வரலாறு

தமிழக வரலாற்றியல் ஆய்வுகளில் பொ. வேல்சாமி

பாவெல் தருமபுரி

சமீப காலமாக தங்களை மார்க்ஸிய அறிவு ஜீவிகள் என அறிமுகப் படுத்திக் கொள்ளும் சிலர் தமிழக வரலாற்றியலில் மார்க்ஸிய வழியிலான ஆய்வு க. கைலாசபதி நா.வா மற்றும் கோ.கேசவன் தலைமுறையோடு நின்றுபோய் விட்டதாக தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்கள். அவர்களின் கூற்றுகளில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும் மறைந்த தேவ. பேரின்பன் தொடங்கி வெ. பெருமாள்சாமி, சி. மௌனகுரு, மே.து. ராசுகுமார், அ. பத்மாவதி என ஆய்வு முயற்சிகளின் பட்டியல் நீளமானது.

இந்த பட்டியலில் ரொம்பவுமே வித்யாசமானவர் தமிழ் அறிஞர், ஆய்வாளர் திரு. பொ. வேல்சாமி அவர்கள். எந்த இடதுசாரி இயக்கங்களிலும் இல்லாத இவரின் தமிழக வரலாற்றியல் தொடர்பான பார்வை மிகவும் முக்கியமானது. தன்னை ஓர் மார்க்ஸிய வாதியாக அவர் அறிவித்துக் கொள்ளாவிட்டாலுங்கூட அவர் தனது ஆய்வுக்கு வழிகாட்டிகளாகக் கொள்ளும் டி.டி.கோசாம்பி, சட்டோபாத்யாய, க. கைலாசபதி, நாவா.போன்றோரின் செல்வாக்கினால் அவர் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விடுகிறார்.

சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கவிதாசரணில் வெளிவந்த கோயில்- நிலம் – சாதி கட்டுரைத் தொடரின் மூலம்தான் பொ.வே எனக்கு பரிச்சயமானார். நிலப் பிரபுத்துவத்துக்கும் சாதிக்கும் இடையிலான உறவு தொடர்பாக சில இடதுசாரி இயக்கங்கள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அச் சிந்தனைக்கு ஆட்பட்ட நான் இந்த கட்டுரைத் தொடரை பெரிதும் விரும்பினேன்.

  1. சங்ககாலத்தில் மருத நிலத்தில் உபரி தோன்றியது.

  2. உபரியை அனுபவிக்கும் பொருட்டும் உபரிக்கான மூலதனத்தை அடையும் பொருட்டும் சனாதன வருணமுறை நடைமுறைப் படுத்தப் பட்டது.

  3. களப்பிரர் கால எழுச்சிக்கு ‘வம்ப வேந்தர்’ களின் நிலக் கொடைகளும், பழங்குடிகளின் மீதான அவர்களின் அடக்கு முறைகளுமே காரணம்.

  4. களப்பிரர் வீழ்ச்சிக்கு அவர்களின் சமணம் முதலான அவைதிக மதங்கள் யாவும் பிரதானமான நிலவுடைமை உற்பத்தியோடு தொடர்புவைக்காமல் வைசிய, பழங்குடி மக்களை தனது அடிப்படையாகக் கொண்டதே காரணம்.

  5. நிலமான்யத்துக்கும் சாதிக்குமான உறவு நேரடியானது. கோயில் எனும் நிறுவனம் அதைப் பாதுகாக்கும் அரண்.

  • என விரிவானதோர் வசிப்புத் தேவையை அந்தக் கட்டுரைகள் உருவாக்கின.

எங்கிருந்து தொடங்குவது? எதற்காகக் தொடங்குவது? இரண்டு கேள்விகள்தான் நமது வரலாறு தொடர்பான ஆய்வுக்கு அடிப்படை. டி.டி. காேசாம்பி பின் வருமாறு சொல்வார்….

“ஒவ்வொரு வரலாற்றாளரும் அவர்தன் பணிக்கு- உட்கிடையாகவோ வெளிப்படையாகவோ- அடிப்படையாகக் கொள்ளும் ஒரு கோட்பாடு உள்ளது”

எனச் சொல்லும் அவர் மேலும் தொடர்கிறார் …

” எந்த ஒரு காலகட்டத்திலும் வெளித் தோற்றத்தில் எத்தனை அதி பழைய வடிவங்கள் உயிர் பிழைத்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட முறையானது வீரியம் மிக்கதாகவும், உற்பத்தியை பெரிதும் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாகவும், நாட்டின் பெரும்பான்மைக்கு தவிர்க்க இயலாமல் பரவக் கூடியதாக இருந்ததோ அதைத் தேர்வு செய்வதே தேவை”

-என ஆய்வுப்பணிக்கான அடிப்படையை விளக்குவார். பொ.வே வின் ஆய்வில் இத்தகு அணுகுமுறை உட்கிடையாக இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

கோயில்- நிலம்- சாதி பொற்காலங்களும் இருண்ட காலங்களும் பொய்யும் வழுவும் என்று தொடரும் அவரின் மூன்று நூல்களிலும் தமிழக வரலாற்றியல் தொடர்பாக வந்த அவரின் கட்டுரைகள் ஒரு தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் கொண்டு விளங்குகின்றன. நடப்பு தொடர்பாகவும், சில ஆளுமைகள் தொடர்பாகவும் அவர் எழுதியிருந்தாலும் என்னைப் பொருத்தமட்டில் அவரின் தமிழக வரலாற்றியல் தொடர்பான ஆய்வுகளே மிகுந்த முக்கியத்துவம் பெற்றவை. ஜெ.மோ போன்றவர்கள் இவரின் கோவில்- நிலம்- சாதி தொடர்பான கட்டுரைகளுக்கு சாதிய சாயம் பூச விளைவது அபத்தமானது.

” இந்தியா என்பது ஒன்றுடன் ஒன்று போரிடும் மதங்களின் நாடு” எனச் சாெல்லும் அவர் ” பார்ப்பனியம்- சைவம்- வைனவம் முதலான மதங்கள் ஒரு பக்கமாகவும் பௌத்தம் – சமணம்- ஆஜீவகம் என்பதெல்லாம் ஒரு பக்கமாகவும் நின்று போரிட்டுக் கொண்ட வரலாறாகவே இந்தியத் துணைக் கண்டத்தின் வறலாறு அனைத்தும் அமைந்துள்ளன” என்று விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறார்.

பொய்யும் வழவும் நூலில் வரும் ‘அண்டப்புழுகும அறிவியல் உண்மையும் ‘ எனும் கட்டுரையில் மதப் பெருமைகளின் அடிப்படையில் இருந்து வரலாற்றை அனுகுவதில் உள்ள அபத்தங்களையும், ஆபத்துகளையும் தெளிவாக பதியவைக்கும் அவர் இன்றைய தமிழக ஆய்வுலகின் போக்குக்கு ஒரு முன்னுரை தந்து விடுகிறார். மற்றொரு ‘பார்ப்பனியம் மைனஸ் பார்ப்பனர் = சைவ சித்தாந்தம்’ என்னும் சிறப்புமிகுந்த கட்டுரையில் சைவ சித்தாந்தம் என்பது தமிழர்களின் தனித்த தத்துவம் அல்ல என்றும் அதன் அடிப்படை வேர்கள் பார்ப்பனியத்தில் உள்ளது என்று கூறும் அவர் அது நிலவுடைமை சூத்திரர்களின் ஆதிக்கத்தை பாதுககாக்கும் நோக்கில் பரப்பப் பட்டது என சரியாகவே விளக்குகிறார்.

‘உற்பத்திக் கருவிகள் அனுமதிப்பதை விடவும் கூடுதலாக முன்னேறிய சமுதாய அமைப்பு்இருக்க முடியாது’ என்பதற்கு ஒப்ப சங்ககாலம் தொடங்கி சோழப் பேரரசின் வீழ்ச்சி வரையிலும் பொருளியல் அடிப்படையிலான ஒரு யதார்த்தக் கண்ணோட்டம் அவர் ஆய்வுகளில் இழையோடி இருக்கிறது.

இருந்தாலும் அவரின் வைதிகம் அவைதிகம் எனும் பாகுபாட்டை வரலாற்றை புரிந்துகொள்வதற்கு பயன் படுகிறது என்பதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன். அதையே சமகால நடப்புகளுக்கும் அளவுகோலாக்குவதில் ( அவைதிகப் பாரம் பரியத்தில் திராவிட இயக்கம்) எனக்கு உடன்பாடில்லை. ” கடவுளையும் தத்துவங்களையும் கூறித்தான் ஆதீனங்களாக வேண்டிய அவசியம் இல்லை. கடவுள் மறுப்பையும் பகுத்தறிவையும் சாதி ஒழிப்பையும் கூறி ஆதீனங்களானவர்களைப் பார்க்கிறோம்” என்ற அவரின் யதார்த்தத்தில்தான் நமக்கு உடன்பாடு.

களப்பிரர்களின் எழுச்சியும், நில தானங்களை அவர்கள் இரத்து செய்ததுமான நிகழ்வுக்கு பிற்பாடும், நில பரிபாலனங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாலும் பிராமணர்கள் நிலங்களை விற்றதையும் நிலம் தொடர்பான நாட்டம் குறைந்ததையும் சுட்டிக்காட்டும் அவர் இத்தகு போக்கு நிலஉடைமை முறையில் முக்தியத்துவம் வாய்ந்த ஒரு மாற்றம் நிகழ்ந்ததை கூடுதலான வார்த்தைகளில் சொல்ல வேண்டும்.

இந்த மாற்றத்தின் விளைவை மே.து. ரா அவர்கள் தனது நூலான ‘சோழர்கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளியலில் ‘ இப்படிச் சொல்வார்…”அன்றைய கோயில் நிலவுரிமைப் பிரிவினர்களுக்காகவே இருந்தது என்பதால் இறைமைப் பணிகளில் ஈடுபட்டிருந்த பிராமணர்களுக்கான பயன்கள் கூட அந்த உடைமைப் பிரிவினரின் வாழ்விலும், வளர்ச்சியிலுமே நிலை பெற்றிருந்தன” (பக். 127)

கடந்துபோன சுமார் கடைசி பத்து நூற்றாண்டு காலமாக ‘நிலவுடைமை’ எனும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு சாணிப்பாலும் சவுக்கடியுமாக தமிழக மக்களை வாட்டி வதைத்த இந்த சூத்திர நிலவுடைமை வர்க்கம் இன்றைக்கு பார்பனியர்கள் பின்னால் மறைந்துகொள்ள முயற்சிப்பதும், பழியை பார்ப்பனர்களின் மேல் போட எத்தனிப்பதுமான முயற்ச்சிகள் அம்பலப் படுத்தப் படவேண்டிய ஒன்று.

இறுதியாக தமிழக ஆய்வுலகின் பெரும் பலவீனம் ஆழமாக சில தனித் தனி கட்டுரைகளை நாம் பெற்றிருந்தாலும் (பேரரசும் பெருந்தத்துமும் போல) உடமை வர்க்கம் தோற்றம் தொடங்கி அதன் படி நிலைகளை சொல்லும் ஒரு முழுமையான ஆய்வு நம்மிடம் இல்லாததுதான். அத்தகு பெரும் பணியினை திரு. பொ.வே போன்ற ஆளுமைகள் தான் செய்ய இயலும். அதை அவரிடம் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் ‘நிகழ்காலப் பிரச்சனைகளுக்கு தீர்வுகான கடந்த காலங்களில் இருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது’.

 பாவெல், வழக்கறிஞர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: