சினிமா

நிழலழகி – 9: நம் சமூகத்துக்குத் தேவை ‘ஆர்ச்சி’கள்!

அதுவரை காதலுக்காகவும், காதலனுக்காகவும் எதையும் செய்துவந்த அர்ச்சனா தன்னுடைய சுயமரியாதை பாதிக்கப்பட்டதும், காதல் கணவனையும் தூக்கி எறியத் தயங்கமாட்டாள்.
கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

Sairat | Marathi | Nagraj Manjule | 2016

எண்பது, தொண்ணூறுகளில் இந்திய சினிமா அதிகமாய் அரைத்த கதை – ‘பணக்கார நாயகி, ஏழை நாயகன், அவர்கள் காதலை எதிர்க்கும் பெற்றோர்… சண்டை, காதல், பாடல்களுக்குப் பின் இறுதியில் சுபம். ஆனால், இந்த மாதிரி கதைகள் நமக்கு எப்போதும் சலித்தது இல்லை. காரணம், மனித வாழ்க்கை பிறப்பு, இறப்பு என்ற கோட்பாடுக்குள் இருந்தாலும், ஒவ்வொருவருடைய வாழக்கையிலும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவில் வர்த்தக சினிமா இந்த வழக்கமான பாணியில் இருந்து கொஞ்சம் வெளிவந்து, வெவ்வேறு கோணத்தில் கதை அமைக்க துவங்கியுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது.

மராத்திய மொழியில் 2016 ஆம் ஆண்டு நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் ரிங்கு ராஜகுரு, ஆகாஷ்  தொஸ்கர் புதுமுகமாய் நடித்து மாநிலம் தாண்டி இந்தியா முழுவதும் பெரும் வசூலைக் குவித்த படம் ‘சைராட்’. உயர் சாதி பணக்கார வீட்டுப் பெண், அதே கிராமத்தில் மீனவ தொழில்புரியும் ஏழைக் குடும்பத்து பையனை காதலிக்கிறாள். இவர்கள் காதல் வீட்டிற்கு தெரியவருகிறது. பெண் வீட்டாரிடம் இருந்து தப்பித்துச் சென்று திருமணம் செய்து எல்லா கஷ்டங்களையும் கடந்த பிறகு வாழ்க்கை இனிமையாய் இருக்கும்போதும் விடாது துரத்துகிறது சாதியத் தாக்குதல்.

பாடல்கள், ட்ரைலர் வெளிவந்தவுடன் ‘காதல்’ படத்தை அதிகம் நினைவுபடுத்தினாலும், ‘சைராட்’ தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கியது. மொழி தாண்டி மாநிலம் தாண்டி படம் ரசிகர்களை உருவாக்கியதற்கு கதைக்களம் பொதுவாய் அமைந்ததும், இயலபாய் அமைந்த கதையோட்டமும், கதாபாத்திரங்களும்தான் காரணம்.

முதல் படத்திலேயே தனக்கு என ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிய ரிங்கு ராஜகுரு என்னையும் வசீகரித்தார். அர்ச்சனா என்ற ஆர்ச்சி கதாபாத்திரத்தில், முதல் படம் என்ற அடையாளம் சிறிதும் இல்லாமல் தன்னுடைய இயல்பான நடிப்பாலும் அழகாலும் கதையை அலங்கரித்த விதம் வியப்பு. பணக்கார வீட்டு அழகுப் பெண் கொஞ்சம் திமிரு என்று காட்ட, கிணத்தில் குளிக்கும் ஆண்களை விரட்டி விட்டு தோழிகளுடன் குளிப்பது, கொஞ்சம் தைரியம் என்று காட்ட புல்லட், டிராக்டர் ஓட்டுவது என இன்றும் பெண்கள் கொஞ்சம் தயங்கும் விஷயங்களை செய்யவைத்து எளிமையாய் நம் மனதில் அறிமுகம் கொடுப்பதைப் பார்த்தபோது பெண்ணியப் பேச்சையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்ச்சியை ரசிக்கத்தான் தோன்றியது.

ஏற்கெனவே அர்ச்சனா மீது காதல் வயப்பட்டுள்ள பயாஸ் (ஆகாஷ் தொஸ்கர்) படிப்பு, கவிதை, புத்தக வாசிப்பு போன்றவற்றில் ஆர்வம் அதிகம். இருவருமே ஒரே வகுப்பு. தன்னை பயாஸ் காதலிப்பதையும், அதை அவன் சொல்ல தயங்குவதையும் தெரிந்து அதை ரசிப்பாள். பயாஸை முழுவதுமாய் காதலிக்கும் அர்ச்சனா யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அவன் வெட்கப்படும் அளவிற்கு அவ்வளவு தீவிரமாய் அவனைக் காதலிப்பாள். பருவ வயது காதலின் எல்லா அழகியலும் நிரம்பியது அந்தக் காதல்.

தன்னுடைய அண்ணன் வகுப்பறையில் ஆசிரியரை அடித்ததற்கு வீட்டிற்கு வந்து ‘அவன் செய்தது தவறு’ என்று கண்டிப்பாள். அவர்கள் செல்வந்தராக இருந்தாலும் ஆசிரியருக்கு மரியாதையை கொடுக்கத் தெரிய வேண்டும் என்பாள். பயாஸ் தன்னுடைய நண்பர்களை அறிமுகப்படுத்தும்போது, மற்றவர்களைப் போலவே ஒருவனை ‘நொண்டி’ என்றே அவனை அறிமுகப்படுத்துவான். அர்ச்சனா, ‘அவருக்கு பெயர் இல்லையா?’ என்பாள். ‘பிரதீப் அவர் பெயர் என்றால், இனி அவரை எல்லாரும் பிரதீப் என்றுதான் கூப்பிட வேண்டும்’ என்பாள். காதலனின் நண்பர்களையும் நேசிக்கத் தெரிந்தவள் மட்டுமல்ல, மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்ப்பவள் என்பதையும் அவள் அழுத்தமாக உணரவைப்பாள்.

ஒரு கட்டத்தில் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவர, வீட்டை விட்டு இருவரும் நண்பர்கள் உதவியுடன் ஓடுவர். எதிர்பாராத விதமாய் அர்ச்சனா வீட்டில் அவளை தேடும் கும்பலிடம் மாட்டிகொள்வர். அப்போது, பயாஸும் அவன் நண்பர்களும் தன்னைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் அப்பா புகார் கொடுத்ததை அறிந்து அலறுவாள். காவல்நிலையத்தில் பெரும் கூச்சல் இட்டு, அப்பாவை எதிர்த்து பயாஸும் அவனது நண்பர்களும் விடுவிக்கப்படும் வரை இங்கே இருந்து வரமாட்டேன் என பிடிவாதம் பிடிப்பாள். அவர்களை விடுதலை செய்ய அவள் எடுக்கும் முயற்சிகள் நம்மை முழுமையாக ஈர்க்கும்.

பயாஸை தன் அப்பாவின் அடியாட்கள் அடிப்பதை பார்த்ததும், அவர்களிடம் இருந்து தூப்பாக்கி முனையில் தன் காதலனை மீட்டு தப்பிக்கும் இடத்தில் அர்ச்சனா ப்ரொட்டாகனிஸ்டாக கதையை தூக்கி நிறுத்துவாள். காதலனைக் காப்பாற்றுவதில் அவள் எடுத்துக்கொள்ளும் சிரத்தை அவள் காதலின் தீவிரத்தை வெளிப்படுத்தும்.

ஒரு வழியாகத் தப்பித்து ஆந்திரா சென்று எங்குப் போவது, எங்கே தங்குவது என தெரியாமல் தெருக்களில் இரவையும் பகலையும் கழித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு கும்பல் பெண்வாசனை பிடித்து தாக்க வரும்போது அந்தக் குடிசைப் பகுதியில் இருக்கும் ஒரு பெண் இவர்களை காப்பாற்றி அடைக்கலம் தருவாள். இவர்கள் கதையை கேட்டவள் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியில் தங்க இடம் கொடுப்பாள்.

காதலும் காதல் சார்ந்த படங்களும் மட்டுமே காதல் என்று கற்பனை செய்துகொண்டு காதல் திருமணம் செய்துகொண்டவர்களில் நானும் ஒருத்தி. திருமணம் முடிந்தவுடன் முதல் ஒரு வாரம் சென்னையில் கணவரின் உறவினர் வீட்டு விருந்து, ஷாப்பிங் என்று உல்லாசமாய் இருந்தது. மறுவாரம் வீட்டிற்கு வந்தவுடன் வேலைக்கு கிளம்பிய கணவரிடம் ‘என்னை எப்படி தனியா வீட்டுல விட்டுட்டு போக உங்களுக்கு மனசு வருது?’ என்று கண்ணை கசக்கிக்கொண்டு கேட்டேன். ‘அட உன் கூட வீட்டுல உட்கார்ந்துகிட்டு இருந்தா எப்படி? சம்பாதிக்க போகவேண்டாமா?’ என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றார். இரவு வரை அவருக்காக காத்திருந்த நான், அவர் வந்தவுடன் ‘எங்க அம்மா வீட்டுக்குப் போறேன், நீங்க என்னை காதலிக்கவே இல்லை. இப்படி விட்டுட்டு போய்விட்டீங்க’ என்று ஒரே அழுகை. பின் மெல்ல மெல்ல காதல் வேறு, திருமணம் வேறு என்று புரிந்துகொண்டு சந்தோஷமாய் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிக்கொண்டேன்.

அர்ச்சனாவுக்கு நிகழ்ந்ததைப் பார்க்கும்போது, என்னுடைய அனுபவம் எளிதாகக் கடக்கக் கூடியது என்பதை உணர்ந்தேன். அர்ச்சனாவுக்கு குடிசைப் பகுதி வாழ்க்கை கொஞ்சமும் பழக்கம் இல்லை என்றாலும், வேறு வழி இல்லாமல் அங்கு இருக்க வேண்டிய நிலை. மறுநாள் முதல் பயாஸ் பிழைப்பைத் தேடி புறப்படுவதையும், தன்னை தனிமையில் விட்டுச் செல்வதையும் ஏற்க முடியாது தவிப்பாள் அர்ச்சனா.
கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டு நினைப்பு, அவர்கள் பாசத்தை உதறி வந்தது தவறோ என்ற குற்ற உணர்வு மேலிடும். பொதுவாய் ஆண்களிடம் ஒரு குணம் உண்டு. காதலிக்கும் காலத்தில் காதலிக்காக எதையும் செய்வர். ஆனால், அவள் மனைவி ஆனவுடன் என்னவள் என்ற அலட்சியம் அதிகம் வந்து, காதலை தொடர்ச்சியாக வெளிப்படுத்தத் தவறிவிடுவர். பயாஸும் அதே இயல்பான கணவனாக மாறி அர்ச்சனாவை பொறுப்பான மனைவியாய் இருக்க எதிர்பார்க்கும்போது, அர்ச்சனா தானும் வேலைக்குப் போக ஆரம்பிப்பாள்.

அர்ச்சனா வேளைக்குப் போக ஆரம்பித்ததும் பயாஸுக்கு அவள் நடவடிக்கைகளில் இருக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவளை சந்தேகப்படத் தொடங்குவான். அப்போது, பயாஸை வேண்டாம் என்று தூக்கி எரிந்துவிட்டு போவாள். அதுவரை காதலுக்காகவும், காதலனுக்காகவும் எதையும் செய்துவந்த அர்ச்சனா தன்னுடைய சுயமரியாதை பாதிக்கப்பட்டதும், காதல் கணவனையும் தூக்கி எறியத் தயங்கமாட்டாள். இருவரும் அந்தக் கொஞ்ச நேர பிரிவில் ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் காதலை புரிந்துகொண்ட நேரத்தில் அர்ச்சனா மறுபடியும் பயாஸை தேடி வீட்டிற்கு வந்து விடுவாள். ஆம், அத்தனை சுயமரியாதையும் காதல் முன்னால் சமாதி ஆகிவிடும்.

இருவரும் முறைப்படி பதிவு திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக அடுத்தடுத்த படியில் துள்ளிக் குதித்து கொண்டாடி வருடங்கள் உருளும். ஆனால், தீரா சாதி வெறியின் துரத்தலின் நிலை என்ன ஆனது?

இந்தியாவில் ஆங்காங்கே நீங்காது விரவி இருக்கும் சாதி ஆவணத்தின் விளைவுகளை அப்பட்டமாகவும் அழுத்தமாகவும் காட்டியிருக்கிறது சைராட். அதில், சமூகப் பிரச்சனைகளைத் தாண்டி, சுதந்திரமும் சுயமரியாதையும் மிக்க ஒரு முழுமையான பெண்ணை நமக்கு ஆர்ச்சி மூலம் அடையாளம் காண வழிவகுக்கப்பட்டிருக்கும். நம் நாட்டில் ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்க வேண்டிய பண்புகள் நிரம்பிய நிழலழகிதான் ஆர்ச்சி எனும் அர்ச்சனா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: