இடதுசாரிகள்

நக்சல்பாரியின் 50: லீலா மஜூம்தார் – சாருவின் துணைவியார் மட்டுமல்ல!

சி. மதிவாணன்

சி. மதிவாணன்

“என் தாய் லீலா சாரு மஜூம்தாரின் துணைவியார் மட்டுமல்ல“, என்று சொல்கிறார் அவரின் மகன் அபிஜித். அவர் இப்போது CPI ML (Liberatin) கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும் கூட. ஒரு பல்கலைக்கழக பேராசிரியரும் கூட.

“என் தாய் சுதந்திரப் போராட்ட வீரர். என் தாயின் உருவாக்கத்திற்கு என் தாயே காரணம்“ என்கிறார் அபிஜித்.“என் தாயின் வாழ்க்கை துன்பத்தின் வாழ்க்கை. அவர் ஒரு போதும் என் தந்தையையோ, எங்கள் இயக்கத்தையோ பழித்ததில்லை“, என்று கம்யூனிஸ்டுகளின் மாண்பை நினைவு கூர்கிறார்.

சாரு மஜூம்தார் வெறிபிடித்த ஆள் இல்லை. அவர் நிலப்பிரபு ஒருவரின் மகன். ஆனால், அந்த செல்வச் செழிப்பில் கிடைத்த வாழ்க்கையின் காரணமாகக் கிடைத்த அறிவுக்கு நேர்மை உள்ளவராக இருந்தார். நிலப்பிரபு வாழ்க்கையை விட்டொழித்து ஏழைகளின், ஏழை விவசாயிகளின் நலனுக்காகத் தன் வாழ்க்கையை- உயிரை அளித்தார். கம்யூனிஸ்ட் கொள்கையை தன் வாழ்க்கையாகக் கருதி தன் துணைவருடன் துன்பத்தில் வாழ்ந்தவர் லீலா.

சாரு வாழ்ந்த அந்தப் பண்டைய ‘நிலப்பிரபு’ வீட்டில்தான் புகழ்பெற்ற “சாரு மஜூம்தாரின் எட்டு கட்டுரைகள்“ எழுதப்பட்டன. பின்னர், இந்திய கம்யூனிஸ்டு அரசியலைத் தீர்மானிக்கும் ஆவணங்கள் ஆகின.

லீலா 1943ன் வங்கப் பஞ்சத்தின்போது அரசியலில் குதித்தவர். ஐந்து ஆண்டுகள் சிறையில் கழித்தவர். அதன்பின், தெபாக விவசாய இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். நிலப்பிரபுக்கள் விளைச்சலில் பாதியை கேட்கக் கூடாது மாறாக, மூன்றில் ஒரு பகுதியைத்தான் தருவோம் என்று தெபகா விவசாய போராளிகள் போராடினர். தெபகா என்றால் மூன்றில் ஒரு பகுதி என்று பொருள்.
1952 ஜனவரி 9 அன்று சாரு மஜூம்தார் லீலா சென்குப்தாவைத் திருமணம் செய்துகொண்டார். லைலா சென்குப்தாவும் கம்யூனிஸ்டு கட்சியின் முழு நேர ஊழியர்தான். கல்யாணத்திற்குப் பின்பு இருவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட உறுப்பினர்கள் ஆனார்கள்.
தெபகா அரசியல் போராட்டம் சாரு மஜூம்தாரை மட்டுமல்ல, லீலாவையும் செதுக்கி எடுத்தது. ஆனால், துணைவரின் அரசியல் போராட்டத்துக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் குடும்ப பாரத்தைச் சுமக்க முடிவு செய்தார் லைலா. LIC முகவராக சம்பாதித்து தன் குடும்பத்தைக் காப்பாற்றினார். சாரு என்ற மாமனிதர்… மாமனிதர் ஆவதற்காகத் தன்னை எரித்துக்கொண்டார். 68 வயது ஆகும் வரையிலும் அவர் LIC முகவர் என்ற சம்பாத்தியத்தை விடவில்லை.

லீலா மஜூம்தார்

“எங்கள் வீட்டுக்கு போலீஸ் அடிக்கடி வரும். அவர்களும் கூட என் தாய்க்கு மரியாதை செலுத்துவார்கள். என் தாய் அவர்களை வீட்டு வாசலில் நிறுத்தி கொண்டு வந்த துப்பாக்கிக் குண்டுகளின் எண்ணிக்கையைச் சரி பார்ப்பார். இல்லையென்றால், என் தந்தையைச் சுட்டுவிட்டு, குண்டு கணக்குக் காட்டி தப்பித்து விடுவார்கள் என்பார்“, என்று தன் சிறுவயது நினைவுகளைச் சொன்னார்.

“என் தாய் ஒரு கழுகு… கழுகுத் தாய்… அவர் எப்போதும் எங்களை ‘வாழ வழியில்லாமல் போனதே‘ என்று யோசிக்கவிட்டதில்லை. எங்கள் கல்விக்குச் சம்பாதித்துச் செலவு செய்தார். எங்களைப் பாதுகாத்தார். எங்கள் கையில் சில்லறைதான் இருந்தது… ஆனால், நாங்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்தோம்..“, என்று தன் தாய் தங்களுக்கு அளித்த வாழ்க்கையை நினைவு கூர்ந்தார்.
கம்யூனிஸ்டுகளின் சொந்த வாழ்க்கை எப்போதும் பூக்கள் நிறைந்த சொர்க்கமாக இருக்காது. நரகத்தில் வாழ்வதையே சொர்க்கத்தில் வாழ்வதாக கம்யூனிஸ்டுகள் கருதுவர். லீலா.. நரகத்தில் வாழ்ந்தது மட்டுமல்ல.. தன் பிள்ளைகளையும் வளர்த்தெடுத்து துணைவரின் அரசியலுக்கும் துணையாக இருந்தார்.

சாருவின் மகள் அனிதா சொல்வதைக் கேளுங்கள்….
“ஒருநாள் காவல்துறையினர் எங்கள் வீட்டுக்குத் தேடுதல் வேட்டைக்காக வந்தனர்.’அவர்கள் என்னைக் கைது செய்யலாம்… அப்படி நிகழ்ந்தால் அஞ்சாதீர்கள்’, என்று என் தாய் எங்களிடம் சொன்னார். காவல்துறையினர் வந்ததின் நோக்கம் எங்களின் அசையும் சொத்துகளைக் கைப்பற்றுவதுதான். அதன் பின்னர் காவல்துறை தேடுதல் வேட்டைக்காகப் பலமுறை எங்கள் இல்லத்திற்கு வந்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் தேடுதலுக்கான ஆணை இருக்கிறதா என்று அவர்களிடம் எங்கள் தாய் கேட்பார். அப்புறம், கைத்துப்பாக்கியை வெளியே வைத்துவிட்டு உள்ளே வாருங்கள் என்று கட்டாயப்படுத்துவார். (இல்லையென்றால், அவர்களின் துப்பாக்கியை அறைக்குள் வைத்துவிட்டு அப்புறம் அதனைக் ‘கண்டுபிடித்து’ விடுவார்கள்.)“.

இப்படியான வாழ்க்கைதான் லீலாவின் வாழ்க்கை.

சாரு 1969ல் தலைமறைவானார். தன் துணைவரைப் பார்ப்பதற்காக தன் தாய் மேற்கொண்ட பயணங்களை அபிஜித் நினைவுபடுத்திச் சொன்னார். “அது சிரமமான பயணம். கட்சி அலுவலகத்தை விட்டு ரகசியமாக வெளியேறி, பற்பல வீடுகளுக்கு செல்ல வேண்டும். ரயில் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். வாகனம் ஒன்றில் ஏறி, மற்றொன்றுக்கு மாறிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால்தான் பின் தொடரும் போலீசை ஏமாற்ற முடியும்.. எங்கள் தந்தையைக் காக்க முடியும்… என்பதை அறிந்தவர் என் தாய்…“
அபிஜித் தன் தாய் அழுது கண்டதில்லை என்கிறார்…

“என் தாய் முதலில் வெடித்து அழுதது.. 1972ல் என் தந்தை கைது செய்யப்பட்ட போதுதான். எங்களின் அண்டை அயலார் நிதி சேகரித்து எங்களுக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்தனர். லால் பஜார் காவல் நிலையத்தின் மஞ்சள் காமாலை விளக்கு இன்னும் என் நினைவில் இருக்கிறது. அப்பா நலிந்து போய் நாராகக் கிடந்தார். அவருக்கு இதயப் பிரச்சனை இருந்தபோதும், மூச்சடைப்பு இருந்தபோதும் ஆக்சிஜன் சிலிண்டர் எதுவும் அங்கே இல்லை“.

“12 நாள் கழித்து என் தாய்க்கு மிகப் பெரும் சோகம் நேர்ந்தது. என் தந்தை இறந்து போனார். என் தாய் தன் துணைவரின் உடலை சிலிகுரி கொண்டு செல்ல வேண்டும் என்று போராடினார். அது நடக்கவில்லை. கல்கத்தாவில் என் தந்தையின் உடல் மிக ரகசியமாக எரியூட்டப்பட்டது. அவருக்கு இந்து சடங்குகளைச் செய்வதை என் தாய் எதிர்த்தார். ஆனால், அது பலன் தரவில்லை. அதிர்ச்சியில் என் சகோதரி பக்கவாதத்துக்கு ஆளானார். அவர் திரும்பவும் பழைய நிலையில் நடக்க மூன்று மாதங்கள் ஆகின“. அபிஜித் மற்றும் அனிதாவின் நினைவுகளில் இருந்துதான் லீலா மஜூம்தார் என்ற போராளியின் கதையை நாம் படிக்க முடிகிறது. சமூகத்தின் குப்பை பெண்கள் கூட அரியணை ஏற, புரட்சிக்காக அடையாளமற்றுப் போன ஓர் பெண் கம்யூனிஸ்ட் எங்களின் தோழர் லீலா மஜூம்தார்.

(தோழர் லீலாவின் படம் கிடைக்கவில்லை. படத்தில் இருப்பது அபிஜித், அவரின் சகோதரிகள் அனிதா – அமர்ந்திருப்பவர், மற்றும் மதுமிதா)

சி. மதிவாணன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.