூவி என்ற வகையிலும் இந்தப் படத்தை நாம் கண்டு ரசிக்கலாம். ரோடு மூவி பார்ப்பதில் இருக்கும் பிரச்சினை, அதன் பயண களைப்பு நம்மையும் தொற்றும். அந்தக் களைப்புடன் என்எச்10 நம் மனதுக்கு கடத்தும் சமூகச் சுமையும் நம்மை விட்டு அகலுவதற்கு நாட்கள் ஆகும்.

அதேபோல், சமூக அவலத்தை அப்பட்டமாகக் காட்டி, அதற்கு எதிராக வன்முறைப் பாதை ஒன்றையே கையிலெடுக்க வேண்டிய
சூழலின் தேவையையும் உணர்த்தும் சமூக அரசியல் படைப்பாகவும் இந்தப் படத்தை நோக்கலாம். நம் நாட்டில் கவனம் ஈர்த்த ‘மனோஜ் -பாப்லி ஆவணக் கொலை’ (2007) வழக்கின் கொடூரத்தன்மையை அடிப்படையாக வைத்து பிங்கியும் அவள் கணவரும் கொல்லப்படும் காட்சிகளும் பின்னணியும் அமைக்கப்பட்டிருக்கும். நம் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் சாதி ஆணவத்தை சினிமாவில் ஆவணப்படுத்திய விதத்திலும் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

இப்படத்தில் ப்ரொட்டாகனிஸ்டாக ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தியதன் அவசியத்தையும் படம் பார்த்து முடித்தவுடன் நாம்
வெகுவாக விவாதிக்க வேண்டிய இன்னொரு அம்சம். பெண்கள் மென்மையானவர்கள், பூ போன்றவர்கள் என்றெல்லாம் கடிவாளம்
போட்டு வளர்க்கப்படும்போது, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற வகையில் பெண்கள் வேறுவழியின்றி ஆயுதம் ஏந்த வேண்டியச் சூழலை ஆவணக் கொலைகள் போன்ற சமூகக் கொடுமைகள் வித்திடும் என்ற சேதியை என்எச்10 அழுத்தாகச் சொல்வதாகவே பார்க்கிறேன்.

அப்படி வெகுண்டெழுந்த மீரா எனும் நிழலழகிக்கு இணையான நிஜ அழகி ஒருவர் குறித்து பார்த்தும் படித்தும் கவனித்தும் வருகிறேன். உடுமலைப்பேட்டையில் பொதுமக்கள் முன்னிலையில் தன் கண்முன்னே கணவர் கொடூரமாகக் கொல்லப்பட, அதே தாக்குதலில் படுகாயத்துடன் உயிர்தப்பினார் கவுசல்யா சங்கர். சாதி ஆணவக் கொலைக்களத்தால் பாதிக்கப்பட்ட கவுசல்யா இதோ ஓராண்டு கழித்த நிலையில், இப்போது சாதி ஒழிப்புப் போராளியாக உருவெடுத்து புதிய சீற்றமிகு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். மிராவின் சீற்றம் என்பது தற்காப்புத் தொடர்புடையது. ஆனால், கவுசல்யாவின் எழுச்சியை சமூகத்தைக் காக்கவல்ல மன உறுதியாகவே பார்க்கிறேன்.

தொடர்வோம்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.